

நாம் குறுக்கிடும் பத்து பேரில் ஒருவருக்காவது இன்றைக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய்ப் பிரச்சினை இருக்கிறது. இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், ஆபத்தான பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் கவலை இல்லை. சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கோ, உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம்.
இந்த ‘ஆப்’ நீரிழிவு நோயாளிகளுக்கான பிரத்யேக உணவு முறைகளைப் பரிந்துரைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டிய உடற்பயிற்சி முறைகள், சர்க்கரையின் அளவு கூடினாலோ குறைந்தாலோ கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் மன அழுத்தத்துக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குகிறது. நீரிழிவு நோய்க்குக் கைவசம் உள்ள மருந்துகளின் அளவு, மருந்துகளின் விவரம் போன்றவையும் இதில் கிடைக்கிறது. நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் அளவு, பயன்பாடு தொடர்பாகவும் மருத்துவ முறை சார்ந்தும் மருத்துவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், மருந்துகள் தொடர்பாக நேரடி ஆலோசனை பெறுவதே சிறந்தது.