

புற்றுநோய் என்பது உடலின் சில செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும் நிலை. புற்றுநோய்களில் பல வகைகள் இருந்தாலும், அவற்றில் வாய்ப் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாகவும் பரவலாகவும் இருக்கிறது.
வாய்ப் புற்றுநோயைப் பொறுத்தவரை, பெண்களைவிட ஆண்களுக்கே அது அதிக அளவில் ஏற்படுகிறது. இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலத்தில் பெண்களும் இளம் வயதினரும் இதனால் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது.
இந்தியாவின் நிலை
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வாய்ப் புற்றுநோயின் பரவல் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், 70 சதவீத நோயாளிகள் பாதிப்பின் தீவிர நிலையிலேயே (Advanced state) கண்டறியப்படுகின்றனர். இதன் விளைவு, வாய்ப் புற்றுநோயிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக மாறிவிடுகிறது. அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு உயிர் வாழும் வாய்ப்புகூட அவர்களில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. உடனடி சிகிச்சையும், முன்னதாகவே நோயினை கண்டறிதலும் மட்டுமே, இந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் பிழைப்பு விகிதத்தை அதிகரிக்க உதவும்.
வாய்ப் புற்றுநோயின் காரணிகள்:
l புகையற்ற புகையிலை
l வெற்றிலை பாக்கு மெல்லுதல்
l அதிகப்படியான மது அருந்துதல்
l மோசமான வாய் சுகாதாரம்
l ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவைச் சாப்பிடுவது
l வைரஸ் தொற்றுகள் (ஹியூமன் பாபிலோமா வைரஸ், ஹெச்பிவி)
l புகையிலை பயன்பாடே வாய்ப் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளில் முதன்மையானது. புகையிலையை எந்த வடிவத்தில், எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும் அது புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணியாகவே திகழும். வளர்ந்து வரும் நாடுகளில் இது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.
ஏற்படும் இடங்கள்
இந்த வகைப் புற்றுநோய் உதடுகள், கன்னங்கள், உமிழ்நீர் சுரப்பிகள், ஈறுகள், நாக்கு, கடினமான அண்ணம், மென்மையான அண்ணம் உட்படப் பல இடங்களில் உருவாகலாம். வாயில் புற்றுநோய் எந்த இடத்தில் முதலில் தோன்றுகிறது என்பதைப் பொறுத்தே அது பல வகையான எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும். வாய்வழி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது சில நேரம் கடினமாகவும் இருக்கக்கூடும். பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்ட வர்களே வாய்ப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அதிர்ச்சியூட்டும் வகையில், சமீப காலத்தில் இளைய வயதினரும் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகள்
பல வகையான புற்றுநோய் களைப் போலவே, வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகளும் நபருக்கு நபர் மாறுபடும்.
l வாய் அல்லது தொண்டையில் ஏற்படும் புண் அல்லது எரிச்சல்
l வாயின் உட்புறத்தில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் தோல் இருத்தல்
l தொண்டையில் ஏதோ சிக்கியது போன்ற உணர்வு
l கரகரப்பு அல்லது குரல் மாற்றங்கள்
l தொடர்ந்து இருமல்
l மெல்லுதல், விழுங்குதல் அல்லது பேசுவதில் சிரமம்
l தாடை அல்லது நாக்கை அசைப்பதில் சிரமம்
l வாயில் உணர்வின்மை
l தாடை அல்லது கழுத்தில் வீக்கம்
l அடிக்கடி மூக்கில் ரத்தம் கசிதல்
l செவித்திறனைப் பாதிக்காத காது வலி
l விவரிக்க முடியாத எடை இழப்பு
பரிசோதனை
வாய்ப் புற்றுநோய் விரைவில் பரவக்கூடியது என்பதால், முன்கூட்டியே கண்டறிதல் மிகவும் முக்கியம். வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை வலியற்றது; சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். பல் மருத்துவர்கள் அல்லது பல் சுகாதார நிபுணர்கள் பரிசோதனையின்போது முகம், கழுத்து, உதடுகள், முழு வாய் ஆகியவற்றை ஆராய்ந்து, புற்றுநோய்க்கான சாத்திய அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என்று பரிசோதிப்பர். திசு சோதனையே புற்றுநோயை உறுதிப்படுத்தும். ஒரு சிறிய திசுத் துண்டு அல்லது உயிரணுக்களின் மாதிரியை எடுத்து, அதில் வாய்ப் புற்றுநோய்க்கான செல்கள் இருக்கின்றனவா என்று மருத்துவர் ஆய்வுசெய்வார்.
கட்டுப்படுத்தும் வழிகள்
இந்தியாவில் வாய்ப் புற்றுநோயின் சுமையைக் குறைப்பதற்குத் தடுப்பு நடவடிக்கைகள், முன்கூட்டிய நோய் கண்டறிதல், உடனடி சிகிச்சை ஆகியவை பெருமளவில் உதவும். போதுமான விழிப்புணர்வு இன்றி இருப்பதும், அறிகுறிகள் இருந்தும் உடனடி சிகிச்சை பெறாமல் தாமதிப்பதும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மது, புகையிலை பயன்பாட்டை நிறுத்துவதும், நல்ல வாய் சுகாதாரத்தைப் பேணுவதும் வாய்ப் புற்றுநோயின் ஆபத்தைக் குறைப்பதோடு, உயிரிழப்பையும் தவிர்க்க உதவும். முக்கியமாக, வாய்ப் புற்றுநோய் குறித்து போதுமான விழிப்புணர்வைப் பெறுவது மிகவும் அவசியம்.
கட்டுரையாளர், வாய்வழி நோயியல் நிபுணர்
தொடர்புக்கு: hthamizh@gmail.com