சந்தேகம் சரியா 10: பல்லி விழுந்த உணவு விஷமா?

சந்தேகம் சரியா 10: பல்லி விழுந்த உணவு விஷமா?
Updated on
2 min read

பல்லி விழுந்த பால் அல்லது உணவை உட்கொண்டால் அது விஷமாகிவிடும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மையில்லை. பல்லிகளில் ஒரு சில இனங்களே விஷமுள்ளவை. நம் வீடுகளில் உலவுகிற பல்லிகளுக்குத் துளியும் விஷமில்லை. இருந்தாலும் இவற்றின் உடலில் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாக்கள் இருக்கச் சாத்தியம் உண்டு. பல்லி விழுந்த உணவில் இவை கலந்து, அந்த உணவை நஞ்சாக்கிவிடலாம். அப்போது இந்தக் கிருமிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. என்றாலும், இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து வளர்ந்து, அறிகுறிகள் தெரிய ஒரு வாரம் ஆகும்.

பய வாந்தி

அப்படியானால், “பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் உடனே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே! எப்படி?” என்றுதானே கேட்கிறீர்கள்?

இவை பெரும்பாலும் பயத்தாலும், பதற்றத்தாலும் ஏற்படுகின்றன. பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும்வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்து கிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்குப் பயம் தொற்றும்.

“ஐயோ, பல்லி விஷமாச்சே..” என்று மனம் பதறும். “உடலுக்கு ஏதாவது கேடு செய்துவிடுமோ” என்று பீதி கிளம்பும். இந்த மனரீதியிலான அழுத்தத்தின் விளைவாகத்தான் வாந்தியும் மயக்கமும் வருகின்றன. அதிலும் பள்ளிகளிலும் விடுதிகளிலும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பயந்து மொத்தக் குழந்தைகளும் வாந்தி எடுப்பார்கள்.

நேரடி அனுபவம்

இந்த இடத்தில் என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக நான் பணிபுரிந்த காலம். ஒரு சிறுவர் பள்ளியில் மதியச் சாப்பாட்டில் பல்லி விழுந்துவிட்டதாகவும் அதைச் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுப்பதாகவும் அழைத்துவந்திருந்தனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்த பிறகு, ஆசிரியையிடம் விசாரித்தேன்.

“மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து, குழந்தைகள் வாந்தி எடுத்தார்கள்?” என்று கேட்டேன். “ஒரு மணி நேரம் கழித்து” என்றவர், “எல்லாக் குழந்தைகளும் உணவைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பாத்திரத்தைத் தேய்க்க வந்த ஆயாதான், பல்லி விழுந்து இறந்த செய்தியைச் சொன்னார்கள். இந்தச் செய்தி குழந்தைகளுக்கு எட்டியதும்தான் ஒவ்வொரு குழந்தையாக வாந்தி எடுக்க ஆரம்பித்தது” என்றார்.

“மதிய உணவைச் சாப்பிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் வாந்தி வந்ததா?” எனக் கேட்டேன். “இல்லை, கடைசியாகச் சாப்பிட்ட மாணவன் மட்டும் வாந்தி எடுக்கவில்லை” என்றார். “ஏன்?” எனக் கேட்டேன். “அவன் சாப்பிட்டதும் வீட்டுக்குப் போய்விட்டான். அவனுக்கு உணவில் பல்லி விழுந்த விஷயம் தெரியாது!” என்றார்.

அவனை வரவழைத்தேன். அதுவரை வாந்தி எடுக்காதவன் நண்பர்களைப் பார்த்ததும், தான் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்த விஷயம் தெரிந்ததும், தனக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ எனப் பயந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தான். பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் வருவது எல்லாமே மனப் பிரமை என்று இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்!

பின் குறிப்பு: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட உணவை சாம்பிள் எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து ‘அதில் எந்தவித விஷமும் இல்லை’ என்று ரிப்போர்ட் வந்தது.

உணவைப் பாதுகாப்பாக மூடி வைத்திருக்க வேண்டியதும், வீடு, அலுவலகம் பள்ளி, விடுதி, சமையலறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். அப்போதுதான் பல்லிகளின் வருகையைத் தவிர்க்க முடியும்.

(அடுத்த வாரம்: பழங்களை தோலுடன் சாப்பிடலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in