கழுத்து வலியைத் தவிர்க்கும் வழிகள்

கழுத்து வலியைத் தவிர்க்கும் வழிகள்
Updated on
2 min read

கழுத்துவலி என்பது பின்கழுத்து பகுதி, தோள்பட்டையும் கழுத்தும் இணையும் இடம் ஆகியவற்றில் ஏற்படும் வலி. இதனை ‘செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical Spondylosis)’ என அழைப்பர். இந்த வலி கழுத்து எலும்பு தேய்மானம், தசைகளின் வலுவின்மை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. பொதுவாக முதுமையடைந்தவர்களுக்கே கழுத்து வலி ஏற்படும் என அறியப்பட்டாலும், மாறிவரும் வாழ்க்கை முறையால் இப்போது இளைஞர்கள் பலரும் இந்த வலியால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

காரணங்கள்

l கழுத்து பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து போவதுதான் இதற்கு முக்கிய காரணம்

l தவறான உட்காரும் நிலை

l நீண்ட நேரம் குனிந்தவாறு படிப்பது அல்லது எழுதுவது.

l அதிக உயரம் கொண்ட, தலைக்குப் பொருந் தாத தலையணையைப் பயன்படுத்துவது

l கணினி, அலைபேசி போன்றவற்றைப் பார்ப்பதற்காகக் குனிந்தபடி அதிக நேரம் செலவிடுவது.

l தூங்கும்போது தலையைச் சரியாக வைக்காமல் படுப்பது.

l கழுத்து, தோள்பட்டைக்கு ஓய்வின்றி வேலை கொடுப்பது.

l நீண்ட தூர இருசக்கர வாகனப் பயணங் களைத் தினமும் மேற்கொள்வதால் கழுத்திலும் தோள்பட்டைப் பகுதியிலும் ஏற்படும் அழற்சி.

l தலை, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றில் ஏற்படும் காயங்கள்.

l மனஅழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் சார்ந்த காரணிகள்

தொழில் சார்ந்த காரணங்கள்

l கட்டிடத் தொழில் செய்பவர்கள்

l பேருந்து, கனரக வாகன ஓட்டுநர்கள்

l கணினியில் பல மணி நேரம் வேலை செய்பவர்கள்

l ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்

இவர்களுக்கு வேலை காரணமாகக் கழுத்துப் பகுதியில் அழுத்தமும் தேய்வும் ஏற்படும்

அறிகுறிகள்

l அதிகாலையில் கழுத்தில் வலி உணர்வு அதிகமாக இருத்தல்

l கழுத்தினை இயல்பாக இயக்க இயலாமல் தடுக்கும் அளவுக்கு ஏற்படும் வலி

l கழுத்துத் தசைப் பகுதி இறுக்கமாகவோ பலவீனமாகவோ இருப்பது போன்ற உணர்வு

l தோள்பட்டையைச் சுற்றி ஏற்படும் வலி உணர்வு

l இருமலோ தும்மலோ வரும்போது கழுத்தில் ஏற்படும் வலி

l நாள்பட்ட வலியாக இருப்பின், கைகளில் ஏற்படும் கூச்ச உணர்வு (அ) உணர்வின்மை

கண்டறிவது எவ்வாறு?

எக்ஸ்ரே: இதில் கழுத்து எலும்புகளின் தேய்மானம், வீக்கம், எலும்புகளின் தன்மை ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன்: இதன் மூலம் நாள்பட்ட கழுத்து எலும்புகளின் தேய்மானம், அதன் நடுவே உள்ள சவ்வு போன்ற பகுதியின் விலகல் ஆகியவற்றின் தண்மையைக் கண்டறிய இயலும்.

ரத்தப் பரிசோதனை: வைட்டமின்-சி, வைட்ட மின்-டி, புரதம் ஆகியவற்றின் அளவை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறிய இயலும்.

சிகிச்சை முறைகள்: கழுத்து வலிக்கு மருந்துகளாக வலி, அழற்சியைத் தடுக்கும் மருந்துகள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வழங்கப்படுகின்றன.

இயன்முறை மருத்துவம்: சில உடல் பரிசோதனைகள் மூலம் ஆரம்பக்கட்ட கழுத்து வலியின் தன்மையைக் கண்டறிந்து, அதற்கான சில இயன்முறை சிகிச்சைகளைத் (பிசியோதெரபி) தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் சரிப்படுத்த இயலும். கழுத்து வலி தீவிரமடையாமல் இருக்க இயன்முறை மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளையும் அதற்கான பயிற்சிகளையும் முறையாகச் செய்வதன் மூலம் கழுத்து வலியானது மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கழுத்துப் பட்டை (cervical color) அணிய வேண்டும்.

கழுத்து வலியைத் தடுப்பதற்கான வழிகள்

l உட்காரும்போதும், உட்கார்ந்து வேலை செய்யும்போதும் நேராக உட்கார்ந்து பழக வேண்டும்

l நாற்காலியிலும் சாய்வு இருக்கைகளிலும் அமரும்போது கழுத்து, முதுகுப் பகுதி நேராகவும், அழுத்தம் ஏற்படாமலும் அமர வேண்டும்.

l தூங்கும்போது தலைக்குப் பொருத்தமாக இருக்குமாறு சிறிய அளவிலான தலையணையைப் பயன்படுத்த வேண்டும்.

l அதிக அளவில் குனிவதையும், தலையில் அதிக பாரம் சுமப்பதையும் தவிர்க்க வேண்டும்.

l அதிக தூர இருசக்கர வாகனப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

l நான்கு சக்கர வாகனங்களில் முறையான இருக்கை அளவுடன் கழுத்து பகுதி அதிக அழுத்தம் இல்லாமலும் இருக்கையில் தளர்வாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், இயன்முறை மருத்துவர்

டாக்டர் மு. செல்வக்குமார்
sada.kark@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in