

ஆட்டிசம் பாதித்துள்ள 13 வயது மும்பை சிறுமி ஜியாராய், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ. தூரத்தை 13.05 மணி நேரத்தில் இந்த ஆண்டில் நீந்திக் கடந்தார். ஆட்டிசம் விழிப்புணர்வுக்காக அவர் செய்த சாதனையும், ஆட்டிசம் குறித்தான மருத்துவ ஆய்வுகளும் நம்பிக்கை அளித்தாலும், இது பற்றிய தொடர் விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகிறது.
ஆட்டிசம் என்றால் என்ன? - ஆட்டிசம் என்பது மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த குறைபாடுகளுள் ஒன்று, நோயல்ல. குழந்தை பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாகவே இது வெளிப்படத் தொடங்கிவிடும். குழந்தை வளரும்போது, தன்னளவிலும், பிறருடன் பழகுதலிலும், கற்றல் - ஒருங்கிணைப்புத் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பொது வாகவே, குழந்தையின் வளர்ச்சி குறித்த பரிசோதனையின்போது, வளர்ச்சியில் ஏற்படும் தாமதத்தையும், குறைகளையும், அதீத வேகத் தையும் மருத்துவர்கள் கவனத்தில் கொள்வர்.
ஆட்டிசத்தைப் பொறுத்தவரையில், குழந்தைகள் பிறருடன் பழகுவதிலும், தகவல் பரிமாறிக்கொள்வதிலும் தாமதம் ஏற்படும். இதனால், நீங்கள் பெயர் சொல்லிக் கூப்பிடும்போது குழந்தை திரும்பிப் பார்க்காது. நீங்கள் விளையாட்டுக் காட்டும்போது சிரிக்காது. இங்கே வா, அங்கே பார், என்று சைகையால் சொல்லும்போது, எதுவும் செய்யாமல் அப்படியே இருக்கும். பேசுகிறவரின் குரல் தொனியைப் புரிந்து நடந்துகொள்ளாது, பால் புகட்டும் தாயின் முகத்தைப் பார்க்காது, மற்றவர்கள் செய்வதைப்போலச் செய்யாது. மேற்சொன்னவற்றுடன் சேர்த்து கீழ்க்காண்பவை அதிகமாக இருக்கும்:
l ஒரே செயலை திரும்பத்திரும்பச் செய்வது (repetitive behaviors): உதாரண மாக, கையை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள், பேசிய வார்த்தைகளையே திரும்பத்திரும்ப பேசுவார்கள். பொம்மையை வரிசைப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். கதவுகளைத் திறப்பதும் மூடுவதுமாக இருப்பார்கள்.
l ஒன்றை மட்டுமே செய்வது அல்லது ஒன்றில் மட்டுமே ஆர்வமாக இருப்பது (restricted interests): உதாரணமாக, ஒரே மாதிரி உணவை, ஒரே மாதிரி உடையை விரும்புவார்கள்.
l எல்லாம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் (sameness): உதாரணமாக, பொருட்கள் அனைத்தும் அதே இடத்தில் இருக்க வேண் டும். வீட்டில், அன்றாட காரியங்களில் சிறிய மாற்றத்தைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இணைந்து நிகழும் குறைபாடு: ஆட்டிசம் உள்ள பலரும், ‘இணைந்து நிகழும் குறைபாடுகளுடனேயே’ (co-occurring conditions) வாழ்கிறார்கள். இக்குறைபாடுகள், எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை யென்றாலும், இரைப்பைக் குடல்சார் கோளாறுகள், தூக்கக் கோளாறுகள், வலிப்பு, பதற்றம், கவனக் குறைவு, மீச்செயற்பாடு கோளாறு போன்றவை உடல்நலத்திலும், நல்வாழ்விலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. டவுன் சிண்ட்ரோம் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு, இணைந்து நிகழும் குறைபாடாக ஆட்டிசம் உள்ளதை சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது.
