

மாரடைப்பைத் தடுப்பது எப்படி என்கிற கேள்விக்கு உங்கள் மரபணுவை அறிந்து கொண்டால் ஓரளவு தெளிவு பிறக்கும். மேற்கத்திய நாடுகளைவிட தெற்காசிய மக்கள் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
புகைபிடித்தல், புகைபிடிப்பவரின் அருகில் இருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முகக்கவசங்களை அணிய வேண்டும்.
கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இவை இதயத்தை அமைதியாகக் கொன்றுவிடக்கூடியவை.
உங்களுக்கு 20-30 ஆண்டுகளாக வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், உங்கள் 40, 50 வயதை எட்டுவதற்குள் இதயம் ஏற்கெனவே சேதமடைந்திருக்கும்.
மிதமான உடல் செயல்பாடுகளைத் தேர்வு செய்யுங்கள்:
மிகக் குறைவான அல்லது அதிக உடல் செயல்பாடு உங்கள் இதய ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். நடைப்பயிற்சி, யோகா அல்லது நீச்சல் போன்ற மிதமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பரிசோதனைகளைச் செய்ய வேண்டாம்
இதய நோய்க்கான பல ஆபத்து காரணிகள் உங்களிடம் இருந்தால், ஆண்டுக்கு இரண்டு பரிசோதனைகள் போதும் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் செய்தால் போதும். ஆபத்து காரணிகள் இல்லையெனில், வருடாந்திர பரிசோதனை போதுமானது. எப்போதும் முதன்மை பரிசோதனையுடன் தொடங்குவது சிறந்தது. உடலுள் நுழையும் சோதனை தேவைப்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம்.
மாரடைப்பைத் தடுப்பது எப்படி?
டிரெட்மில் சோதனை கள், ஈசிஜி, ஈஈஜி ஆகியவை மட்டுமே இதயப் பிரச்சினைகளைக் கண்டறிய உதவும் நோயறிதல் சோதனைகள் அல்ல. முதன்மை நோயறிதலுக்கான தொழில்நுட்பம் வெகுவாக மாறியுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
ரத்தப் பரிசோதனைகள்
சி-ரியாக்டிவ் புரதம்: இந்த அழற்சிப் புரதம் அதிக அளவில் இருப்பது மாரடைப்புக்கான அதிக ஆபத்தைக் குறிக்கும்.
பிளாஸ்மா செராமைடுகள்: ரத்தத்தில் இது இருப்பது கண்டறியப்பட்டால், இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புக்கான அறிகுறியாக அது எடுத்துக்கொள்ளப்படும்.
பிரைன் நேட்ரியூரிடிக் பெப்டைடுகள்: இது கண்டறியப்பட்டால் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதில் இருக்கும் பிரச்சினைகளை உணர்த்தும் அறிகுறியாக அமையும். இதயம் பம்ப் செய்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் இந்த ஹார்மோன் அடிக்கடி சுரக்கப்படுகிறது.
கால்சியம் ஸ்கோரிங்: இதயத் தமனியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் அளவைத் தீர்மானிக்க இது உதவும்.
ட்ரோபோனின் டி: இந்தப் புரதத்தின் அளவு அதிகரித்தால் இதயத்துக்கான ஆபத்தும் அதிகரிக்கும்.
உடலுக்கு வெளியே நடத்தப்படும் பரிசோதனைகள்:
சி.டி. இதய ஸ்கேன்: ஒரு மேம்பட்ட சி.டி. ஆஞ்சியோ ஸ்கேன் ஒரு நொடியில் இதயத்தின் முப்பரிமாணப் படத்தைத் தந்துவிடும். இது அடைப்புகள், தமனிகளின் நிலை உள்ளிட்ட இதய ஆரோக்கியத்தின் முக்கிய அளவுருக்களைப் படம்பிடித்துக் காட்டும்.
எக்கோ கார்டியோகிராபி: உயர் அதிர்வெண் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி இதயத்தின் நிகழ் நேரச் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் முக்கியமான கருவி இது.
கையடக்கப் பரிசோதனைக் கருவிகள்: திறன்பேசிகள் முதல் விழித்திரை ஸ்கேனர்கள் வரையிலான கையடக்க கருவிகள் இதயத் துடிப்பைக் கண்காணிக்க இ.சி.ஜி.யைப் பயன்படுத்துகின்றன. இவை பாதிப்பை உணர்த்தும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கும்.
குறைந்தபட்சமாக உடலுக்குள் நடத்தப்படும் பரிசோதனைகள்:
டிரான்சோபேஜியல் எக்கோ கார்டியோகிராபி: தொண்டை வழியாகச் செருகப்பட்ட குழாயின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு, ரத்தக் கட்டிகள் அல்லது பிற அடைப்புகளைக் கண்டறிய உதவும்
கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி: இந்த ஆய்வில் இதயத் தசையில் செருகப்படும் வடிகுழாய் மூலம் ஏதேனும் அசாதாரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்
| திடீரென உதிர்ந்த நட்சத்திரங்கள் மாரடைப்புக்குப் பலியான சில இளம் பிரபலங்கள்: புனீத் ராஜ்குமார் |
(2021 அக்டோபர் 29 அன்று 46 வயதில் இறந்தார்) பாடகர், நடிகர், தயாரிப்பாளரான இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கிருஷ்ணகுமார் குன்னத் (பாடகர் கே.கே.) |
(2022 மே 31 அன்று 53 வயதில் இறந்தார்) அஜீரணம் என்று கருதி ஆன்டாசிட்களை அவர் உட்கொண்டார். கொல்கத்தாவில் நேரடி நிகழ்ச்சிக்குப் பிறகு சுருண்டு விழுந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது சித்தார்த் சுக்லா |
(2021 செப்டம்பர் 2 அன்று 40 வயதில் இறந்தார்) நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஒரே இரவில் மாரடைப்பால் இறந்ததாகவும் கூறப்படுகிறது ராஜ் கௌஷல் |
| (2021 ஜூன் 30 அன்று 49 வயதில் இறந்தார்) படத் தயாரிப்பாளரான இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏவி பரோட் |
(2021 அக்டோபர் 15 அன்று 29 வயதில் இறந்தார்) முன்னாள் யு-19 கிரிக்கெட் அணிக் கேப்டனும் சௌராஷ்டிரா கிரிக்கெட் வீரருமான இவர், அகமதாபாத்தில் தனது வீட்டில் ஐபிஎல் இறுதிப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். |