நலம் நலமறிய ஆவல்: ஹார்மோன் சமநிலையில் கவனம் தேவை

நலம் நலமறிய ஆவல்: ஹார்மோன் சமநிலையில் கவனம் தேவை
Updated on
2 min read

இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர்:

நான் தற்போது கத்தார் நாட்டில் கணவருடன் வசித்து வருகிறேன். வயது 25. பூப்பெய்திய காலத்தில் இருந்து எனக்கு மாதவிடாய் பிரச்சினை உள்ளது. மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே சீராக இருக்கிறது. இல்லையென்றால் 2, 3 மாதம் தள்ளிப் போகிறது. குழந்தை பிறப்புக்கு மாதவிடாய் எவ்வளவு அவசியம் என்பதை அறிவேன். குழந்தை பிறப்புக்கு இயற்கை முறையில் மருத்துவம் எதுவும் நான் செய்ததில்லை. கருஞ்சீரகம், வெல்லம் கொண்டு எவ்வாறு மருந்து செய்வது? வேறு இயற்கை மருந்துகள் இருக்கின்றனவா?

- கத்தார் நாட்டு வாசகி

பெண்களின் நலவாழ்வுக்கும், இயற்கையான குழந்தைபேற்றுக்கும் சீரான மாதவிடாய் அவசியம். மாதவிடாய் தொடங்கிய காலம் முதல் உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்துள்ளது. அத்துடன் மாத்திரைகள் உட்கொண்ட பின்னரே (induced/withdrawal) மாதவிடாய் வந்துள்ளது. இவை அனைத்துமே உடல் இயக்குநீர் சீரற்ற (hormonal imbalance) நிலையில் உள்ளதைக் குறிக்கின்றன. உங்களுக்குச் சினைப்பை நீர்க்கட்டிகள் (pcod) இருப்பதற்குச் சாத்தியம் உண்டு.

உங்கள் ஊரில் உள்ள மகப்பேறு மருத்துவரிடம் காண்பித்து முதலில் நோயைக் கணித்துக்கொள்ளவும். கருப்பை ஸ்கேன் (USG Pelvis), சினைக்குழாய் பாதை (HSG) அமைப்பு, உடல் இயக்குநீர் அளவுகள் (Hormone assay), குறிப்பாகத் தைராய்டு ஹார்மோன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு நோயின் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டியவை:

# உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது நல்லது.

# தினசரி அரை மணி நேர நடைப்பயிற்சி நல்லது.

# சமச்சீரான உணவைப் பசித்த பின்னர் உண்ண வேண்டும்.

# அஜ்வா வகை (ajwa) பேரீச்சம்பழம் நல்ல பலன் தரும், கத்தார் நாட்டில் மதீனா பேரீச்சை என்ற பெயரில் கிடைக்கும்.

# சித்த மருத்துவம் வலியுறுத்தும் பாரம்பரிய உணவுகளான

# உளுந்தங்கஞ்சி (மாதவிடாயின் முதல் பாதியில்), வெந்தயக் களி அல்லது வெந்தயக் கஞ்சி (மாதவிடாயின் பின் பாதியில்)

# கட்டாயம் உண்பது மாதவிடாய் சீரடைய உதவும்.

# நீங்கள் கேட்டிருந்த உணவுக் கற்பம் செய்முறை:

# கருஞ்சீரகம் ஒரு கிராம் அளவு தூளாக்கியது

# பெருங்காயம் பொரித்தது இரண்டு அரிசி அளவு (பொரித்து எடுப்பது பெருங் காயத்தைச் சுத்தப்படுத்தும் முறை)

# இத்துடன் பனைவெல்லம் சிறிது சேர்த்துக் காலை மாலை எனச் சாப்பிடவும்.

# உங்கள் கணவரின் மருத்துவப் பரிசோதனைகள் இயல்பாக இருக்கின்றனவா என்று பார்க்கவும். விரைவில் மாதவிடாய் சீரடைந்து இயற்கை முறையில் தாயாக நல்ல மனநிலையுடன் இருக்கவும்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in