தசைச் சிதைவு நோய்: ஒரு புரிதல்

தசைச் சிதைவு நோய்: ஒரு புரிதல்
Updated on
3 min read

உடலை அசைக்க உதவும் தசைகளைப் பலவீனமடையச் செய்யும் நோயே தசைச் சிதைவு நோய் (Muscular dystrophy). தசை வளக்கேடு, தசையழிவு நோய் எனவும் இது அழைக்கப்படுகிறது.

இந்த நோயினால் எலும்புத்தசை பலவீனமடையும், தசைப் புரதங்களில் குறைபாடுகள் ஏற்படும், நோய் தீவிரமடையும்போது தசை இழையங்கள் சிதைவுக்கு உள்ளாகும்.

காரணிகள்

மரபியல் ரீதியான காரணங்களே இந்த நோய்க்கு அடிப்படைக் காரணி. மரபியல் ரீதியான காரணிகளைக் குறித்து அறிவதற்கு முன் மரபணுக்கள் (Genes) பற்றி அறிந்து கொள்வது அவசியம். மரபணு என்பது ஓர் உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை, அந்த உயிரினத்தின் சந்ததிகள் வழியே கடத்தும் ஓர் அலகு.

இனப் பெருக்கத்தின்போது பெற்றோரிடமிருந்து அவர்களது சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப் படுகின்றன. ஆண் என்றால் (X,Y) பெண் என்றால் (X,X) என இரு விதமான குரோமோசோம்களை அடிப்படையாகக் கொண்ட மரபணுக்கள் இருக்கின்றன.

பொதுவாக, தாயின் மரபணுவும் தந்தையின் மரபணுவும் வெவ்வேறாக இருக்கும். நெருங் கிய உறவுமுறையில் நடக்கும் திருமணம் காரணமாகத் தாய், தந்தையின் மரபணு ஒரே மாதிரியானதாக இருக்கக்கூடும்.

இத்தகைய பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தை களுக்குத் தசைச் சிதைவு நோய் ஏற்படும் சாத்தியம் அதிகம். இவ்வாறு மரபணு சார்ந்து ஏற்படும் சிக்கல்களில் இடைவிடாத மரபணு சிக்கல் (Recessive Inherited), மரபணு ஆதிக்கம் தொடர்பான சிக்கல் (Dominant Inherited), பாலின ரீதியாகப் பிணைக்கப்பட்ட சிக்கல் (X Linked) என மூன்று வகைகள் உள்ளன.

இடைவிடாத மரபணு சிக்கல்

இடைவிடாத மரபணு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர், அந்த மரபணுவின் நகல்களைத் தன்னுடைய பெற்றோ ரிடமிருந்து பெற்றிருப்பார். ஆனால், அவ்வாறு பெறப்பட்ட மரபணுவால் அவர் பாதிக்கப்படுவதில்லை. அவர் அந்த மரபணுவை தன்னுடைய அடுத்த தலைமுறைக்குக் கடத்தி செல்பவராக மட்டுமே இருப்பார்.

இந்தப் பாதிப்பைப் பெற்றோர் இருவரும் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளுக்குத் தசைச் சிதைவு நோய் ஏற்படும் சாத்தியம் உண்டு. இவ்வாறு பிறக்கும் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத் தசைச் சிதைவு நோய் ஏற்படும் எனத் தரவுகள் உணர்த்துகின்றன.

மரபணு ஆதிக்கம் சார்ந்த பிரச்சினைகள்

இவ்வகை பாதிப்பில், பெற்றோ ரில் ஒருவர் மரபணு பிரச்சினை உடையவராக இருப்பார். மற்றொருவருக்கு மரபணு பிரச்சினை இருக்காது. இவ்வகை பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு 50% தசைச் சிதைவு நோய் ஏற்படும் சாத்தியம் உண்டு.

மையோடோனிக் தசைச் சிதைவு (Myotonic dystrophy) முகம், தோள்பட்டை தசைச் சிதைவு (Facio Scapulahumeral dystrophy), கண்-தொண்டை தசைச் சிதைவு (Occulopharyngeal muscular dystrophy), கை கால் தசைச் சிதைவு (Limb Girdle Muscular dystrophy) ஆகிய வகைகள் இதில் உள்ளன.

பாலின பிணைப்பு சிக்கல்

இது குரோமோசோம்களை அடிப்படை யாகக் கொண்டது. மரபணு மாற்றப்பட்ட குரோமோசோம் ஆணின் அதாவது தந்தையின் நகல் குரோமோசோமுடன் (X,Y) பிணைப்பை ஏற்படுத்தினால், பிறக்கும் குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம்.

ஆனால், மரபணு மாற்றப்பட்ட குரோமோசோம், பெண்ணின் அதாவது தாயின் நகல் குரோமோசோமுடன் (X,X) பிணைப்பை ஏற்படுத்தினால், பிறக்கும் குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. அதாவது, இந்தப் பாதிப்பின் தாக்கம் பெண் குழந்தைகளிடம் குறை வாகவும், ஆண் குழந்தைகளிடம் அதிகமாகவும் இருக்கிறது.

பிற காரணிகள்

மரபு வழியாகக் கடத்தப்படாமல், தன்னிச்சை யான மரபணு மாற்றங்கள் நிகழ்வதன் மூலமும் தசைச் சிதைவு நோய் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இவ்வகையான மாற்றம் செய்யப்பட்ட மரபணு அல்லது பாதிப்பு அடைந்த மரபணு பல தலைமுறைகள் கடந்து வந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிட்ட அனைத்து வகைகளிலும் பெற்றோர் பாதிக்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட அந்த மரபணுவின் நகலை பல சூழ்நிலைகளில் கடத்தி செல்லும் (Carrier) நபராகவும் அவர்கள் இருக்கக்கூடும்.

சிகிச்சைகள்

தசைச் சிதைவு நோய்க்கு என்று தனியாக மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. சுவாசப் பிரச்சினையுள்ள தசைச் சிதைவு நோய் உள்ளவர்கள், அதற்கு உரிய மருத்துவரிடம் காட்டி, சுவாசப் பிரச்சினைகளைக் குறைக்கவும், தடுக்கவும் தேவைப்படும் மருந்துகளையும், ஊட்டச் சத்து தொடர்பான மருந்துகளையும் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இயன்முறை மருத்துவம்

தசைச் சிதைவு நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் இயன்முறை மருத்துவம் தசைச் சிதைவு நோயாளி களுக்கு சில உடற்கூறு பயிற்சியின் மூலம் ஓரளவுக்குப் பலன் தருகிறது. தசை வலுக் குறையாமல் தடுத்தல், நடக்கவைத்தல், அவர்களின் வேலைகளை அவர்களே பார்த்துக்கொள்ளுதல் போன்றவற்றுக்கு இயன்முறை மருத்துவத்தில் பயிற்சிகளும், ஆலோசனைகளும் உள்ளன. முக்கியமாக, எலும்பு வளைவுக் குறைபாடு (Deformity) வராமல் தடுக்க இயன்முறை மருத்துவம் உதவும்.

கட்டுரையாளர், இயன்முறை மருத்துவர்

தொடர்புக்கு: sada.kark@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in