காரணங்கள்: ஆட்டிசம் பாதிப்புக்கு இதுதான் காரணமென்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மரபணு சார்ந்த, மரபணு சாராத அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் முக்கிய பங்குவகிக்கின்றன. மரபணு சார்ந்த காரணம்: குறிப்பிட்ட சில மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. பெற்றோருக்கு ஆட்டிசம் இல்லாவிட்டாலும், இந்த மரபணு மாற்றங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றங்கள் பெற்றோருக்கு இருந்தால் அவை குழந்தைக்குக் கடத்தப்படலாம். மரபணு சாராத காரணம்: மிகவும் தாமதமான குழந்தைப்பேறு (தாய் தந்தை இருவருமோ அல்லது ஒருவரோ), கருவுற்றிருக்கும்போதும், குழந்தை பிறக்கும்போதுமான சிக்கல்கள் (உதாரணமாக, மிகவும் குறை மாதத்தில் பிறப்பது), குழந்தையின் எடை, இரண்டு, மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறப்பது, ஒரே ஆண்டுக்குள் மறுபடியும் கருவுறுவது போன்றவை காரணமாகின்றன.
சுற்றுச்சூழல் காரணிகள்: காற்றில் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் புகை, வடிகட்டாமல் வெளிவரும் தொழிற்சாலை புகை போன்றவற்றில் இருக்கும் துகள்கள் PM2.5 அளவில் இருக்கும். இரண்டரை மைக்ரான் அல்லது அதைவிட அளவு சிறியதாக இருக்கும் துகள்கள் (PM2.5) மிகவும் ஆபத்தானவை. இவை மிகமிக சிறிய அளவாக இருப்பதால், மிக எளிதாக நாசித்துவாரத்தின் வழியாக உடலுக்குள் சென்றுவிடுகின்றன. அதில் உள்ள பல்வேறு நச்சுப்பொருட்கள் சுவாசக் குழாயின் முடிவில் சேர்கின்றன. இவ்வாறு படியும் துகள்கள் நுரையீரலுக்குத் தீங்கு விளைவிப்பதோடு உடலின் பிற பாகங்களுக்குப் பரவ ஆரம்பிக்கையில் பல்வேறு உடல்நலக் குறைவுகளுக்குக் காரணமாக அமைகிறது. இத்துகள்கள் குழந்தைகள் ஆட்டிசத்துடன் பிறக்கவும் காரணமாக உள்ளதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கண்டுபிடிக்கும் வழிமுறை: ஆட்டிசம் பாதிப்பைக் கண்டுபிடிப்பது சவாலானது. ரத்தப் பரிசோதனைபோல எளிய கருவிகளின் மூலம் இதைக் கண்டறிந்துவிட இயலாது.
(1) மருத்துவர்கள், குழந்தையின் வளர்ச்சிப் படிநிலை - செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கேட்டுப் பார்த்து அதனடிப்படையிலேயே முடிவெடுக்கிறார்கள்.
