

அண்மையில் தமிழகத்தில் பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்பு இயக்குநரகமும் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறு நீரகத்துறையும் இணைந்து ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டன. நம் மாநிலத்தில் சிறுநீரக நோய்கள் குறித்த தரவுகள் முறையாக இல்லை என்பதால் இந்த ஆய்வு அவசியமானது.
மாநிலம் முழுவதிலும் 177 இடங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் பல வெளிவந்துள்ளன. முதலாவது, தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு சிறுநீரகப் பாதிப்பு இருக்கிறது. இரண்டாவது, பத்துச் சதவீதம் பேருக்கு ‘நாட்பட்ட சிறுநீரகச் சீர்கேடு’ (CKD-Chronic Kidney Disease) எனும் மோசமான நிலைமை இருக்கிறது. மூன்றாவது, சிறுநீரகத் தொற்று ஆண்களைவிடப் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. நான்காவது, இன்னும் பத்துச் சதவீதம் பேருக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஆரம்பநிலையில் இருக்கிறது. இப்படி நீள்கிறது அந்த ஆய்வின் முடிவு.
உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் குறித்தான விழிப்புணர்வு பொதுச் சமூகத்தில் படித்தவர் களிடம் மட்டுமல்லாமல் சாமானியர்களிடமும் அதிகரிக்கப்படவேண்டிய அவசியத்தை இது சுட்டிக்காட்டுகிறது.
என்ன காரணம்? - இந்த ஆய்வில் இடம்பெற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற விஷயமே தெரியாமல் இருக்கின்றனர். உடலுக்குள் அமைதியாகச் சீரழிந்துகொண்டி ருக்கும் சிறுநீரகங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் சிறுநீரகங்கள் முழுவதுமாகப் பழுதடைந்து மாற்றுச் சிறுநீரகம் பொருத்தக்கூடிய நிலைமையில்தான் பலரும் சிகிச்சைக்கு வருகின்றனர். கண்புரை வந்தவர்களுக்குக் கண்ணில் லென்ஸை மாற்றிக்கொள்வதுபோல் எல்லோ ருக்கும் நினைத்த நேரத்தில் சிறுநீரகத்தை மாற்றிவிட முடியாது. மாற்றுச் சிறுநீரகம் பெறுவதில் அநேகச் சிரமங்கள் இருக்கின்றன; சட்டச் சிக்கல்களும் இருக்கின்றன. அதுவரை அவர்கள் ‘டயாலிசிஸ்’ எனும் சிகிச்சையில் தான் இருக்க வேண்டும். அதற்கு அதிகம் செலவாகும். ஆகவே, நாம் சிறுவயதிலிருந்தே சிறுநீரகங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி? - உயர் ரத்த அழுத்தம், கட்டுப்படாத சர்க்கரை நோய், புகைபிடிப்பது, மது அருந்துவது, சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே களைந்துவிட்டால் சிறுநீரகப் பிரச்சினைகள் குறையும். தவறினால், சிறிதுசிறிதாகச் சிறுநீரகங்கள் செயலிழந்துவிடும்.
அறிகுறிகள் என்னென்ன? - நம் சிறுநீரகத்தில் எந்த வழியிலாவது சிறு பாதிப்பு ஆரம்பித்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், முதலில் சிறுநீர் பிரிவது குறையும். முகம் வீங்கும். உடலில் நீர்கோத்துக் கொள்ளும். கால் பாதம் வீங்கும். பசிக்காது. குமட்டல், வாந்தி வரும். தூக்கம் குறையும். உடல் எந்த நேரமும் சோர்வாக இருக்கும். மூச்சிரைப்பு ஏற்படும். அடிவயிறு அடிக்கடி வலிக்கும். எடை குறையும். விக்கல் வரும். சருமத்தில் அரிப்பு ஏற்படும்.
என்ன பரிசோதனைகள் உள்ளன? - இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் மாதம் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் சிறுநீரகத்துக்கு ஏற்படுகிற சீரழிவை முதல் கட்டத்திலேயே சிறைபிடிக்க முடியும். சிறுநீரில் ‘மைக்ரோ அல்புமின்’ அளவும், ரத்தத்தில் யூரியா, க்ரியேட்டினின், BUN, இஜிஎஃப்ஆர் (eGFR) அளவுகளும், சிறுநீரக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையும் சிறுநீரகத்தின் நிலைமையைக் காட்டும். அப்போது சிறுநீரகச் சீர்கேட்டின் வளர்ச்சிக் கட்டங்கள் தெரிந்துவிடும்.
ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்! - சிறுநீரகப் பாதிப்பதைத் தடுக்க, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதாமாதம் தங்கள் ரத்த அழுத்தத்தை அளந்துகொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சரியான வாழ்க்கைமுறையால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ரத்த அழுத்தம் 130/90-க்கும் மேலே இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ரத்த அழுத்த மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
உப்பு - உஷார்! - உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். இந்தப் பழக்கம் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும். நாளொன்றுக்கு ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், சமையல் சோடா, வடகம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், சேவு, சீவல், சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சிகளையும் கொழுப்பு உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, துரித உணவு, உடனடி உணவு, செயற்கை வண்ண உணவு ஆகியவற்றில் உப்பு கூடுதலாகவே இருக்கும். அவற்றையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.
ரத்தச் சர்க்கரை சரியாக இருக்கட்டும்! - சர்க்கரை நோய் உள்ளவர்களில் பாதிப்பேருக்குச் சிறுநீரகப் பாதிப்பும் இருக்கிறது. இவர்களில் 60% பேருக்குச் சிறுநீரகம் முழுமையாகச் செயல்படாமல் டயாலிசிஸ் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆகவே, ரத்தச் சர்க்கரை அளவையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு (HbA1C) 6.5%.
சிரமப்படுத்தும் சிறுநீரகத் தொற்று! - சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறிது சிறிதாகச் சிறுநீர் கழிவது, குளிர்காய்ச்சல், வாந்தி, அடிவயிற்று வலி போன்றவை சிறுநீர்ப் பாதையில் தொற்றுள்ளதைக் காட்டும் அறிகுறிகள். தொற்றுக்குக் காரணமாகும் கிருமிகளுக்குத் தகுந்தவாறு மருந்துகளைச் சாப்பிட வேண்டியது முக்கியம். அத்துடன், சிறுநீரை வெளியேற்றும் உறுப்பைச் சுத்தமாகவும் உலர்ந்த நிலையிலும் பராமரிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைக்க வேண்டாம். சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், உடனே கழித்து விடுவது நல்லது. பொதுவாகவே, சரியான இடைவெளியில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால், அது தொற்று ஏற்படுவதைத் தடுக்கும். சிறுநீரகத்துக்குப் பாதுகாப்பு தரும்.
குடிநீரின் அளவு முக்கியம்! - வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப்பொருள்கள் சீராக வெளியேறும். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் இது தடுத்துவிடும். அதேவேளையில் ஏற்கெனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அளவுக்குத் தண்ணீர் குடிக்கக் கூடாது. மருத்துவர் சொல்லும் அளவுக்குத்தான் குடிக்க வேண்டும். தாகத்தைத் தணிக்கச் சோடா குடிக்க வேண்டாம். பதிலாக இளநீர், இயற்கைப் பழச்சாறுகள் குடிப்பது நல்லது.
சுயமருத்துவம் வேண்டாம்! - மூட்டுவலி, முதுகுவலி, வாய்வு வலி போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் வலி மாத்திரைகள், ஆஸ்துமாவுக்கான ஸ்டீராய்டு மாத்திரைகளையும் வீரியமுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகளையும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலோ, அடிக்கடி உட்கொண்டாலோ, அவை சிறுநீரகத்தைப் பாதிக்கும். ஆகவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துக்கடைகளில் எந்த மருந்தையும் வாங்கி உட்கொள்ளாதீர்கள். இறுதியாக இதுவும் முக்கியம். புகை பிடிக்க வேண்டாம். மதுவும் ஆகாது. காரணம், இந்த இரண்டிலும் இடம்பெற்றுள்ள வேதிப் பொருள்கள் சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும். சிறுநீரகம் காக்க உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். எந்த ஓர் உடற்பயிற்சியும் நல்லதுதான். ஆனாலும், நடைப்பயிற்சிதான் எல்லாருக்கும் பொருந்தும் எளிய பயிற்சி. யோகாவும் செய்யலாம். பூப்பந்தும் ஆடலாம். சிறுநீரகத்துக்குப் பலன் கிடைக்கும். - கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; தொடர்புக்கு: gganesan95@gmail.com