

உடலில் ஏதோ ஒரு பகுதியில் வலி ஏற்படும்போது, ஒருவர் ஓய்வு எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார். ஓய்வு எடுக்கும் சூழல், அவரது வருமான இழப்புக்கு வழிவகுக்கிறது; மருந்து, மாத்திரைகள் அதிகமாகவும், தொடர்ந்து எடுக்க இயலாத நிலையும் ஏற்படுகிறது. இந்தச் சூழலில்தான் இயன்முறை மருத்துவம் எனும் மருந்தில்லா மருத்துவம் முக்கியமான ஒன்றாக மாறுகிறது.
உடல் இயக்கத்தை ஓய்வு குறைப்பதால் இதய நோய், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் பிடிக்கு ஆளாக வேண்டிய விபரீதம் ஒருவருக்கு ஏற்படுகிறது. இதயப் பாதிப்பு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்களின் தாக்கத்தால் 47 சதவீத இறப்புகள் நிகழ்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறையும் மருத்துவச் செலவு
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இயன்முறை மருத்துவத் துறையின் பயன்பாட்டினால் மருத்துவத் துறையில் அரசு செலவினங்கள் எவ்விதம் குறைந்துள்ளன, மற்ற மருத்துவப் பணியாளர்களின் சுமை எத்தனை சதவீதம் குறைந்துள்ளன, சம்பந்தப்பட்ட நோயாளியின் மருத்துவச் செலவு எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட காரணிகளைக் கண்டறிய அரசால் அடிக்கடி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இயன்முறை மருத்துவத்தால் செலவினங்கள் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது என்பதை அந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
முதியோர்களுக்கு பாதிப்பு
முதியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இதயப் பாதிப்புகளுக்கு ஆளானவர்களில், 30 சதவீதத்தினர் முதுகு வலியாலும் மூட்டு வலியாலும் பாதிக்கப்படுகின்றனர்; 21 சதவீதத்தினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர்; 16 சதவீதத்தினர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். உடல் சமநிலை பாதிப்படைந்து கீழே விழுபவர்களின் எண்ணிக்கையை இங்கே கவனிக்க வேண்டும். இவர்கள் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அடிக்கடி சேர்க்கப்படுவது மருத்துவச் செலவினங்களை அதிகரிக்கிறது. அது அவர்களுடைய குடும்பங்கள் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் தற்போது வெற்றிகரமாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் செயல்பட்டுவருகிறது. அதே போன்று, இயன்முறை மருத்துவத் துறைக்கென்று தனிப்பட்ட ‘ஆராய்ச்சி கவுன்சில்’ அமைத்து, அதற்குப் போதிய நிதியும் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இன்று நமது நவீன வாழ்க்கை முறையில் உடல் இயக்க செயல்பாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. இதன் காரணமாக, நமது சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கையாள்வதற்கு இத்தகைய ஆராய்ச்சி கவுன்சில் உதவக்கூடும். முக்கியமாக, இயன்முறை மருத்துவத்தை எவ்விதம் பயன்படுத்தலாம் என்பதை வரையறை செய்யவும் அது உதவும். அது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; மருத்துவச் செலவுகளையும் வெகுவாகக் குறைக்கும்.
முதியவர்களின் நலன்
சமநிலை இழப்பு, டைல்ஸ் போன்ற நவீன வழுக்கும் தளங்கள் உள்ளிட்ட காரணங்களால் முதியவர்கள் வழுக்கிவிழும் ஆபத்து அதிகமாக உள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் சரிசெய்ய முடியாததாக இருக்கின்றன. சில பாதிப்புகள் உயிரைப் பறிப்பதாகவும் இருக்கின்றன. இதைக் கையாள்வதற்கு, முதியவர்களின் நலனை மையப்படுத்தி ‘கீழே விழுவதிலிருந்து தடுத்தல்’ என்பது போன்ற திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், இயன்முறை மருத்துவர்களைக்கொண்டு உடல் சமநிலை காக்கும் பயிற்சிகளை முதியவர்களுக்கு அளிக்கலாம்.
உடல் இயக்க மதிப்பீடு
ஆண்டுதோறும் உடல் இயக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு ‘Physio Check’ என்கிற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தலாம். உடல் இயக்க மதிப்பீடுகளின் அடிப்படை யில் நோயாளிகளுக்கு, அவரவருக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைப் பரிந்துரை செய்யலாம். அதன் காரணமாக, தொற்றா நோய்களின் ஆபத்தை வெகுவாகக் குறைக்க முடியும். முக்கியமாக, மருத்துவச் செலவினங்களையும் கணிசமான அளவுக்குக் குறைக்கலாம். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளை வகைப்படுத்தி அவர்களைச் சிறப்பு மருத்துவத் துறைகளுக்குப் பரிந்துரைக்க முடியும்.
முக்கியமாக, உடல் இயக்க நெகிழ்வுத்தன்மையை மூட்டு இணைப்புகளிலும், தசைகளிலும் கொண்டு வருவதன் மூலம் வலி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளிலிருந்து நோயாளிகளைக் காக்க முடியும். உடற்பயிற்சிகளைச் செய்து சொந்தமாக எவ்விதச் செலவுமின்றி தங்களது உடல்நலத்தைப் பராமரித்து வரவும் அவர்களுக்கு உதவ முடியும். இதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும். இயன்முறை மருத்துவச் சேவை தேவைப்படும் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது அதிக அளவில் பயன்தரும்.
வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும்
செப்டம்பர் 8 அன்று உலக பிசியோதெரபி தினம் கடைப்பிடிக்கப்படும் வேளையில், இந்தியாவில் இயன்முறை மருத்துவத் துறையின் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில், அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 240 இயன்முறை மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பெருகிவரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குவதோடு அனைத்து அரசுத் தலைமை மருத்துவமனைகளிலும் ‘பிசியோதெரபிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்’ என்கிற பணியிடத்தை உருவாக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் சராசரி ஆயுட்காலம் 69.8 ஆண்டுகள் என உள்ள நிலையில், இயன்முறை மருத்துவத் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், ஆயுட்காலத்தை நீட்டிக்க ஆகும் செலவைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்க முடியும்.
கட்டுரையாளர், இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்ஸ் அமைப்பின் தலைவர்,
தொடர்புக்கு: krishnafpt@gmail.com