Published : 27 Aug 2022 11:01 AM
Last Updated : 27 Aug 2022 11:01 AM

மாணவர் நலன் காக்க ஆற்றுப்படுத்துநர் அவசியம்

ப.சந்திரசேகர்

உலக சுகாதார நிறுவனம் இளமைப் பருவத்தை 10 முதல் 19 வயது வரை யிலான காலம் என வரையறுக்கிறது. இளமைப் பருவம் அதிக ஆபத்தை எதிர் கொள்ளும் காலகட்டமாகும். ஆகவே, வளரும் இளம்பருவத் தினரின் மனநலத்தைப் பாதுகாப்பது மிகமிக அவசியம்.

ஏனென்றால் ஆரோக்கியமான மனம் மட்டுமே போட்டிகள், சவால்களைத் தாங்கி தனித் திறன்களை வெளிப்படுத்த முடியும். ஆனால், இன்றைய சூழலில் இளம்பருவத்தினர் உடல், மன, உணர்வு, சமூகரீதியாகப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

பெற்றோருடன் ஏற்படும் மோதல், பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப்பட முடியாதபோது ஏற்படும் குற்ற உணர்வு, மற்றவர்களுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டப்படுவது, தந்தையின் குடிப்பழக்கம், குடும்ப வன்முறையால் ஏற்படும் மனஅழுத்தம், பெற்றோரின் முறை தவறிய உறவுகள், மணமுறிவு பெறும் பெற்றோர், புறக்கணிக்கப்பட்ட அன்பு, ஒற்றைப் பெற்றோர், தந்தையின் மறுமணம், குடும்ப உறுப்பினர்களின் திடீர் மரணங்கள், குடும்ப நபர்களின் மன, உடல்நலப் பாதிப்புகள், பொருளாதாரப் பிரச்சினைகள், வறுமை, கல்வி சார்ந்த மனஅழுத்தம், தேர்வை, தோல்வியை ஏற்றுக்கொள்வதில் பயம், படித்துவிட்டுச் சென்றாலும் தேர்வு அறையில் மறந்துவிடுவது, நடத்தைப் பிரச்சினைகள், கற்றல் குறைபாடு, ஆசிரியர்–மாணவர் உறவில் விரிசல், சாதிப் பாகுபாடு, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இல்லாமை, கவனச் சிதறல்கள், பள்ளி மறுப்பு, இடை நிற்றல், பாலியல் ஈர்ப்பினால் ஏற்படும் குழப்பங்கள், ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாடு, கடுமையான தண்டனைகள், மற்றவர்கள் முன்பு அவமானப்படுத்தப்படுதல், பதற்றம், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந் தால் பெரிய சேதங்களைத் தவிர்க்கலாம்.

பள்ளி மனநலத் திட்டம்

பள்ளிகளில் மனநல ஆற்றுப்படுத்துநர் பணியமர்த்தப்படுவது நம் நாட்டில் எட்டாக்கனியாகவே உள்ளது. ஆச்சார்யா நரேந்திர தேவ் கமிட்டி, 1938-ம் ஆண்டிலேயே கல்வியில் ஆலோசனை, வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. 2001-ல், இந்தியாவின் மிகப்பெரிய கல்வி வாரியங்களில் ஒன்றான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், பயிற்சி பெற்ற மனநல ஆற்றுப்படுத்துநரைத் தங்கள் பள்ளிகளில் கட்டாயமாக்கியது.

தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி சபை 2005-ல்மனஅழுத்தம் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளித்து, மனஅழுத்தத்தைக் குறைக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்துக்கொள்வதை அங்கீகரித்தது.

பள்ளி மனநலத் திட்டத்தைச் செயல்படுத்திய முதல் மாநிலம் கோவா; கோவா கல்வி மேம்பாட்டு ஒத்துழைப்புச் சட்டம் 2003-ன் கீழ்,மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தனிநபர் மற்றும் குழு ஆலோசனை, வழங்குவதற்காக 550 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 55 பள்ளி ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

ஆற்றுப்படுத்துநரின் அவசியம்

மாணவர்களின் உணர்வு, சமூக நடத்தைத் தேவைகளை நிவர்த்திசெய்து மன ஆரோக்கியம், நல்வாழ்வை மேம்படுத்து வதற்கும் ஆபத்துக் காரணிகளைக் களைந்து பாதுகாப்புக் காரணிகளை அதிகரிப்பதே பள்ளியில் மனநல ஆற்றுப்படுத்துநர் வழங்கும் ஆலோசனையின் முதன்மை நோக்கம்.

மேலும், பள்ளி நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல், அவர்களின் பலத்தை அடையாளம் காணுதல், வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனைகளில் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஆற்றுப்படுத்துநரின் பங்களிப்பு அவசியமாகிறது.

