

இப்போதெல்லாம் பலரும் சட்சட்டென எடையைக் குறைக்கிறார்கள். அதைப் பெரிய சாதனை போலச் சொல்கிறார்கள். இப்படித் திடீர் எடை குறைப்புக்குப் பின்னால் இருப்பது ‘கிராஷ் டயட்’ எனப்படும் திடீர் உணவுக் கட்டுப்பாடு. இது பல நேரங்களில் மோசமாக முடிவதும் உண்டு. எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்துவதற்கு முன் யோசிக்க வேண்டியவை:
# டயட்டுக்காக உணவைக் கட்டுப்படுத்தும்போது உடலுக்கு அத்தியாவசியமான சோடியம், பொட்டாஷியம் போன்ற உப்புகள் தேவையான அளவு கிடைக்காமல் போகலாம். இவை தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது.
# டயட்டைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்கும்போது எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்), ரத்தசோகை போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.
# எப்போதுமே அதிரடி எடைக் குறைப்பை மேற்கொள்வதைவிட படிப்படியாக, மெதுவாக எடையை இழப்பது நல்லது. அப்போது மீண்டும் திடீரென உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியும்.
# போதுமான அளவு ஊட்டமுள்ள உணவு உடலுக்குள் செல்லவில்லை என்றால் மனரீதியான பிரச்சினைகள், மன அழுத்தம் போன்றவையும் ஏற்படக்கூடும்.