

மது, போதைப் பொருள் பழக்கங் கள் இன்று, நேற்று வந்தவை அல்ல; மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே அவை இருக்கின்றன. இருப்பினும், அந்தக் காலத்தில் ஒரு வரம்புக்குள் இருந்த போதைப் பழக்கம் பெருகிவரும் மேலை நாட்டு நாகரிக மோகம், நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் மிக வேகமாகப் பரவி இன்றைய இளைய தலைமுறையினரிடம் வேரூன்றி நிற்கிறது.
இளமைப் பருவம் புதிய விஷயங்களை ஆரம்பிப்பதற்கும் பரிசோதனை செய்து பார்ப்பதற்கும் ஏற்ற காலம். தன் இளமைக் காலத்தை நண்பர்களோடு சேர்ந்து விதவித மாக அனுபவிக்க வேண்டும் என்ற அதீத ஆசை ஒவ்வொரு இளைஞனையும் திசை தெரியா பறவையைப் போல அலைக் கழிக்கிறது. மது, போதைப் பொருள்களின் பயன்பாடும், அவற்றிற்கு அடிமையாவதும், அதனால் ஏற்படும் வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணம் இதுவே. திடகாத்திரமாக, ஆரோக்கியமாக, ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கு மாறாகப் போதைப் பழக்கமும் தீய நடத்தைகளும் தடையாக இருக்கும் என்பதைப் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் உணர்வதில்லை.
ஆய்வுகள் சொல்வதென்ன? - ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் – குற்றங்களுக்கான 2018 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் அளவு வயதானவர்களைவிட அதிகமாக உள்ளது. பெரும்பாலான ஆராய்ச்சிகள் போதைப்பொருள் பயன்பாடு தொடங்கும் வயது 12-17 எனவும், 18-25 வயதுடைய இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உச்சநிலையில் இருக்கிறது எனவும் கூறுகின்றன. புகழ்பெற்ற மருத்துவ இதழ்களில் ஒன்றான லான்செட்டின் ஆய்வு இந்தியாவில் 8 கோடி ஆண்களும், 54 லட்சம் பெண்களும் மது அருந்துகிறார்கள் என்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் ஆண்கள், பெண்கள் மத்தியில் மது அருந்தும் போக்கு அதிகரித்துள்ளதை இது உணர்த்துகிறது.
போதைப் பழக்கம் ஒரு நோயா? - அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் அடிக்ஷன் மெடிசின் போதைக்கு அடிமையாவதை நாள்பட்ட நோய் என்கிறது. மது, போதைப் பொருளுக்கு அடிமையாவதை மனநலக் கோளாறுகள் என வரையறுக்கிறது மனநலக் கோளாறுகளின் நோயறிதல், புள்ளியியல் கையேட்டின் சமீபத்திய பதிப்பு (DSM-5).
மது, போதைப்பொருள் பழக்கம் ஒருவரின், உடல், மனம், குடும்பம், வேலை, சமூகம் உள்ளிட்டவற்றை வெகுவாகப் பாதித்து, அதிலிருந்து மீள முடியாமல் கட்டிப்போடும். இப்பழக்கம் ஒரு நபரின் மூளையையும் நடத்தையையும் பாதித்துப் பல நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. நண்பர்களுக்கு மத்தியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மிக வேகமாகப் பரவும் ஒரு தொற்றுநோய்.
அடிமையானவர்கள் யார்? -
ஆரம்ப நிலையில் சிறிய அளவில் பயன்படுத்தப்படும் மது, போதைப்பொருள் நாளடைவில் அடிக்கடி அல்லது தினமும் பயன்படுத்தப்படும் நிலைக்கு மெல்லமெல்ல உயரும். எல்லையில்லா மகிழ்ச்சி அளிப்பதான தோற்றத்தை ஏற்படுத்தும் அது, சில நேரம் அவற்றை எடுக்காதபொழுது உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதை எடுக்க வேண்டும் என்கிற வலுவான இச்சை அல்லது கட்டாய உணர்வு தோன்றும். அத்தகைய உணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்களும், பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்படுபவர்களே போதைக்கு அடிமையானவர்கள்.
