

பார்வைக் குறைபாடு இருந்தால் சாதாரணக் கண்ணாடி போட்டு ஆரம்ப நிலையிலேயே சரி செய்துவிடலாம். பார்வைக் குறைபாட்டுக்கு உரிய நேரத்தில் கண்ணாடி போடாவிட்டால், குறைபாடு அதிகமாகிக் கண் ‘சோம்பேறி கண்’ என்ற நிலைக்குச் சென்றுவிடும். இந்த நிலையில் கண் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்துக்கு நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், நிரந்தரமாகப் பார்வையிழப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பு உண்டு.
தேவையற்ற பயம்
சிலருக்குப் பார்வைக் குறைபாடு இருக்கும். கண்ணாடி போட்டால் சரியாகி விடலாம். ஆனால் அது தெரியாமல் கண் மருத்துவமனைக்குப் போனால் ஏதாவது சொல்லிவிடுவார்கள், ஆபரேஷன் ஏதாவது செய்துவிடுவார்கள் என்று பயந்துகொண்டு கண்ணாடி போடாமலேயே பார்வை பிரச்சினையுடனேயே நடமாடிக்கொண்டிருப்பார்கள்.
ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் பார்வையைக் காப்பாற்ற முடியும்.
சுயவைத்தியம் வேண்டாம்
கண்ணில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் சுயவைத்தியம் வேண்டாம். கண்ணில் ஏற்படும் சிவப்பு எல்லாமே ‘மெட்ராஸ் ஐ’ இல்லை. சில ஆபத்தான கண் நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, கண்ட கண்ட மருந்துகளைப் போட்டு, சரிப்படாவிட்டால் கடைசியில் மருத்துவரைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்போக்கு இனியும் வேண்டாம்.