10 ஆண்டுகளில் மருத்துவம்...

10 ஆண்டுகளில் மருத்துவம்...
Updated on
4 min read

கடந்த பத்தாண்டுகளில் இந்திய மருத்துவத் துறை சந்தித்த சவால் கள், சாதனைகள் குறித்த பார்வை:

1 தொற்றா நோய்கள்: இதய நோய், நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களையே அதிக அளவில் பாதிக்கின்றன. இந்திய அளவில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது.

தமிழ்நாடு சுகாதாரத் துறையின் செயல்திட்டங்கள், தொற்றா நோய்கள் குறித்தும், தேவைப்படும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வை உருவாக்கிவருகின்றன. அந்த நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ’மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் திட்டமும் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

2 கரோனா பெருந்தொற்று: கரோனாவை எதிர்கொள் வதில் முதலில் சறுக்கிய இந்தியா, இரண்டாம் அலையின் கோரத் தாண்டவத்துக்குப் பின்னரே விழித்துக்கொண்டது. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் தீவிரத் தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டிலுள்ள வயது வந்தோரில் 80 சதவீதத்திற்கும் மேலானோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன் காரணமாக மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய மக்களிடம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்திருந்தது. இந்திய அளவில் கேரளமும் தமிழ்நாடும் கரோனாவை எதிர்கொள்வதில் சிறப்பாகச் செயலாற்றின. இதன் காரணமாக பெரும் உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டன.

3 எபோலா வைரஸ்: எபோலா வைரஸ் 1976இல் கண்டறியப்பட்டாலும், 2014-2016 காலகட்டத்தில்தான் மிகப்பெரும் கொள்ளை நோயாக அது உருவெடுத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாய் மரணித்தனர். எபோலாவின் தீவிரத்தைக் குறைத்து அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது.

2019 இறுதியில்தான் எபோலாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டது. இந்தியாவில் எபோலா பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவேளை இந்தியாவில் எபோலா பரவியிருந்தால், மக்கள்தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.

4 மிஷன் இந்திர தனுஷ்: இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் தாக்கும் தீவிர நோய்களைத் தடுக்கும் திட்டம் இது. டிஃப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், காசநோய், போலியோ, ஹெபடைடிஸ் பி, தட்டம்மை ஆகிய ஏழு நோய்களுக்கு எதிராக முழுத் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப் படுத்தும் திட்டம் இது.

2014இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல், ஹீமோபிலஸ் இன்ஃபுளூயன்ஸா வகை பி ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளும் தற்போது வழங்கப்படுகின்றன.

5 புற்றுநோய்க்கு முதல் தடுப்பூசி: புற்றுநோய்க்கு எதிராக ஹெச்பிவி வேக்சின் எனும் ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் தடுப்பூசி தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணித் தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், மத்திய அரசின் பைராக் எனும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து அதைக் கண்டறிந்துள்ளன.

இந்தத் தடுப்பூசி அனைத்துப் புற்றுநோய் வகைகளையும் தடுக்காது என்றாலும், ஹெச்.பி.வி. வைரஸால் ஏற்படும் புற்றுநோயைத் தவிர்க்க உதவும். முக்கியமாக, கருப்பைவாய் புற்றுநோயையும் மற்ற பாதிப்புகளையும் இந்தத் தடுப்பூசி 90 சதவீதம் தடுக்கும்.

6 காப்பீட்டு வசதி: தனியார், பொதுத் துறை நிறுவனங்கள் பல்வேறு காப்பீடுகளை வழங்கி வருவதன் காரணமாக, இன்று இந்தியாவில் சுகாதாரக் காப்பீடு அதிகரித்துள்ளது. 55 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஏதோ ஓர் உடல்நலக் காப்பீட்டைப் பெற்றுள்ளனர். பத்தாண்டுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையைவிட, இது பத்து மடங்கு அதிகம்.

மத்திய அரசு வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. தமிழகத்தில் ஏழைகளுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் பெரும் வெற்றியைப் பெற்ற திட்டமாக உள்ளது.

7 மருத்துவச் சுற்றுலா: மேம்பட்ட சிகிச்சை, குறைவான கட்டணம், தரமான கவனிப்பு, ஆங்கில மொழிப் புலமை போன்ற சிறப்புகளின் காரணமாக உலக அளவில் பெரிதும் விரும்பப்படும் மருத்துவச் சுற்றுலாத் தலமாக இந்தியா இருக்கிறது. இந்திய அளவில் எடுத்துக்கொண்டால், தமிழ்நாடே இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா தலைநகராக இருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தமிழகத்திற்கு வருகின்றனர். மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக `இந்தியாவில் குணமடையுங்கள்’ என்கிற இணைய தளத்தைச் சுதந்திர தினத்தன்று மத்திய அரசு தொடங்கியுள்ளது.

8 தொடரும் தொழுநோய்: 2005 இல் தொழுநோய் கட்டுப்படுத்தப்பட்ட நாடாக இந்தியா அறிவிக்கப்பட்ட போதும், மத்தியச் சுகாதார அமைச்சகத்தின் தொழுநோய் பிரிவு, 2017இல் இந்தியாவில் 135,485 புதிய தொழுநோயாளிகளைக் கண்டறிந்ததாகக் கூறியது.

அவர்களில் பாதி நோயாளிகள் (67,160) பாதிப்பு முற்றிய நிலையில் கண்டறியப்பட்டதாக அது தெரிவித்தது. அதாவது, சராசரியாக ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் யாரோ ஒருவருக்குத் தொழுநோய் பாதிப்பு ஏற்படுவதை அந்தப் பிரிவு கண்டறிந்துள்ளது.

9 காசநோய் ஒழிப்பில் சறுக்கல்: உலகின் காசநோய் நோயாளிகளில் 27 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். 2025-க்குள் புதிய காசநோய் நோயாளிகளை ஒரு லட்சத்தில் 44 ஆகக் குறைக்கும் நோக்கில் திருத்தியமைக்கப்பட்ட தேசியக் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது.

ஆனால், அந்த இலக்கு எட்டப்படுவது சாத்தியமில்லை என்பதைத் தரவுகள் காட்டுகின்றன. 2017ஆம் ஆண்டைவிட 2018இல் குறைவான நோயாளிகள் கண்டறியப்பட்டாலும், 2025-க்குள் காசநோயை அகற்றுவதற்கான இலக்கை அடைவதற்கு வீழ்ச்சி விகிதம் போதுமானதாக இல்லை.

10 மனநலப் பிரச்சினைகள்: லான்செட் மருத்துவ இதழின் 2016 அறிக்கையின்படி, அடுத்த பத்தாண்டுகளில் உலகில் உளவியல் சார்ந்த பிரச்சினை களால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். குடும்பங்களின் பிளவு, தனிமை, தொழில்நுட்பங்களின் வரவு, மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் போன்றவை மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றன.

அடிக்கடி மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அளிக்கப்படாத பட்சத்தில், அது தற்கொலை வரை செல்வதற்குச் சாத்தியம் உண்டு. இந்தச் சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு மனநலச் சுகாதாரச் சட்டத்தைக் கடந்த 2017இல் அறிமுகப்படுத்தியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in