

நம்முடைய பிறந்தநாள் நமக்கு எப்போதும் நினைவில் இருக்கும். இருப்பினும், திருமண நாளோ மனைவியின் பிறந்தநாளோ குறித்துக் கேட்டால் சட்டெனச் சொல்வதற்குத் தடுமாறி அசடு வழியும் சாத்தியம் உண்டு. குறிப்பாக, இன்றைய திறன்பேசி காலத்தில் ஒன்றிரண்டு தொலைப்பேசி எண்களைத் தவிரப் பிறவற்றை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், வாழ்க்கையில் எதையும் மறக்க முடியாத நிலைக்கு நம்மை ஒரு நோய் தள்ளுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஹைபர்திமேசியா என்று ஒரு நோய் இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களால் எதையும் மறக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் அவர்கள் நினைவில் நிரந்தரமாகப் பதிந்திருக்கும்.
ஹைபர்திமேசியா
மரபணுவில் ஏற்படும் சிறு பிறழ்வு காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். உலக அளவில் ஹைபர்திமேசியாவால் பாதிக்கப்பட்டவர்களாக இதுவரை 80 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இவர்களால் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த எந்த ஒரு நிகழ்வையும் நினைவு வைத்துக்கொண்டு உடனடியாகச் சொல்ல முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த, கேட்ட செய்திகளையும்கூட நாள் நேரம் முதற்கொண்டு துல்லியமாக நினைவடுக்குகளிலிருந்து மீட்டுக்கொண்டு வர முடியும். தாங்கள் படித்த புத்தகங்களில் உள்ளவற்றையும் பக்கவாரியாகச் சிலரால் சொல்ல முடிவதுதான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ள சூப்பர் பவர்.
அதிக அளவு நினைவாற்றல் கொண்டவர்
ஹைப்பர்தைமீசியாவால் பாதிக்கப்பட்டவர்களில் பிரிஸ்பனைச் சேர்ந்த 32 வயதான எழுத்தாளர் ரெபேக்கா ஷார்ரக் என்பவர் அதிக அளவு நினைவாற்றல் கொண்டவராக இருக்கிறார். அவர் பூமிக்கு வந்த 12வது நாளில் நடந்த நிகழ்வுகளைக்கூட அவரால் துல்லியமாகச் சொல்ல முடிகிறது. 12ஆவது நாளில் அவருடைய அம்மா அவரை அருகில் வைத்துக்கொண்டு கார் ஓட்டியது, முதல் பிறந்தநாளில் அணிந்திருந்த ஆடைகள், பொம்மைகள் என்று எல்லாமே நினைவில் வைத்துச் சொல்கிறார்.
ஹாரிபாட்டர் புத்தகத்தின் தீவிர ரசிகையான இவர், அதில் இருக்கும் ஒவ்வொரு பக்கத்தையும் வரிக்கு வரி ஒப்பிக்கும் அளவுக்கு நினைவாற்றல் உடையவராகத் திகழ்கிறார். இந்த அளவுகடந்த நினைவாற்றல் ஒரு பக்கம் நன்மையாகத் தெரிந்தாலும் அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை, மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாவதாகச் சொல்கிறார் ரெபேக்கா.
பிரபலங்களில் சூப்பர் நினைவாற்றல் கொண்டவராக ஹாலிவுட் நடிகை மேரிலு ஹென்னர் அறியப்படுகிறார். இவரும் தன்னுடைய கடந்த காலங்களில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நாள், நேரத்தில் நடந்த நிகழ்வுகளைத் துல்லியமாகச் சொல்வதில் நினைவுத் திறன் மிக்கவராக இருக்கிறார்.
ஒரு பக்கம் இந்த நோய் வரமாகப் பார்க்கப்பட்டாலும் வாழ்க்கையில் கடினமான காலங்களைக் கடந்து வர நினைப்பவர்களுக்கும், சில நினைவுகளை மறக்க நினைப்பவர்களுக்கும் இந்த நோய் ஒரு சாபமே.