ஆக. 1 – 7 | உலகத் தாய்ப்பால் வாரம்: தாய்ப்பால் ஊட்டும் அன்னைக்குப் புரதம் அவசியம்

ஆக. 1 – 7 | உலகத் தாய்ப்பால் வாரம்: தாய்ப்பால் ஊட்டும் அன்னைக்குப் புரதம் அவசியம்
Updated on
2 min read

புதிதாகப் பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்திற்குத் தாயின் பாலையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. பிறந்த முதல் ஆறு மாத காலம் குழந்தையின் ஊட்டச்சத்திற்கான முதன்மை ஆதாரமாகத் தாய்ப்பாலே இருக்கிறது.

எனவே, தாய்ப்பாலூட்டும்போது தனது உடலுக்குள் செல்கின்ற ஊட்டச்சத்துகளின் மீது முழுக் கவனம் செலுத்துவது ஒரு தாயின் முக்கியமான கடமை.

தாய்ப்பாலூட்டும் அன்னையர்கள் புரத உணவை உட்கொள்வது முக்கியமானது. ஏனெனில், போதுமான அளவு புரதச்சத்தை உட்கொள்வது அத்தியா வசியமாக இருக்கின்ற ஒரு முக்கியமான காலமாகத் தாய்ப்பால் ஊட்டும் காலம் இருக்கிறது.

கீதா ஹரிப்பிரியா
கீதா ஹரிப்பிரியா

அதிகப் புரதமுள்ள உணவைச் சாப்பிடுவதன் பலன்கள்:

# ஆரோக்கியமான தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும்.

# பச்சிளம் குழந்தையின் வளர்ச்சிக்கும், சிறப்பான பராமரிப்பிற்கும் உதவும்.

# திசுக்களையும் தசைகளையும் கட்டமைப்பதன் வழியாக உடல் எடை அதிகரிப்பைத் தூண்டிவிடும்.

# ஹார்மோன்கள், என்சைம்கள் உற்பத்தியிலும், நோய் எதிர்ப்பாற்றலை பெருக்குவதிலும் உதவுகிறது.

கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலூட்டும் அன்னையருக்குப் பயனளிப்பதாக இருக்கின்றன:

l கோழிக்கறி (சிக்கன்)

தாய்ப்பாலூட்டும் அன்னையருக்கு அதிகப் பயனுள்ளதாக இருக்கின்ற புரதம் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கோழிக்கறி கொண்டிருக்கிறது.

புரதம் தவிர இரும்புச்சத்து, வைட்டமின் பி 12, கோலின் உயிர்ச்சத்து ஆகியவற்றுக்கான சிறந்த ஆதாரமாகவும் கோழிக்கறி திகழ்கிறது. பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களாகவும் இவை இருக்கின்றன.

l முட்டை

மனித உடலின் தினசரி புரதத்தேவையைப் பூர்த்திசெய்வதற்குச் சிறந்த வழிமுறையாக முட்டை இருக்கிறது. தாய்ப்பால் ஊட்டும் அன்னையருக்கு எளிதாகவும், விரைவாகவும் சமைத்து உண்ணக்கூடிய உணவாக முட்டை இருக்கிறது. கோலின், வைட்டமின் ஏ, பி 12, டி, கே, செலேனியம், உப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருக்கின்றன.

வைட்டமின் டியின் ஒரு முக்கியமான ஆதாரமாக முட்டை திகழ்கிறது. இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பச்சிளம் குழந்தையின் உடல் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு உதவுகின்றன; அதன் எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்துகின்றன. பிரசவித்திருக்கும் தாயின் உணவுத் தொகுப்பில் முட்டை அத்தியாவசியம் இடம்பெற வேண்டும்.

l அவகாடோ (வெண்ணெய் பழம்)

பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவைப் படும் கூடுதல் ஆற்றலை வழங்குகின்ற ‘ஆரோக்கியமான கொழுப்பு’ அவகாடோவில் இருக்கின்றன; உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை முறைப்படுத்தவும் இவை உதவு கின்றன. உடலின் மைய நரம்புமண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சி, மூளை செயல் பாட்டிற்கு உதவுகின்ற புரதம், வைட்டமின் இ, ஃபோலேட் ஆகிய ஊட்டச் சத்துக்களும் இப்பழத்தில் அதிகளவில் இருக்கின்றன.

தாய்ப்பால் ஊட்டும் அன்னையருக்கும், அவர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கும் செல் உருவாக்கத்திற்கு அவசியமான அமினோ அமிலங்களின் சிறப்பான ஆதாரமாகவும் அவகாடோ (வெண்ணெய் பழங்கள்) இருப்பது இதன் தனிச்சிறப்பு.

l சியா விதைகள்

கால்சியம், புரதம், நார்ச்சத்து, மக்னீசியம் அதிகளவில் சியா விதைகளில் இருக்கின்றன. ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களையும் அதிக அளவில் இவை வழங்குகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, நீண்ட நேரத்திற்குத் தாய், குழந்தையின் வயிறு நிறைந்திருப்பதை உறுதிசெய்யும். சிறப்பான சுவையையும் இவை கொண்டிருப்பதால் சாலட்கள், தானியங்கள், ஸ்மூத்திகள் உள்ளிட்ட பிற உணவுகளோடும் சியா விதைகளைச் சேர்த்துக்கொள்ள முடியும்.

l சால்மன் மீன்

பாலூட்டும் தாய்மார்களுக்கு சால்மன் மீன் ஒரு மிகச்சிறந்த உணவு. ஓர் உயர்தரப் புரத ஆதாரமாக இது இருப்பதோடு, ஒமேகா – 3 கொழுப்பு அமில டி.எச்.ஏ.வின் மிகச்சிறந்த ஆதார உணவுகளுள் ஒன்றாகவும் சால்மன் திகழ்கிறது. குழந்தையின் கண், மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்ற ஒரு வைட்டமின் ஆக ஒமேகா – 3 கொழுப்பு அமில டி.எச்.ஏ. அறியப்படுகிறது.

ஆரம்பநிலை குழந்தைப்பருவ வளர்ச்சிக்கு அத்தியாவசியமான தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்ற செலினியம் என்ற வைட்டமினும் சால்மன் மீனில் இருக்கிறது. தாய்ப்பாலில் காணப்படுகின்ற மற்றொரு வைட்டமினான அயோடினும் சால்மன் மீனில் இருக்கிறது. இந்த வைட்டமின் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது.

l ஊட்டச்சத்துகள் அவசியம்

உடல்நலத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி, மார்பகத்தில் பால் சுரப்பையும் ஊட்டச் சத்துக்கள் ஊக்குவிக்கின்றன. குழந்தையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இது அத்தியாவசியமானது. துணை உணவுப்பொருட்களைச் சாப்பிடுவதில் இருந்து, ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிடுவது வரை பல்வேறு வழிமுறைகளில் தங்களது ஊட்டச்சத்துத் தேவைகளை தாய்ப்பாலூட்டும் பெண்கள் பூர்த்திசெய்துகொள்ள முடியும்.

அத்தியா வசியமான ஊட்டச்சத்துக்களை பாலூட்டும் காலத்தில் எடுத்துக்கொள்வது தாயின் உடல்நலத்திற்கு மட்டுமின்றி, பச்சிளம் குழந்தையின் வளர்ச்சிக்கும் நன்மையைத் தரும்.

கட்டுரையாளர், மகப்பேறியல், மகளிர் நோயியல் நிபுணர்

தொடர்புக்கு: haripriyageetha@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in