அமைதியான மாரடைப்பு

அமைதியான மாரடைப்பு
Updated on
3 min read

சமீப காலமாக எவ்வித அறிகுறிகளும் இன்றித் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் பலரும் சட்டென்று மரணித்துவிடுகிறார்கள். இப்படித் தாக்குவது அமைதியான மாரடைப்பு (Silent heart attack) எனப்படுகிறது.

மாரடைப்புடன் தொடர்புடைய அறிகுறிகளோ லேசான அறிகுறிகளோகூட இதில் இருக்காது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாகவே அமைதியான மாரடைப்பைத் தடுக்க முடியும்.

முக்கிய ஆபத்துக் காரணிகள்

உப்பு, சர்க்கரை, கொழுப்பு:

உணவில் இருக்கும் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆய்வுகளின்படி, ஒரு சராசரி நகர்ப்புற இந்தியர் ஒரு நாளைக்கு 11 கிராம் உப்பை உட்கொள்கிறார். ஒரு நாளைக்கு 6 கிராம் உப்பு என்பதே உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை.

மேலும், உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஒருவர் ஒரு நாளைக்கு 6 தேக்கரண்டி சர்க்கரை, 20 கிராம் கொழுப்பு மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால், ஒரு சராசரி நகர்ப்புற இந்தியர் ஒரு நாளைக்கு 10 தேக்கரண்டி சர்க்கரையும் 32.6 கிராம் கொழுப்பையும் உட்கொள்கிறார்.

சர்க்கரை, உப்பு, கொழுப்பு சேர்ந்த உணவை அதிகமாகச் சாப்பிடுவது இதயத்தைப் பாதிக்கும் நோய்களைப் பெருமளவில் ஏற்படுத்துகிறது

நோய்த் தடுப்புக்கான ஆலோசனை பெறுவதில் சுணக்கம்

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு ஆகியவை இதயத்திற்கு ஆபத்தானவை. இருப்பினும், பெரும்பாலான நோயாளிகள் இந்த நிலைமை முற்றும்வரை சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்

உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறை

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வின்படி, இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4,297 காலடிகள் மட்டுமே நடக்கிறார்கள். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிதமான நடைப்பயிற்சியைவிட இரண்டு மடங்கு அதிகமான நடைப்பயிற்சியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

மன அழுத்தம்

அழற்சி ஹார்மோன்களை வெளியிடுவதன் மூலம் மன அழுத்தம் இதயத்தை நேரடியாகப் பாதிக்கலாம். மேலும், மன அழுத்தம் மோசமான உணவு, வாழ்க்கை முறை ஆகிய தேர்வுகளுக்கு வழிவகுத்து, இதயத்தை மறைமுகமாகவும் பாதிக்கலாம். 2020இல் 10,000 இந்தியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 74 சதவீதம் பேர் மன அழுத்தம், பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மாசுபாடு

பெரும்பாலான நகரங்களில் மாசுபட்ட காற்றில் நுண்ணிய மாசுத்துகள்கள் காணப்படுகின்றன. இவை இதய நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன.

புகை பிடித்தல்

அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையின்படி, புகைப்பிடித்தல் தொடர்பான 5 இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது. 16 முதல் 64 வயதுக்கு உட்பட்ட 25 கோடி புகைப்பிடிப்பவர்களுடன் உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாகச் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இவை இருந்தால், உங்களுக்கு மாரடைப்பு இருக்கலாம்...

# ஃபுளூ காய்ச்சல் இருப்பது போன்ற அறிகுறிகள்

# மார்பு அல்லது மேல் முதுகில் ஏற்படும் தசை வலி

# தாடை, கைகள், மேல் முதுகு ஆகியவற்றில் ஏற்படும் வலி

# மிகுதியான சோர்வு

# அஜீரணக் கோளாறு

நிலைகள்

அமைதியான மாரடைப்பின் பல்வேறு நிலைகளை மருத்துவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

முதல் நிலை: உயிர்வாழ்வதற்கு நிலையான ரத்த ஓட்டம் தேவை. சில நேரங்களில் இதயத் தசைகளுக்கு ரத்தத்தை வழங்கும் இதயத் தமனிகளில் படியும் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் போன்றவற்றால் அடைப்பு ஏற்பட்டு அதன் பாதை சுருங்கிவிடும்.

