

நேற்று வந்த கரோனாவுக்குக்கூடத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், உடலுக்குள்ளேயே புற்றுபோல வளர்ந்து, மரணம்வரை கொண்டு செல்லும் புற்று நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாத நிலையே இருந்தது.
அந்த நிலையைப் புற்றுநோய்க்காகத் தற்போது கண்டறியப் பட்டுள்ள ஹெச்பிவி வேக்சின் எனும் ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் தடுப்பூசி சற்று மாற்றி யமைத்துள்ளது. இந்தத் தடுப்பூசி அனைத்துப் புற்றுநோய் வகைகளையும் தடுக்காது என்றாலும், சில புற்றுநோய் வகைகளைத் தவிர்க்க உதவும்.
இந்தியாவின் முன்னணித் தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், மத்திய அரசின் பைராக் எனும் உயிரித் தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து இந்தத் தடுப்பூசியைப் பற்றி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மருத்துவ உலகில் பெரும் உற்சாக அலையை உருவாக்கியுள்ளது.
புற்றுநோய் உண்டாக்கும் வைரஸ்
ஜெர்மானிய மருத்துவ விஞ்ஞானியான ஹெரால்ட் ஹாசன் (Herold Hausen), மனித உயிரைப் பறிக்கும் புற்றுநோயின் ஆரம்பம் என்பது ஒரு சாதாரண வைரஸ் தொற்றாகவும் இருக்கலாம், அது மனித உடலினுள் தங்கியிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோயாக மாறலாம் என்பதை முதலில் கண்டறிந்து அறிவித்தார்.
இத்தகைய வைரஸ் கிருமிகளில் ஏறத்தாழ இருநூறுக்கும் அதிகமான வகைகள் உள்ளன என்றாலும், அவற்றில் ஹ்யூமன் பேப்பிலோமா வைரஸ் (HPV)16, 18, 31, 45 ஆகிய வகைகள் மட்டுமே புற்றுநோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதைத் தனது ஆராய்ச்சிகளின் மூலம் டாக்டர் ஹெரால்ட் 1973இல் கண்டறிந்தார்.
அந்தக் காலத்தில் அவரது ஆராய்ச்சி மறுக்கப்பட்டது. இருப்பினும், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஆராய்ச்சி ஏற்கப்பட்டது. அதற்காக 2008இல் அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
ஹெச்.பி.வி. என்பது ஒரு டிஎன்ஏ வைரஸ். இதனால் உண்டாகும் புற்றுநோய்களில் செர்விகல் கேன்சர் எனும் கருப்பைவாய்ப் புற்றுநோயே இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு இன்றளவும் பெரும் சவாலாக இருந்துவருகிறது. பொதுவாக, உடலுறவுக்குப் பின் ஏற்படும் இந்த ஹெச்பிவி வைரஸ் தொற்று பெரும்பாலான வேளைகளில் எந்தவொரு நோய் அறிகுறியையும் வெளிப்படுத்தாது.
இருப்பினும், சில நேரங்களில் condyloma எனும் மருக்கள் இரு பாலருக்கும் உதடுகளிலும், பிறப்புறுப்புகளிலும் தோன்றி சாதாரணமாக மறைந்துவிடும். ஆனால், ஆண்டுக்கணக்காக அறிகுறி இன்றி உடலில் தங்கும் இந்த ஹெச்.பி.வி. 16, 18, 31, 45 வைரஸ் சில பெண்களுக்குக் கருப்பைவாயிலிலோ பிறப்புறுப்பிலோ புற்றுநோயை உண்டாக்கும். ஆண்களின் உடலில் தங்கும் இந்த வைரஸ் பிறப்புறுப்பிலோ ஆசனவாயிலோ தொண்டையிலோ புற்றுநோயை உண்டாக்கும்.
கருப்பைவாய்ப் புற்றுநோய்
ஹெச்.பி.வி. ஏற்படுத்தும் புற்றுநோய்களில் கருப்பைவாய்ப் புற்றுநோயே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் கருப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் புற்றுநோயால் இந்தியாவில் மட்டும் ஒருமணி நேரத்திற்கு எட்டுப் பெண்கள், அதாவது எட்டு நிமிடங்களுக்கு ஒரு பெண் இறக்க நேரிடுகிறது என்று இந்தியப் புற்றுநோய் தடுப்பு அமைப்பு கூறுகிறது.
கருப்பைவாய்ப் புற்றுநோய் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவது இல்லை என்பதால், நோய் முற்றிய மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதன் பாதிப்பு கண்டறியப்படுகிறது. தாமதமான கண்டறிதல் காரணமாக, சில மாதங்களிலேயே பாதிக்கப்பட்டவர்கள் இறக்கவும் நேரிடுகிறது.