பயன்படுத்தப்படுபவை: நம் நாட்டில் மது, கஞ்சா, பீடி, சிகெரெட், குட்கா, பிரவுன் சுகர் எனப்படும் ஹெராயின், கோகெய்ன், ஓபியாய்டு வலிநிவாரணிகள் போன்றவை பயன்பாட்டில் உள்ளன. சில இளைஞர்கள் போதைக்காக விநோதமான முறைகளையும் கையாளுகிறார்கள். பெயின்ட், இருமல் மருந்து, நெயில் பாலிஷ், ஹேண்ட் சானிடைசர்கள், பெட்ரோல், தட்டச்சு அழிப்பான்கள் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் கொல்கத்தாவில் போதைக்காக சில மாணவர்கள் பிளவர்டு (Flavored) ஆணுறை களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள்:
l பயன்படுத்திப் பார்க்கலாம் என்கிற ஆர்வம்
l நண்பர்களின் நிர்ப்பந்தம்
l தொடர் தோல்விகளால் ஏற்படும் விரக்தி
l சுலபமாகப் போதைப் பொருள் கிடைக்கும் சாத்தியம்
l குடும்பப் பிரச்சினைகள்
l காதல் தோல்வி
l தேர்வில் தோல்வி
l சரியான வேலை கிடைக்காத விரக்தி
l வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், நெருக்கடி களால் ஏற்படும் மனஅழுத்தம்
போதை பின்விளைவுகள்: மது, போதைக்கு அடிமையாதல் சம்பந்தப்பட்ட தனிநபரின் உடல், மனம், வேலை, பொருளாதாரம் ஆகியவற்றை மட்டுமல்லாமல்; அவர்களின் குடும்பத்தையும் சமூகத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. பால்வினை நோய்கள், எச்.ஐ.வி. தொற்று, ஈரல் கோளாறுகள், மஞ்சள் காமாலை, தூக்க மின்மை, பதற்றம், மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள், மனவெழுச்சி நோய், மனச்சிதைவு நோய் போன்றவை ஏற்படலாம். குழு மோதல் தாக்குதல்கள், சாலை விபத்துக்கள், மணவாழ்க்கை பிரச்சினைகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் ஆகியவற்றுக்கும் அது வழிவகுக்கும்.
மீள முடியுமா? - ஒவ்வொரு போதைப் பொருளும் பயன்பாட்டின் அளவிற்கேற்ப ஒவ்வொரு விதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஒரு குடிநோயாளியால் முழுமையாக மதுப் பயன்பாட்டை நிறுத்த முடியுமே தவிர, தினம் பயன்படுத்திவந்த அளவை குறைத்துப் பயன் படுத்துவது சாத்தியமில்லை. இருப்பினும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனதுவைத்தால் அப்பழக்கத்திலிருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். நாள்பட்ட போதைப் பழக்கத்தில் ஈடுபட்ட வர்கள் தக்க மருத்துவ கண்காணிப்பு, ஆலோசனை இல்லாமல் திடீரென நிறுத்தக் கூடாது. அப்படிச் செய்யும்பொழுது அவரின் உடல்நிலை, மனநிலை வெகுவாக பாதிக்கப்படும். கை, கால் நடுக்கம், தலைவலி, படபடப்பு, பயம், நாக்கு வறட்சி, குமட்டல், வாந்தி, சோர்வு, எளிதில் எரிச்சலடைதல், பசியின்மை, தூக்கமின்மை எனப் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு மாயத்தோற்றம், மாய ஒலி, வலிப்பு தற்காலிக மாக ஏற்படலாம். ஆகவே மனநல மருத்துவர், மனநல சமூகப் பணியாளர், உளவியலாளர், மனநல செவிலியர் அடங்கிய மனநல மருத்துவ குழுவினரைச் சந்தித்து முறையான மருத்துவம், தனிநபர் ஆலோசனை, குடும்ப ஆலோசனை, குழு வழியிலான சிகிச்சை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது போதைப் பழக்கத்திலிருந்து நிச்சயமாக மீண்டு வர முடியும். - ப. சந்திரசேகர் கட்டுரையாளர், உளநோயியல் துறை உதவிப் பேராசிரியர் , pjcsekar@gmail.com