

மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம் போன்ற காரணங்களால் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள்.
நாள் முழுவதும் ஒருவரது கவனக் குவிப்பை சீராகப் பராமரிக்க, உடலில் இருக்கும் கலோரிகளை மூளை பயன்படுத்திக்கொள்கிறது. அதற்கு நாள் முழுவதும் போதுமான எரிபொருள் மூளைக்கு கிடைக்க வேண்டும். மூளைக்குப் போதிய ஆற்றலைக் கொடுத்து, அதன் செயல்பாட்டை அதிகரிக்க இந்த ஐந்து உணவுப் பொருட்கள் உதவும்.
மீன் எண்ணெய்
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை மூளைக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் செல்களைச் சுற்றியுள்ள மென்சவ்வுகளை உருவாக்க உதவுகின்றன. மூளை செல்கள் எனப்படும் நியூரான்கள் உருவாகவும் இவை உதவுகின்றன.
மீன் எண்ணெய் அதன் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையில் அதிக அளவு ரத்த ஓட்டத்தைத் தூண்டி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. மீன் எண்ணெய்யை உட்கொள்வது மனித மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் எளிய வழி. சால்மன், கானாங்கெளுத்தி, சூரை, மத்தி போன்ற மீன்களிடமிருந்து மீன் எண்ணெய் கிடைக்கிறது.
முழுத் தானியங்கள்
உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் செயல்பட ஆற்றல் தேவை. இதேபோல், மனித மூளைக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் வடிவில் ஆற்றல் தேவைப்படுகிறது, இது கவனக்குவிப்பையும் அறிதல் உணர்வையும் மேம்படுத்துகிறது. அந்த வகையில் முழுத் தானியங்கள் சிறந்த உணவுப் பொருட்கள்.
அவை ரத்த ஓட்டத்தில் மெதுவாக ஆற்றலை வெளியிடுகின்றன. நாள் முழுவதும் மூளையை விழிப்புடன் வைத்திருக்கின்றன. நாள் முழுவதும் மூளை தொடர்ந்து சீராகச் செயல்படுவதை அவை உறுதிசெய்கின்றன. மூளையின் செயல்பாட்டைத் திறம்படப் பராமரிக்கவும் அவை உதவுகின்றன.
புரோக்கோலி
புரோக்கோலியில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் அம்சங்கள் மிகுந்துள்ளன. இது வைட்டமின்-கே-வுக்கான நல்ல ஆதாரம். இது மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வைட்டமின்-கே, குளுக்கோசினோலேட்டுகள் போன்றவை அதில் நிரம்பியுள்ளன.
நரம்பியல் கடத்திகளில் ஏற்படும் முறிவை இது குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலம் சரியாகச் செயல்படவும், மூளையைக் கூர்மையாக வைத்திருக்கவும் இது ஒரு இன்றியமையாத தேவை. புரோக்கோலி ஒரு சத்தான காய்கறி மட்டுமல்ல; அது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும்.
பரங்கி விதைகள்
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கத் தேவைப்படும் ஒரு முக்கியமான வேதிப்பொருள் துத்தநாகம். பரங்கி விதைகளில் போதுமான அளவு துத்தநாகம் உள்ளது. இது மனித மூளையின் நினைவாற்றல், சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது. இது மக்னீசியம், வைட்டமின்-பி போன்றவற்றைக் கொண்டுள்ளது, அவை நல்ல மனநிலையை ஏற்படுத்தும் செரோடோனின் போல இருப்பதால், மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது மூளையை ஆசுவாசப்படுத்தி, அறிதல் உணர்வை மேம்படுத்துகிறது. பரங்கி விதைகள் மனித மூளை செயல்பாடுகளை அதிகரிக்கச் சிறந்த உணவுப் பொருள்.
கொட்டை பருப்புகள்
இதில் வைட்டமின்- ஈ நிறைந்துள்ளது. அறிதல் உணர்வு சார்ந்த ஆரோக்கியம் குறைவதைத் தடுக்க இது உதவுகிறது. முதியவர்களிடம் அறிதல் உணர்வு சார்ந்த செயல் பாடுகளின் சரிவு பொதுவாகக் காணப்படுகிறது. கொட்டைப் பருப்புகளுடன் அஸ்பராகஸ், பழுப்பு அரிசி, ஆலிவ் விதை கள், முட்டை போன்ற வைட் டமின்-ஈ நிறைந்த உணவு வகைகளும் மூளைக்கு உதவும்.
மூளையின் ஆரோக்கியம் முக்கியம்
மூளை என்பது மனித உடலின் ஒரு முக்கிய உறுப்பு. மற்ற உறுப்புகளைப் போல அதற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் எரிபொருள் தேவை. மூளையைக் கூர்மையாக்கவும், அறிதல் உணர்வைச் சரியான வகையிலும் வைத்திருக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம். வைட்டமின்-கே, துத்தநாகம், வைட்டமின்-சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு ஊட்டமளிக்கத் தேவைப்படும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான மீன் எண்ணெய், புரோக்கோலி, கொட்டைப் பருப்புகள், பரங்கி விதைகள், காலிஃபிளவர், பழுப்பு அரிசி, முழுத் தானியங்கள், வெண்ணெய், முட்டை, முட்டைக் கோஸ், சோயா பொருட்கள் உள்ளிட்டவை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கப் பயன்படும்.
வயதாகும்போது மூளை சுறுசுறுப்பான செயல்பாட்டை இழக்கத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து நினைவாற்றல் இழப்பும் அறிதல் உணர்வும் குறையும். எனவே, மூளையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கச் சமச்சீர், ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது அவசியம்!
கட்டுரையாளர், இதய நோயியல் சிறப்பு மருத்துவர்