

நீரிழிவு நோய் என்பது ஒரு நிலையே தவிர நோய் அல்ல. மாறுபடும் வளர்சிதை மாற்றச் செயல்முறைகளின் மாறுபாடுகளே உண்மையான நோய். வளர்சிதை மாற்றம் என்பது உணவை ஆற்றலாக மாற்ற நமது உடல் செல்கள் மேற்கொள்ளும் பல உயிர்வேதியியல் எதிர்வினைகளைக் குறிக்கிறது.
நமது உடலின் உயிர்வேதியியல் எதிர்வினைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். ஒரு நபரின் வயது, உடல் எடை, உடல் அமைப்பு போன்ற காரணிகளைப் பொறுத்து உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலின் அளவும் மாறுபடும். இந்தக் காரணிகள் அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பதால், எந்தவொரு நபரின் வளர்சிதை மாற்றமும் நிலையானதாக இருக்காது.
வளர்சிதை மாற்றச் செயல்முறைகள்
சிக்கலான வளர்சிதை மாற்றச் செயல்முறைகளின்போது, உணவிலும் பானங்களிலும் உள்ள கலோரிகள் ஆக்ஸிஜனுடன் இணைந்து நம் உடல் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றலை வெளியிடுகின்றன. ஒவ்வொரு நபரின் வளர்சிதை மாற்றமும் ஒவ்வொரு கால இடைவெளியிலும் மாறிக்கொண்டே இருக்கிறது, அது ஒரே மாதிரியாக இருக்காது.
வளர்சிதை மாற்றத்தின் மாறும் தன்மையைக் கருத்தில் கொண்டு, மாறுபாடுகளைத் துல்லியமாக அளவிடுவது மிகவும் கடினம். மேலும், தொடர்ந்து மாறிவரும் இந்த வளர்சிதை மாற்றத்தை அளவிட எந்த வழியும் இல்லை.
இந்த நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பார்ப்பதற்கு முன், மாறுபடும் வளர்சிதை மாற்றம் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது, நீரிழிவு உள்ளிட்ட சிக்கலான நிலைகளை எவ்வாறு உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
பாதிப்புகள்
வளர்சிதை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் உடல், பீட்டா செல்களின் கட்டமைப் பையும் செயல்பாட்டையும் சீர்குலைக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு பாதிப்படையும். உடலின் இன்சுலின் எதிர்ப்பு நிலையும் அதிகரிக்கும். இந்த நிலை குளுக்கோடாக்சிசிட்டி என்று அழைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து உடலில் அதிகரிக்கும் கொழுப்பு அமிலத்தால் செல்லுலார் செயலிழப்புக்கான சாத்தியமும் ஏற்படும். இந்த நிலை லிபோடாக்சிசிட்டி எனக் குறிப்பிடப்படுகிறது. குளுக்கோடாக்சிசிட்டி, லிபோடாக்சிசிட்டி ஆகியவை முழு செல்லுலார் அமைப்புக்கும் சேதம் விளைவிக்கும்.
உயர் ரத்த சர்க்கரை இதன் மோசமான அறிகுறி. அது ரத்தத்தை அடர்த்தியாக்கும்; ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். இதனால், உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு அவை பலவீனமடையும். இதன் காரணமாக, முழு உடலும் அழற்சியால் பாதிக்கப்படும், சிறுநீரகங்களும் கல்லீரலும் சேதமடையும்.
நீரிழிவு நோய் பொதுவாக உயர் ரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால் வரை முன்னேறி, மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம், கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது. மைக்ரோவாஸ்குலர், மேக்ரோவாஸ்குலர் போன்ற உறுப்பு சிக்கல்களுக்கு நீரிழிவு ஒரு முக்கிய காரணமாகும். இந்தச் சிக்கல்கள் நீரிழிவு நோயாளிகளின் ஆயுட்காலத்தைக் குறைப்பதோடு, கடுமையான பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்துகின்றன.
பரிசோதனை அவசியம்
சமீபத்திய ஆய்வுகளின்படி, 2019இல் இந்தியாவில் 8 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததாக மதிப்பீடுகள் காட்டுகின்றன. இது 2045இல் 113 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு நோயின் அனைத்து நிகழ்வுகளிலும் 90 சதவீதம் டைப் 2 நீரிழிவே உள்ளது.
நீரிழிவு, ப்ரீடயபிட்டீஸ் அல்லது கர்ப்பகால நீரிழிவு நோயைக் கண்டறிய வழக்கமான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சிலர் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறியற்றவர்களாக இருக்கலாம். ஆனால், பின்னர் அவர் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.
35 வயதுக்கு மேற்பட்டவராகவும், அதிக எடை கொண்டவராக அல்லது கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தால், அவருக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, ப்ரீடயபிட்டீஸ் கண்டறியப்பட்ட பெரியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் வகை 2 நீரிழிவு நோய் பரிசோதனையைச் செய்துகொள்வது அவசியம்.
துல்லியமான சிகிச்சை
கடந்த பத்து ஆண்டுகளாக, உணவுத் திட்டங்களின் மூலம் சர்க்கரை உருவாவதற்கான ஆபத்தைக் குறைத்து, சர்க்கரை அளவை இயல்பாக்கி நீரிழிவுக்கு நிவாரணம் அளிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாகத் துல்லியமான சிகிச்சையும் சாத்தியமாகி உள்ளது. மாறுபடும் வளர்சிதை மாற்றத்தை அளவிடுவதன் மூலமும், துல்லியமான சிகிச்சையை வழங்குவதன் மூலமும் நீரிழிவுக்கான நிவாரணத்தை முழுமையாக அளிக்க முடியும்.
கட்டுரையாளர், மருத்துவர்
தொடர்புக்கு: maluk@twinhealth.com