

கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியமான மனநலம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுவிடுகிறது. கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களுக்கு ஆளானால், பிறக்கப் போகும் குழந்தை விரும்பத்தகாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். குறிப்பாக, குழந்தைக்கு மனநலப் பிரச்சினைகள், கவனம் செலுத்துதலில் பிரச்சினை, பெற்றோர் கூறுவதைக் கவனிக்காத தன்மை, அதீத செயல்பாட்டுக் கோளாறு, அறிவாற்றல் வளர்ச்சி பலவீனமடைதல் போன்றவை ஏற்படலாம்.
மரபணுத் தொடர்ச்சி, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு ஆகியவற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளின் விளைவுகள் மாறலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் மனநலம் சார்ந்த கவலைகளைக் களைய வேண்டியது மிகவும் அவசியம். மனச் சோர்வு, எரிச்சல் உணர்வு, வேறு ஏதேனும் மனக்குழப்பம் உள்ள கருத்தரித்த தாய்மார்கள் உரிய மருத்துவ கவனிப்பை அதற்காகப் பெறுவதில்லை. இந்த நிலை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், அவர்கள் தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்வதிலிருந்து தவறிவிடவோ, கர்ப்ப காலத்தில் சில ஆரோக்கியமற்ற நடைமுறைகளுக்கு மாறி விடவோ நேரலாம். இது கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
குழந்தையின் அறிவாற்றல்: கர்ப்ப காலத்தில் மனநல ஆரோக்கியம் குறித்த கவலைகள் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பதற்றம், மனச் சோர்வு, வேறு ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் போகலாம். மேலும், ஹார்மோன் சுரப்பின் ஏற்ற இறக்கம், உடலில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்கள் போன்றவை அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. ஒரு குழந்தையைச் சுமக்கும்போது தங்கள் சொந்த தேவைகளையும் பிரச்சினைகளையும் பெண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள் அல்லது தள்ளிவைத்துவிடுகிறார்கள். இதனால் வளர்ந்துவரும் கரு ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.
கருவுடன் தொடர்பில் இருக்கும் கருப்பையின் பகுதியானது, கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற அறிவாற்றல் சார்ந்த அம்சங்களுடன் தொடர்புடையது. தாய் அனுபவிக்கும் உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தையையும் சென்றடையும் என்பதால், அது குழந்தையின் நல்வாழ்வைப் பாதிக் கிறது. தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் - மனச்சோர்வு கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்.
பச்சிளம் குழந்தைக்கு ஏற்படும் தீங்கு: கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் மிதமான மன அழுத்தம், பதற்றம்கூட கருவிலிருக்கும் குழந்தையிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது குழந்தையிடமும் குழந்தையின் வளர்ச்சியிலும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பிறப்புக்கு முன்னதாகவோ கருவுற்ற பின்னோ தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் கருவிலிருக்கு குழந்தையை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்த தெளிவான அறிவியல் புரிதல் இன்னும் ஏற்படவில்லை. குழந்தை பிறந்த பிறகு தாங்களாகவே மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் திறன் இல்லாததால், தாங்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை, உடல் சார்ந்த விழிப்புணர்வை எப்படிப் பெறுவது என்பதற்குப் பெற்றோரின் எதிர்வினைகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்களின் மன ஆரோக்கியம் கருவின் நரம்பியல்-நடத்தை வளர்ச்சியைப் பாதிக்கலாம். இதன் தொடர்ச்சியாகக் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். பிறப்புக்கு முன்னும் பின்னும் பெண்களின் மனநலம் குழந்தையின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
ஆரோக்கியமான மனநலம்: கர்ப்ப காலத்தின்போது சில நிலைகளில், பல தாய்மார்கள் பதற்றம் அல்லது மனச்சோர்வை அனுபவிக்கின்றனர். அத்துடன் சிலருக்கு மருத்துவ கவனிப்பும் தேவைப்படலாம். நீண்ட காலத்திற்குக் கவனிக்கப்படாத, தொடர்ந்து அதிகரிக்கும் மன அழுத்தம் உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். இதன் விளைவாக குறைமாதக் குழந்தையைப் பெறுவதற்கான சாத்தியம் அதிகரிக்கலாம். கருவிலிருக்கும் குழந்தை, தாய் என இருவருக்கும் ஆரோக்கியமான மனநலம் மிகவும் முக்கியம். தேவை ஏற்பட்டால், உரிய மருத்துவ உதவியையும் நாட வேண்டும்.
கர்ப்ப கால நீரிழிவு நோய்க்காகப் பெண்கள் பொதுவாகப் பரிசோதிக்கப்படுகிறார்கள். ஆனால், மனச்சோர்வு / மனநோய் / மனநலம் சார்ந்த வாழ்க்கை நெருக்கடி ஆகியவை சார்ந்து பரிசோதிக்கப்படுவதில்லை. மற்ற நிலைமைகளைவிடக் கர்ப்ப காலத்தில் மனச்சோர்வு - மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மிகவும் பொதுவான ஒரு நோய்நிலை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. - கட்டுரையாளர், குழந்தை மருத்துவம், பச்சிளம் குழந்தை நிபுணர்