

இந்த வாரக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அபிஷேக் லுல்லா:
எனது நண்பருடைய மகள் ஆட்டிசம் எனப்படும் மன இறுக்க நோயால் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அலோபதியில் சிகிச்சை எடுத்துப் பார்த்தும், பெரிதாகப் பயனில்லை. இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு கிடைக்குமா?
- வி. ஸ்ரீதர், மதுரை
ஆட்டிசம் என்பது சமூகத் தொடர்பு மற்றும் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த நோயை மூன்று வயதாகும்போதுதான் திட்டவட்டமாகக் கண்டறிய முடியும். இதற்குச் சிகிச்சை அளிக்காமல் விடக்கூடாது. ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை சீரில்லாத உணவு முறையும், அடிக்கடி ஏற்படும் தொற்று நோயுமே இதற்குக் காரணம். பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஏதோ ஒரு விதமான செரிமானக் குறைபாட்டை வெளிப்படுத்துவார்கள். இதனால் மலச்சிக்கல், வயிறு உப்புசம் அடைதல் என்ற உபாதைகள் ஏற்படலாம்.
செரிமானக் குறைபாட்டால் உடல் உறுப்புகளின் வளர்ச்சி குன்றுகிறது, செரிமானத்தைச் சீரமைக்கும்போது நோயின் தாக்கம் குறைகிறது. நடத்தை சீரமைப்பு சிகிச்சையோடு சேர்த்து உணவுக் கட்டுப்பாட்டு சிகிச்சையும் இதற்கு அவசியம்.
ஆட்டிசத்துக்கான ஆயுர்வேத முறை சிகிச்சை இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது:
1. சீரகம், பூண்டு, மிளகு, பெருங்காயம், சில மூலிகைகளைக் கொடுப்பதன் மூலம் செரிமானத்தைச் சீரமைக்கலாம்.
2. பிரம்மி, வச்சா போன்ற மருத்துவச் சிறப்பு பெற்ற மூலிகைகளைப் பசு நெய்யில் பதப்படுத்திக் கொடுக்க, மூளை நரம்புகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். தசைகள் வலுவடையும். தங்கப் ப்ராஷணம் என்பது ஆட்டிசத்துக்கு சிறந்த ஆயுர்வேத மருத்துவ முறை. உரிய ஆயுர்வேத மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெற்ற பிறகே, இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனக்கு மூளையில் மேல்வளைய நீர்க்கட்டி (Arachnoid cyst) உள்ளது. அலோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற முறைகளில் சிகிச்சை எடுத்தும் எனக்கு இந்த நீர்க்கட்டி குறையவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எனக்கு உதவி செய்ய முடியுமா?
- எம்.ஆர். ரஹ்மான், துபாய்
மேல்வளைய நீர்க்கட்டிகள் பொதுவாகப் பெரிதாக இருக்கும்போதிலும், அவற்றுக்கான அறிகுறிகள் வெளிப்படையாகவும் உடனடியாகவும் தெரிவதில்லை. எனவே, உங்களுடைய நோய்க்குறிகள், மருத்துவ ஆய்வு முடிவுகள் எதுவும் தெரியாமல், எதையும் குறிப்பிட்டுக் கூறுவது சாத்தியமில்லை. தலைவலி, வலிப்பு, நடத்தை மாற்றங்கள், தளர்ச்சி, பக்கவாதம் போன்றவை இந்தக் கட்டிக்கான சில அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் அனைத்தையும் ஆயுர்வேதத்தில் குணப்படுத்த முடியும். ஆனால், கட்டியைக் கரைப்பது கடினம். அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதே நம் கையில் உள்ள தீர்வு.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002