ஹெச்பிவி தடுப்பூசி
உண்மையில், கருப்பைவாயில் புற்று நோயானது பாலியல் நோய்கள், புகைபிடித்தல், வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசு போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். இருப்பினும், இவற்றையெல்லாம்விட முக்கியக் காரணியாக ஹெச்பிவி வைரஸ் தொற்று உள்ளது.
தற்போது கண்டறியப்பட்டிருக்கும் ஹெச்பிவி தடுப்பூசி, ஹெச்.பி.வி. வைரஸால் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கிறது. இந்த ஹெச்பிவி வைரஸ்களின் தாக்கம், 20லிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்களையே பாதிக்கும் என்பதால், 20 வயதுக்கு முன்பே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதே இந்நோயிலிருந்து முற்றிலும் காக்கும்.
ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லாண்ட் பல்கலைக்கழகத்தில், இயான் ஃப்ரேசர் எனும் ஆஸ்திரேலிய மருத்துவ விஞ்ஞானி ஹெச்பிவி கிருமிக்கு எதிரான இந்தத் தடுப்பூசியை 2006இல் கண்டுபிடித்தார். இது வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசி என்பதாக மட்டுமல்லாமல்; புற்றுநோய்க்கு எதிரான முதல் தடுப்பூசி எனவும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹெச்பிவி தடுப்பூசி, மற்ற தடுப்பூசி களைப் போல நோயைச் சிறிது உண்டாக்கி எதிர்ப்பாற்றலை உருவாக்குவதில்லை. அது நேரடியாக நோயெதிர்ப்பு ஆற்றலை அளிக்கிறது. இதன் காரணமாக அது வைரஸ் தொற்றை 99.7 சதவீதம் தடுக்கிறது. முக்கியமாக, கருப்பைவாய் புற்றுநோயையும், மற்ற பாதிப்புகளையும் 90 சதவீதம் தடுக்கிறது.
தடுப்பூசி வழங்கும் விதம்
9-14 வயதிலிருக்கும் பெண் குழந்தைகளுக்கு ஆறு மாத கால (0, 6) இடைவெளியில் இரண்டு முறையும், 15 - 26 வயதிலிருக்கும் பெண்களுக்கு, ஆறு மாதங்களில் (0, 2, 6) என மூன்று முறையும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படுகிறது. பெண்ணின் வயது கூடும்போதோ, திருமண வாழ்க்கைக்குப் பிறகோ இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது என்பதால், பெண்கள் தங்கள் பதின்பருவத்திலேயே இதனைப் போட்டுக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இது ஆசனவாய்ப் புற்றுநோய் உட்பட பல்வேறு பாதிப்புகளையும் தடுப்பதால், சமீபகாலமாக ஆண்களுக்கும் இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசியும் மற்ற தடுப்பூசிகளைப் போலவே தலைவலி, காய்ச்சல், தசைவலி, தலைச்சுற்றல் போன்ற சிறிய எதிர்வினைகளை உண்டாக்கும். கர்ப்பிணிப் பெண்களும் அதீத ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக் கூடாது.
குழந்தைகளைக் காப்போம்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, இலங்கை உட்பட்ட 100-க்கும் அதிகமான நாடுகள் ஹெச்பிவி தடுப்பூசியைத் தங்களது தேசியத் தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துள்ளன. அங்கே குழந்தைகளுக்கும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்தியாவில் Gardasil (quadrivalent), Cervarix (bivalent) என இரண்டு வகையான தடுப்பூசிகள் கிடைக்கின்றன.
ஆனால், ஓர் ஊசியின் விலை 4000 ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது. மக்கள்தொகை, ஊசியின் அதிக விலை போன்ற காரணங்களால், இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது.
ஆனால், தான் கண்டறிந்த செர்வராக் தடுப்பூசியை வெறும் 400 ரூபாய்க்குள் வழங்க முடியும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. குறைவான விலை, இந்தத் தடுப்பூசியை இந்தியா முழுவதும் வழங்குவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவிட் தடுப்பூசியைப் போலவே பள்ளிக் குழந்தைகளிடம் இந்தத் தடுப்பூசியைக் கொண்டுசெல்ல வேண்டும் என இந்தியக் குழந்தைநல அமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஏற்கெனவே சிக்கிம் மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி 2018 முதல் வழங்கப்பட்டுவருவது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குழந்தைகளைப் புற்றுநோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்க, ஹெச்பிவி தடுப்பூசி போடுவது அவசியம்.
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: sasithra71@gmail.com