பருவமழைக்கால நோய்கள்: முன்னெச்சரிக்கை அவசியம்

பருவமழைக்கால நோய்கள்: முன்னெச்சரிக்கை அவசியம்
Updated on
2 min read

பருவமழை அதிகம் எதிர்பார்க்கப்படும் காலம் இது. இந்தக் காலத்தில், மழையால் ஏற்படும் அபாயங்களை மறந்துவிடாமல் இருப்பது மிகவும் அவசியம். சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரிப்பதால் இது பல நோய்கள், தொற்றுநோய்களுக்குக் காரணமாக அமையலாம். பாக்டீரியா, வைரஸ்களுக்கு ஏற்றதாக இந்தக் காலம் அமைகிறது. மழைக்காலத்தில் இந்த நோய்த்தொற்றுகளுக்கு ஆட்படாமல் இருக்க, சுகாதாரத்தைப் பராமரிப்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் காற்று, நீர், கொசுக்கள் போன்றவற்றின் மூலம் நோய்கள் பரவக்கூடும். மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், சளி அடிக்கடி ஏற்படும். மழைக்கால நோய்கள், அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சில குறிப்புகள்:

வைரஸ் காய்ச்சல், சளி: வைரஸ் காய்ச்சல், சளி ஆகியவை மழைக்காலத்தில் மிகச் சாதாரணம். ஒருவருக்கு வந்தால், அருகில் உள்ள மற்றவர்களையும் இவை பாதிக்கின்றன. வெப்பநிலை - வானிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாகத் தொற்றும் துகள்கள் உடலை எளிதில் பாதிப்பதே நோய் எளிதில் தொற்றுவதற்குக் காரணம். மழையில் நனைவதைத் தவிர்ப்பது, தொண்டை நோய்த்தொற்றுகளைத் தடுக்க குளிர்ந்த நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரையே அருந்துவது, கை கால்களை அடிக்கடி கழுவுதல் போன்ற சுகாதாரப் பழக்கங்களைப் பேணுதல், உணவக உணவு உட்கொள்வதைத் தவிர்த்து வீட்டு உணவை உட்கொள்ளுதல் போன்றவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள்.

கொசுவால் ஏற்படும் தொற்றுகள்: மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகப்படியாக இனப்பெருக்கம் செய்யும். நீர் தேங்குதல், நீர்நிலைகளை அடைத்துக்கொண்டிருக்கும் அடைப்புகள் காரணமாகக் கொசு இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. இதனால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம். இதுபோன்ற நோய்களைத் தடுப்பதற்கான மிக முக்கியமான வழி, கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பது, அடைபட்டுள்ள நீரைச் சுத்தம்செய்வது. வீட்டு ஜன்னல்களில் கொசு வலை அடிப்பதை உறுதிப்படுத்தி, தேவைக்கேற்ப கொசு விரட்டிகளையும் பயன்படுத்த வேண்டும்.

நீர்வழி பரவும் நோய்கள்: மழைக்காலங்களில் காலரா, டைபாய்டு, ஹெபடைடிஸ் ஏ போன்ற நீரினால் பரவும் நோய்களும் அதிகரிக்கின்றன. இந்தத் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா வகைகள் அசுத்தமான உணவு, தண்ணீரின் மூலமே பரவுகின்றன. இந்த நோய்களுக்கான முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை. நீரினால் பரவும் இந்த நோய்கள் தொற்றாமல் தடுத்துக் கொள்வதற்கு, சுத்தமான தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதே சிறந்தது. இந்த நோய்கள் தொற்றுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம் உணவு மாசுபாடு. எனவே, நன்கு வேகவைக்கப்பட்ட, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். கைகளையும் எப்போதும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

கோவிட் தொற்று: மேலே குறிப்பிட்டுள்ள பொதுவான நோய்த்தொற்றுகளைத் தவிர, கோவிட்-19 தொற்றும் பரவக்கூடும். இதைத் தடுக்க எல்லா நேரமும் முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல், நெரிசல் மிகுந்த பொது இடங்களைத் தவிர்ப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் சில முக்கிய அம்சங்கள்

l நீர்ச்சத்து: நீர்ச்சத்தை இழக்காமல் இருப்பது ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். மழைக்காலங்களில் பெரும்பாலோர் தாகமாக உணர மாட்டார்கள். இதனால், அரிதாகவே தண்ணீர் அருந்து கிறார்கள். இது சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்று போன்ற சிறுநீர் சார்ந்த கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

l அந்தரங்க சுகாதாரம்: மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம், அமில-கார சமநிலை அளவுகளில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பதால் பெண் பிறப்புறுப்புப் பகுதியில் தொற்றுநோய்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, பூஞ்சை தொற்றுகள் ஏற்படும். அரிப்பு, எரிச்சல் உணர்வு, அசௌகரியம், வலி ஆகியவை இந்த நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள். எனவே, மழைக்காலத்தில் அந்தரங்க சுகாதாரமும் மிக முக்கியமானது. - கட்டுரையாளர், நோய்த் தடுப்பு, நீரிழிவு மருத்துவர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in