நலம் நலமறிய ஆவல்: தேவையற்ற கை நடுக்கம் ஏன்?

நலம் நலமறிய ஆவல்: தேவையற்ற கை நடுக்கம் ஏன்?
Updated on
1 min read

இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் திருநெல்வேலியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஜி. ராமானுஜம்:

என் கணவருக்குக் கை நடுக்கம் உள்ளது. அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அவருக்கு அலுவலக டென்ஷனும் பயமும் இருக்கின்றன. அவர் யோகா, தியானமெல்லாம் செய்கிறார். இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏன் இந்தப் பிரச்சினை வருகிறது, இதற்கு ஏதேனும் சிகிச்சை உண்டா?

- பி. ராஜதிவ்யா, மதுரை

கை நடுக்கம் என்பது ஒரு அறிகுறியே. பல நோய்களால் இப்படி ஏற்படலாம். உங்கள் கணவரின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. ஐம்பது - அறுபது வயதுக்கு மேற்பட்டவரானால் முதுமையால் ஏற்படும் கை நடுக்கமாக இது இருக்கலாம். அப்படியிருந்தால், அதற்குப் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. ஒருவேளை பிரச்சினையாக இருந்தால், மருந்து கொடுத்துச் சரிப்படுத்தலாம்.

முதுமை அடைந்தவர்களுக்கு வரும் இன்னொரு தீவிர நடுக்கம் பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாதம். இது மிகத் தீவிரமான நடுக்கம். அத்துடன் நடை, சிந்தனை போன்றவற்றையும் இது மெதுவாக்கிவிடும். இதற்கு நரம்பியல் நிபுணரிடம் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். தைராய்டு சுரப்பிப் பிரச்சினைகளாலும் சில வகையான மருந்துகளாலும் கை நடுக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ளது.

இளம் வயதில் கை நடுக்கம் ஏற்பட மனப் பதற்றமும் ஒரு முக்கியக் காரணம். கூடுதலாகப் படபடப்பு, தூக்கமின்மை போன்ற காரணங்களும் இருக்கும். மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் இதைச் சரியாக்கலாம். காப்பி, டீ போன்றவற்றை அதிகமாகக் குடித்தாலும், அதிகமாக மது குடித்தாலும் கை நடுக்கம் ஏற்படலாம். சிலருக்கு எந்தக் காரணமும் இன்றிக் கை நடுக்கம் ஏற்படலாம் (Essential Tremor). இதையும் மருந்துகள் கொடுத்துக் கட்டுப்படுத்த முடியும். அதனால் தேவையில்லாமல் பயப்பட அவசியமில்லை.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in