நம்பிக்கையை விதைப்போம்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள முழுத் திறனை வெளிக்கொணர்வதே முழுமையான கல்வி என்றார் விவேகானந்தர். ஆனால், மதிப்பெண்களை நோக்கிய மாணவர்களின் போராட்டம், இதற்கு எதிர்த்திசையில் அமைந்துள்ளது. மாணவரின் பிரகாசமான எதிர்காலத்திற்காக, போட்டி மிகுந்த உலகை எதிர்கொள்ள, சிறந்த அறிவாளியாக்க, உயர்ந்த பண்பாளனாக்க இத்தகைய அழுத்தங்கள் அவசியமானவை என வாதிடும் பெற்றோர்களே அதிகம்.

இதன் விளைவு, காலையிலிருந்து இரவுவரை படிப்பு சார்ந்தும், இதர திறன்களை வளர்த்துக்கொள்ளவும் பந்தயக் குதிரைகளைப் போல மாணவர்களை விரட்டுவதும், சக்திக்கு மீறிய அழுத்தங்கள் கொடுப்பதும் அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். இப்படி அவர்களின் நலனுக்காக மட்டுமே என்று முன்வைக்கப்படும் அனைத்து முயற்சிகளும் எங்கோ ஓரிடத்தில் தவறும்போது செய்வதறியாமல் திணறுகிறோம்.

புதிதாக மாற்றங்கள் வேண்டும்

மேலைநாட்டுப் பள்ளிகளில் மாணவர்களின் மனப்பகிர்வுக்கு எனத் தனியாக ஒரு தினத்தை ஒதுக்கி, அன்றைய தினத்தில் ஒவ்வொரு மாணவரும் மனம் திறந்து பேசுகிறார்கள். அப்பொழுது அவர்களது தடுமாற்றங்கள், சிரமங்கள், மனஅழுத்தங்களை வெளியே பரிமாறுகிறார்கள்.

டெல்லி அரசும் பள்ளி மாணவர்களின் மனஅழுத்தங்களுக்குத் தீர்வாக, ‘ஹேப்பினஸ் கிளாஸ்’ என்ற மகிழ்ச்சி வகுப்புகளைத் தனியாக உருவாக்கியுள்ளது.

பள்ளிகள் தோறும் தொடுதிரைக் கணினிகளுடன் நவீன பாடத்திட்டங்களைக் கொண்டுவருவது பற்றிப் பேசுகிறோம். ஆனால், மாணவர்களின் மனதுக்குள் பயணிக்கத் தவறிவிடுகிறோம். இப்பொழுது ஆங்காங்கே அரசுப் பள்ளிகளில் நடக்கும் மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை.

இருப்பினும் மனம்திறந்த உரையாடல்களும், முறையான வழிகாட்டுதலும், கனிவான கண்டிப்பும், அன்பான அரவணைப்பும், மாணவர்களின் அழுத்தங்களைப் போக்கி, மனக் கதவுகளைத் திறந்துவிடும்பொழுது அவர்களின் ஒட்டுமொத்த திறமையும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையும் ஆக்கப்பூர்வமாக வெளிவரும் என்பதே உண்மை.

அடையாளம் காணப்பட வேண்டியவை

நேர்மறையான மன ஆரோக்கியம்: வாழ்க்கையின் சவால்கள், மன அழுத்தங்களை எப்படி எதிர்கொள்வது, தாழ்வு மனப்பான்மையைப் போக்கி தன்னம்பிக்கையை வளர்ப்பது.

தற்கொலை: தேர்வில் தோல்வி, காதல் தோல்வி அல்லது பிற தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளால் தற்கொலை செய்துகொள்வதைத் தடுத்துத் தோல்வியையும் வெற்றியையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வழியமைத்தல்.

மது-போதை: இப்பழக்கத்தால் ஏற்படும் உடல், மனநிலை மாற்றங்கள், அதனால் ஏற்படும் ஒட்டுமொத்த தீமைகள் பற்றியும், நண்பர்களின் வற்புறுத்தலிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டுதல்.

பள்ளி தொடர்பான பிரச்சினைகள்: நல்ல மாணவர்களுக்கு மட்டுமே ஊக்கம் அளிக்கப்படும் முறையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி அணுகுமுறை தரம் சார்ந்ததாக இல்லாமல், திறன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

இளம்பருவ பிரச்சினைகள் மற்றும் பாலியல் சீண்டல்கள்: மாணவிகளின் மாதவிடாய், மாணவர்களின் இரவு உமிழ்வு உள்ளிட்ட பருவமடைதல் பற்றிய அறிவியல் விளக்கத்தையும், பாலியல் அத்துமீறலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு திறன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர், உளநோயியல் துறை உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: pjcsekar@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x