(2) ஆட்டிசம் பாதிப்புக்கு ஃபிரஜைல் எக்ஸ் நோயியம் (Fragile X syndrome) முக்கியக் காரணமாக இருக்கிறது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, தவழ்வது, உட்கார்வது, ஓடுவது, குதிப்பது, பந்து எறிவது, படியேறுவது, புதிய வார்த்தைகளைப் பேச முயல்வது, நினைவாற்றல், போன்றவை இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தாமதப்படும். எஃப்எம்ஆர்1 (FMR1) மரபணுவில் ஏற்படும் மாற்றங்களே இக்குறைபாட்டுக்குக் காரணம். எஃப்எம்ஆர்பி (FMRP) எனும் புரதம் சிறு வயதில் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் இந்த புரதத்தைத் தயாரிக்க எஃப்எம்ஆர்1 மரபணு தேவை. ஒருவேளை, எஃப்எம்ஆர்1 மரபணுக்கள் பிழையாக இருந்தால் எஃப்எம்ஆர்பி (FMRP) புரதத்தைத் தயாரிக்க முடியாது. எனவே, ரத்தத்தில் எஃப்எம்ஆர்1 (FMR1) மரபணு பிழையற்று இருக்கிறதா எனப் பரிசோதித்தால் அவருக்கு அல்லது அவரின் வாரிசுகளுக்கு ஆட்டிசம் ஏற்படச் சாத்தியமுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
(3) மரபணு பரிசோதனையானது, ஆட்டிசத் துடன் ‘இணைந்து நிகழும் குறைபாடுகளை’ ஆழமாகப் புரிந்துகொள்ளக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. மரபணு பரிசோதனை எல்லாருக்கும் பதில்களைத் தருவதில்லை. ஆனால், ஆட்டிசத்துக்கான காரணமாக எதுவெல்லாம் இருக்கலாம் என்பதைச் சொல்லவும், ‘இணைந்து நிகழும் குறைபாடுகள்’ ஏற்படுத்தும் மருத்துவம் சார்ந்த எதிர்கால விளைவுகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது. தீவிர நோயுடன் தொடர்புடைய மரபணு மாற்றங்கள் ஒருவரிடம் இருக்கின்றன எனத் தெரிந்தால், மிகவும் கவனமாக வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வார்தானே. மேலும், ஆட்டிசத்துடன் தொடர்புடைய ‘இணைந்து நிகழும் குறைபாடுகளுக்கு’ காரணமான மரபணுக்களை அடையாளம் காணவும் இந்த மரபணு சோதனை பயன்படும்.
சிகிச்சை முறைகள்: குறிப்பிட்ட சிகிச்சை ஏதும் ஆட்டிசத்துக்கு இதுவரை இல்லை. முடிந்த அளவு சிறப்பான வாழ்வை வாழ்வதற்கான பயிற்சிகளே இருக்கின்றன.
l பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை சிறிது சிறிதாகச் சொல்லிக்கொடுக்கலாம்.
l மொழிப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, அறிவுத் திறன் பயிற்சி, கல்வி - உளவியல் சார்ந்த பயிற்சிகளுக்குத் தொடக்கத்திலேயே திட்டமிடலாம்.
l குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களின் விதிமுறைப்படி விளையாடலாம். பிறகு மெல்ல ஒரு வார்த்தையை அல்லது ஒரு பொம்மையை அறிமுகப்படுத்தலாம். ஊக்கப்படுத்தலாம். படிப்படியாகக் கவனம் செலுத்துவது எப்படி, தொடர்புகொள்வது எப்படி என்பவற்றைக் கற்றுக்கொடுக்க உதவும்.
l ஆட்டிசம் இல்லாத குழந்தைகளுடன் அவ்வப்போது இணைந்து விளையாடவைப்பது தன்னம்பிக்கை ஊட்டும்.
l குளிப்பது, உண்பது, உடுத்துவது, எப்படித் தொடர்புகொள்வது போன்ற வாழ்வுக்கான அடிப்படைத் திறன்களைக் கற்றுக்கொடுக் கலாம். இயன்ற அளவு யாருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் வாழ இது உதவலாம்.
l விளையாட்டுப் பொருட்களை வைத்து, கேள்வி கேட்கவும் அதன் வழியாக எண்ணத்தைப் பகிரவும் பழக்கலாம்.
தமிழ்நாடு அரசானது ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கவும், மருத்துவம் பயிலச் சிறு வயதிலிருந்து கனவு காணும் மாணவர்களை மருத்துவ ஆய்வு நோக்கி ஊக்கப் படுத்தவும் வேண்டும். தூசியைக் குறைக்கத் திட்டமிட வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்களுக்கு, எஃப்எம்ஆர்1 மரபணு பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும். ஆட்டிசம் வருவதற்குச் சாத்தியமுள்ளதை முன்னரே அறிந்துகொண்டால், மனதைப் பக்குவப்படுத்தவும், குழந்தைக்குத் தேவையான பயிற்சி குறித்துத் திட்டமிடவும் மிகவும் உதவியாக இருக்கும்!. - கட்டுரையாளர், எழுத்தாளர் - உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், பிலிப்பைன்ஸ்; sumajeyaseelan@gmail.com