

குழந்தைகள் கை கழுவ சோப்பைப் பயன்படுத்த வேண்டாம்; சானிடைசரைப் பூசிக்கொண்டாலே போதும் என்று சொல்லும் விளம்பரங்கள் தற்போது வருகின்றன. இது சரியா?
சரியில்லை.
குழந்தைகள் கைகளுக்கு சோப்பு போட்டுத் தண்ணீரில் கழுவுவதே ஆரோக்கியம் காக்கும் வழி. சானிடைசர் கொண்டு கைகளைத் துடைத்துக்கொண்டால் போதும் என்று சொல்வது சோம்பேறித்தனத்தை வளர்க்கும் வழி!
சானிடைசர் என்பது என்ன? சோப்பும் தண்ணீரும் கிடைக்காதபோது அல்லது அடிக்கடி கை கழுவ நேரமில்லாதபோது அவசரத்துக்குக் கைகளைச் சுத்தப்படுத்த உதவும் சாதாரணக் கிருமிநாசினி. இதில் ஆல்கஹால் கலந்தது, ஆல்கஹால் கலக்காதது என்று இரண்டு வகைகள் உண்டு. ஜெல், நுரை, திரவம் எனப் பல வடிவங்களில் இது கிடைக்கிறது. அதேநேரம் இது தரும் பாதுகாப்பு, சோப்பு தரும் பாதுகாப்புக்கு இணையாகாது.
மயக்கும் நறுமணம்
ஆல்கஹால் கலந்த சானிடைசரில் 65 சதவீதம் எதில் ஆல்கஹாலும், 35 சதவீதம் ஐசோபுரோபைல் ஆல்கஹாலும் இருக்கின்றன. இந்த இரண்டும் எளிதில் ஆவியாகக் கூடியவை. இவற்றின் நறுமணம் காரணமாகக் குழந்தைகள் இவற்றை உட்கொள்வதற்கான சாத்தியம் அதிகம். 10 மில்லி அளவுக்கு மேல் உட்கொண்டுவிட்டால், இவை விஷமாகக்கூடிய ஆபத்து உள்ளது. வாந்தி, வயிற்றுப்போக்கு, வலிப்பு, சுயநினைவை இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சில நேரம் விரல்களுக்கு இடையில் சானிடைசர் முழுவதுமாக ஆவியாகாமல் இருந்துவிட்டால், சாப்பிடும்போது உணவுடன் அது உள்ளே சென்றால், அப்போதும் விஷமாகிவிடும்.
இந்தச் சானிடைசரிலிருந்து வெளிப்படும் வாசனை நுகர்வதற்கு இனிமையாக இருக்கும். ஆனால், அது சுவாச மண்டலத்தைக் கடுமையாகப் பாதிக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவது இதற்கு ஒரு உதாரணம். அடுத்ததாக, இது சருமத்தையும் பாதித்து அரிப்பு, தடிப்புகள் தோன்றுவதற்கு வழி செய்யும். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை முழுவதுமாக அழிப்பதில்லை. கைகளில் இருக்கும் அழுக்கையும் இதனால் முற்றிலுமாகப் போக்க முடிவதில்லை. இன்னொரு முக்கியப் பாதிப்பு என்னவென்றால், சானிடைசரைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, ஒரு கட்டத்தில் கிருமிகள் தங்கள் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக்கொள்கின்றன.
தண்ணீருக்கு மாற்று அல்ல!
ஆல்கஹால் கலக்காத சானிடைசரில் டிரைகுளோசான், டிரைகுளோகார்பன் ஆகிய வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இவை பூச்சிக்கொல்லிகளின் முக்கியமான சேர்க்கைப் பொருட்கள். இவை புற்றுநோயை ஊக்குவிக்கக் கூடியவை. இவை ரத்தக் குழாய்க்குள் பயணிக்கும் போது சில ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தும். இதன் விளைவால் நரம்புப் பிரச்சினைகள், மலட்டுத்தன்மை, தசை வலுவிழத்தல் போன்ற பாதிப்புகள் நாளடைவில் ஏற்படக்கூடும்.
சில சானிடைசர்களில் நறுமணத்துக்காக தாலேட் எனும் வேதிப் பொருளைச் சேர்க்கிறார்கள். இதைப் பயன்படுத்தும் கர்ப்பிணிகளுக்குப் பிறவிக் குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் ஆபத்து உள்ளதாகச் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று உறுதிசெய்துள்ளது. அடுத்து, பாரபென்ஸ் எனும் வேதிப்பொருள் சானிடைசரில் கலக்கப்படுகிறது. இது சருமத் துவாரங்களை அடைத்து, சருமத்தைத் தடிமனாக்கிவிடுகிறது; போகப்போகச் சருமப் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே, கைகளைக் கழுவ சானிடைசர்களை சோப்புத் தண்ணீருக்கு மாற்றாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே மருத்துவ உண்மை!
(அடுத்த வாரம்: புரதப் பவுடர் உடலை வளர்க்குமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com