

தினமும் காலையில் எழுந்ததும் படுக்கை அறை சுவரில் இருக்கும் ஏதாவது ஒரு படத்தைக் குறிப்பிட்ட தொலைவில் இருந்து ஒவ்வொரு கண் வழியாகத் தனித்தனியாகப் பார்க்கவேண்டும்.. இரண்டு கண்ணிலும் பார்வை ஒரே மாதிரியாகத் தெரிந்தால் பிரச்சினை எதுவும் இல்லை. என்றாவது ஒரு நாள் ஒரு கண்ணில் பார்வை நன்றாகத் தெரிந்து இன்னொரு கண்ணில் சற்றுத் தெளிவில்லாமல் தெரிந்தாலோ அல்லது இரண்டு கண்ணிலுமே முன்பு போல் படம் தெளிவில்லாமல் இருந்தாலோ, கண் மருத்துவரிடம் உடனே ஆய்வு செய்துகொள்வது நல்லது. இதன்மூலம் பிரச்சினை ஏதாவது இருந்தால்கூட ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும்.
40 வயதில்..
40 வயதை நெருங்கும்போது ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருக்கிறதா என்று பொதுவாக ஆய்வு செய்துகொள்ள வேண்டும். இந்த வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை கண்களையும் ஆய்வு செய்துகொள்ள வேண்டும். வெள்ளெழுத்துப் பிரச்சினை இருந்தால் கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கண்நீர் அழுத்தத்துக்கு உரிய ஆய்வு முக்கியம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன்மூலம் நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பிலிருந்து தப்பலாம்.