இயற்கை 242X7: பெருமணல் உலகம்

இயற்கை 242X7: பெருமணல் உலகம்
Updated on
2 min read

கண்ணெதிரே விரிந்து பரந்திருக்கிறது பெரு மணல் உலகம். தொல்காப்பியம் சொன்ன பெரு மணல் உலகம். கடற்கரையில் அமைந்துள்ள மணல் திட்டுகள், மணல் மேடுகள், மணல் குன்றுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்த இந்தச் சூழலமைப்பை ஆங்கிலத்தில் Coastal sand sharing system என்பார்கள். சங்க இலக்கியம் இதனை ‘எக்கர்’ என்ற ஒற்றைச் சொல்லால் சுட்டுகிறது.

எக்கர் - இது இயற்கையின் கைகள் வனைந்தவை. காற்றின் விரல்கள் மணலை வருடிவருடி இதைச் சமைக் கின்றன. ஆறுகள் கொண்டுவரும் மணல் கடலால் கடையப்பட்டு அலைகளால் கரையொதுங்க, காற்று அதனை மணல் குன்றுகளாக மாற்றுகிறது. இந்த அறிவியல் உண்மையை மிக அழகாக ‘முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்’ என்று அழகாக விளக்குகிறது நற்றிணை. மொத்தம் ஐந்து கட்டங்களாக இம்மணல் குன்றுகளின் உருவாக்கம் நடைபெறுகிறது.

கானலும் நிலத்தடி நீரும்

முதல் கட்டத்தில் பல பகுதிகளுக்கும் மணல் பரவலாக எடுத்துச்செல்லப்பட்டு மணல் திட்டுகள் தோன்றும். இரண்டாவது கட்டத்தில் காற்றின் திசைக்கும் வேகத்துக்கும் ஏற்ப மணல் அலைவடிவ மேடுகளாகப் படியும்.

அவ்வாறு தொடர்ந்து படிவதால் அதன் உயரம் அதிகரித்து மணல்மேடுகளாக மாறும். காற்றின் வேகம் அதிகமிருக்கும் காலத்தில் மணல்மேட்டின் மேற்புற மணல் அரித்தெடுக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் குவியும். விளைவு, மற்றொரு புதிய மணல்மேடு உருவாகும்.

காற்றின் தொடர் இயக்கத்தால் மணல்மேட்டில் தொடர்ந்து மணல் படிய மேடு குன்றாக மாறும். பிறகு குன்றின் காற்று வீசாத எதிர்பக்கத்தில் காற்றின் ஈரப் பதத்தைக் கொண்டு வளரும் முள்ளியும் (ராவணன் மீசை) அடப்பங்கொடிகளும் முளைக்கின்றன.

எங்கெல்லாம் இவை காணப்படுகின்றனவோ அங்கே இயற்கை நன்னீரைச் சேமிக்கத் தொடங்கிவிட்டது என்பது பொருள். தொடர்ந்து பிறவகைத் தாவரங்களும் முளைத்து வளர்ந்து, மழைநீரை ஈர்த்து நிலத்தடிக்குள் நீர்ச் சேமிப்பைத் தொடங்கும். மணலும் தாவரமும் நீரும் கலந்த இத்தொகுப்பையே சங்க இலக்கியம், ‘கானல்’ என்று அழைத்தது.

நன்னீர் தடுப்புச்சுவர்

மூன்றாவது கட்டத்தில் மணற்குன்றின் ஒருபுறத்தில் அங்குள்ள நன்னீரைப் பயன்படுத்திப் பூவரசு, வேம்பு, ஒதியன் போன்ற மரங்களும் தாழை போன்ற மணற்பரப்புத் தாவரங்களும் வளர்கின்றன. விதைப்பரவலில் பறவைகளின் பங்கு கணிசமானது. அதனால், அங்கு மணல் படிவது தடைப்படுகிறது.

நான்காவது கட்டத்தில் காலியாக இருந்த மணற்குன்றின் முன்பகுதியில், அதாவது கடற்கரை பக்கமாகப் புற்களும் கொடிகளும் வளரத் தொடங்கும். அது, இரண்டாம் நிலை மணல் குன்று உருவாகக் காரணமாகிறது. பின்னர், தாவரங்களின் தடுப்பால் இரண்டாம் நிலைக் குன்றின் முன்பகுதியிலும் மணல் படியத் தொடங்கும்.

ஐந்தாவது கட்டத்தில் முதல் நிலை மணற்குன்றின் கீழ் மரங்களால் நிலத்தடியில் நிலைநிறுத்தப்பட்ட நன்னீர், தாமே ஓர் இயற்கைத் தடுப்புச்சுவராக மாறுகிறது. அதனால், கடலிலிருந்து நிலத்தடி வழியாக ஊடுருவும் உப்புநீரானது உள்நாட்டு நிலப்பகுதிக்குள் ஊடுருவ முடியாமல் தடுக்கப்படுகிறது. பெருமணல் உலகம் நன்னீர் உலகமாக மாறுகிறது. இதுவே பெருமணல் உலகின் மதிப்புமிகுந்த பணி.

இவ்வாறு மாபெரும் மழைநீர் சேமிப்புத் தொட்டியைக் கொண்டிருக்கும் நம் கடற்கரைகள் உலகின் மிகச் சிறந்த சூழலியல் வளங்களில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன. தமிழகத்தின் பல கடற்கரைப் பகுதிகளில் எக்கரும் கானலும் கொண்ட ‘கானலம் பெருந்துறை’யை இன்றும் காணமுடியும்.

பெரிய, நீளமான குன்றுகள்

சென்னைக்குத் தெற்கே தொடங்கும் எக்கர், மரக்காணம் வரை அகலமாகக் காணப்படும். புதுச்சேரி தொடங்கிப் பரங்கிப்பேட்டை வரையுள்ள எக்கர் குறுகலாக அமைந்திருந்தாலும், அளவில் உயரமானவை.

சில இடங்களில் 10 மீ. உயரமுள்ளன. நாகை தொடங்கிக் கோடிக்கரை வரையுள்ள மணல் குன்றுகள் செழிப்பானவை. அதிலும் வேளாங்கண்ணி தொடங்கிப் பொய்கைநல்லூர் வரை நீண்டுள்ள மணற்குன்றுகள் 15 மீ. உயரம் கொண்டவை.

காவிரியின் கிளையாறுகள் கொண்டு சேர்க்கும் மணல்தான் டெல்டா கடற்கரைப் பகுதிகளில் இந்தளவுக்கு மணல் குன்றுகள் உருவாகக் காரணம்.

தமிழகத்தின் நீளமான (594 மீ.) மணற்குன்று நாகை மாவட்டத்தில் உள்ளது. குறைந்த நீளமுடைய மணற்குன்று (42 மீ) மரக்காணத்தில் உள்ளது. இவை அனைத்தும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. அதிலும் கோடியக்கரை மணல் குன்றுகள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானவை.

இவ்வளவு நன்னீர் வளம் கொண்ட எக்கர்கள் இருந்தும், தமிழகத்தின் பல கடற்கரை ஊர்கள் இன்று ‘கேன் வாட்டருக்கு’ அலைகின்றனவே, ஏன்?

(அடுத்த வாரம்: எக்கர் என்னும் நீரகம்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in