இரண்டாம் நிலை: இந்த அடைப்பு உடையும்போது, அதைச் சுற்றி ஒரு ரத்த உறைவு ஏற்படும். இந்த ரத்த உறைவு தமனி வழியாக இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும். இது இஸ்கெமியா எனப்படும் நிலை.

மூன்றாம் நிலை: இதயத் தசையில் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துகள் ஆகியவை இல்லாமல் போவதால் இஸ்கெமியா ஏற்படுகிறது.

நான்காம் நிலை: இஸ்கெமியாவின் விளைவாக இதயத் தசையின் ஒரு பகுதியில் சேதமோ இறப்போ ஏற்படும். இதுவே மையோகார்டியல் இன்ஃபார்க்சன் (MI) அல்லது பொதுவாக மாரடைப்பு என அழைக்கப்படுகிறது

ஐந்தாம் நிலை: கோல்டன் ஹவர் என்றும் அழைக்கப்படும் மாரடைப்புக்குப் பிறகான முதல் 60 நிமிடங்கள் முக்கியமானவை. அந்த 60 நிமிடத்துக்குள் ரத்த விநியோகத்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும். அது இதயத் தசையைக் காப்பாற்றவும் மரணத்தைத் தடுக்கவும் உதவும்.

மாரடைப்பு வந்தால் என்னசெய்ய வேண்டும்?

# தீவிர சோர்வு, நெஞ்சு வலி போன்ற எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் அல்லது கைகளில் வலி ஏற்பட்டாலும் அவற்றை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது

# இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும் தசை சேதத்தைக் குறைக்கவும் கூடிய விரைவில் மருத்துவமனைக்குச் செல்வது முக்கியம். வாகனத்தை ஓட்ட வேண்டாம். ஆம்புலன்ஸை அழைப்பது நல்லது அல்லது வாகனத்தை ஓட்டுவதற்கு அருகிலுள்ள ஒருவரை அழைக்க வேண்டும்.

# பாதிக்கப்பட்ட நபர் விழிப்புடனும் சுவாசத்துடனும் இருந்தால், இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை (CPR - Cardio Pulmonary Resuscitation) அளிக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக மருத்துவமனைக்கு விரைந்து செல்வது நல்லது.

# நபர் சுயநினைவின்றி இருந்தால் சிபிஆர் கொடுக்கப்பட வேண்டும். இதற்கிடையில் ஆம்புலன்சையும் அழைக்க வேண்டும்.

# ரத்த உறைவைத் தடுக்க, ஆஸ்பிரின் மாத்திரையை (Ecosprin, Sprin, Aspro, Eprin, Delisprin என்ற பிராண்ட் பெயர்களிலும் கிடைக்கும்) எடுத்துக்கொள்ள வேண்டும். நெஞ்சு வலி இருந்தால், வலி நிவாரணிகளைக் கொடுக்கலாம். மருத்துவரை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிந்தால், நிலைமையை நேரடியாக விளக்கித் தகுந்த ஆலோசனையை அவரிடம் பெறலாம்.

# சில நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்தால், மருத்துவரிடம் விரைந்து செல்லுங்கள். தொடர்ச்சியான வலி, ஆரோக்கியமான அறிகுறி அல்ல. ஒருவேளை அது இதய நோய் இல்லை என்றால், வேறு ஏதோ ஓர் ஆபத்தை உணர்த்தும் அறிகுறி என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அமைதியான மாரடைப்பைப் பொறுத்தவரை முன்னெச்சரிக் கையும் அது பற்றிய விழிப் புணர்வும் முக்கியமானது. அந்த வகையில் கவனமாக இருந்தால் அமைதியான மாரடைப்பைத் தடுக்கலாம்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in