வைரஸ் காய்ச்சலைச் சமாளிப்பது எப்படி?

வைரஸ் காய்ச்சலைச் சமாளிப்பது எப்படி?
Updated on
1 min read

மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள்காமாலை எனப் பல தொற்றுநோய்கள் வீரியத்துடன் பரவத் தொடங்கிவிடுகின்றன. ஊட்டச்சத்து குறைந்தவர்களும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களும் இவற்றின் பாதிப்புக்கு எளிதில் உள்ளாக நேரிடும். மழைக்காலத்தில் பரவும் தொற்றுநோய்களில் வைரஸ் காய்ச்சல் முதன்மையானதாக இருக்கிறது.

வைரஸ் காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது?

மழைக்காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது, ஃபுளூ காய்ச்சல். இது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. நோயாளி தும்மும்போதும் இருமும்போதும் மூக்கைச் சிந்தும்போதும் இந்தக் கிருமி சளியோடு வெளியேறி, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது.

அறிகுறிகள்

  • கடுமையான காய்ச்சல்
  • தலைவலி
  • உடல்வலி
  • கை கால்வலி
  • தும்மல்
  • மூக்கு ஒழுகுதல்
  • சளி,
  • இருமல்
  • தொண்டை வலி

சிகிச்சை

இந்தக் காய்ச்சலுக்குச் சிறப்புச் சிகிச்சை எதுவும் கிடையாது. காய்ச்சலைக் குறைக்க 'பாராசிட்டமால்' மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் அவஸ்தைகளைக் கட்டுப்படுத்த 'ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்' பலன் தரும். ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால், வலிப்பு வந்துவிடலாம். எனவே, உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும்.

திரவ உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீரைத் தரவேண்டியது அவசியம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், சாதாரணத் தண்ணீரில் துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும்.

கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in