

மனநலம் சார்ந்த பிரச்சினையை வெளியில் சொல்லாமல் மறைப்பது, அந்தப் பிரச்சினையைத் தீவிரமடையச் செய்துவிடும். பிரச்சினை வெளியில் தெரிந்தால் சமுதாயத்தின் ஏளனத்துக்கு உள்ளாகிவிடுவோம் என்கிற பயமே உரிய சிகிச்சை செய்துகொள்வதைத் தடுக்கிறது. இத்தகைய பயம் தேவையற்ற ஒன்று.
காலம் வெகுவாக மாறிவிட்டது. மனநலப் பிரச்சினை வெளியில் தெரிந்தால், ஏளனத்துக்கு உள்ளாக்கப்படுவோம் என்றோ, ஒதுக்கப்படுவோம் என்றோ இனியும் அச்சப்படத் தேவையில்லை. தேவையற்ற அச்சம் மனநலப் பாதிப்பின் தீவிரத்தை அதிகமாக்கும்; தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்திவிடும்.
நம்முடைய பிரச்சினைகளை நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஒருபோதும் தயங்கக் கூடாது. பிறரிடம் பகிர்வதால் அவர்களிடமிருந்து உடனே தீர்வு கிடைக்கப்போவதில்லை என்றாலும், கிடைத்தால் அதிர்ஷ்டம்தானே. மேலும், பிறரிடம் பகிர்வது நம்முடைய மனத்தின் பாரத்தை நிச்சயம் குறைக்கும்; மனத்தில் இருக்கும் அழுத்தத்தையும் வெகுவாகக் குறைக்க உதவும்.
புலம்பலிலும் சந்தோஷம்
சிலர் சின்ன சின்ன பிரச்சினைகளைக்கூடப் பார்ப்பவர்களிடம் எல்லாம் சலசலவெனப் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அது நமக்கு எரிச்சல் ஏற்படுத்துவதாகக்கூட இருக்கும். ஆனால், அது மிகவும் நல்ல விஷயம். வாழ்க்கையில் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். புலம்பலிலும் சந்தோஷமாகக் காலம் தள்ளிக்கொண்டு இருப்பார்கள். நன்றாகத் தூங்குவார்கள்.
சிலர் எல்லாவற்றையும் மனதுக்குள்ளேயே பூட்டிவைத்துக் கொள்வார்கள். அவர்களிடமிருந்து எதையும் அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடியாது. அவர்கள் யாரிடமும் வெளிப்படையாகப் பேசவும் மாட்டார்கள்; யாரிடமும் ஒட்ட மாட்டார்கள். இது ஒருவகையில் ஆபத்தானதும்கூட.
வாழ்வதற்கு ஆயிரம் வழி இருக்கிறது என்று எடுத்துக்கொண்டு எதையும் தைரியமாக எதிர்கொள்பவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முழுமையாகச் சாதிக்காவிட்டாலும் மோசமான தோல்வியைத் தழுவ மாட்டார்கள்.
காரணிகள்
மன உளைச்சல், மன அழுத்தமாகி நாளடைவில் மனச் சிதைவுக்குக் கொண்டு செல்கிறது. சரியாகத் தூக்கம் வராவிட்டால் ஏதோ பிரச்சினை என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூகத்தில் நடைபெறும் தீமைகள், தனிமனிதனுக்கு ஏற்படும் இழப்பு, கடன் சுமை, வன்முறை, போன்ற பல காரணிகள் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் என பிரபல மனநல மருத்துவர் விக்ரம் படேல் கூறுகிறார்.
தகுந்த சிகிச்சைகள் உள்ளன
உடம்பில் ஏதாவது பிரச்சினை, நோய் என்றால் மருத்துவரிடம் போய் சிகிச்சை செய்து கொள்கிறோம். ஆனால், மனதுக்கு என்றால் மட்டும் தயங்குகிறோம்; யோசிக்கிறோம். மனதில் ஏற்படும் காயங்களுக்கும் தகுந்த மருத்துவம் தேவை என்பதை முதலில் உணர வேண்டும். மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது தெரியாத நிலையில் இன்றும் பலர் இருக்கிறார்கள். உடம்புக்கு இருப்பது போல, மனத்தின் பாதிப்புகளுக்கும் தகுந்த சிகிச்சைகள் உள்ளன என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கும்
இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர், மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஜப்பானின் மக்கள்தொகையைவிட அதிகம்.
எனவே, மனநலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல் மனநல ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. அதற்கு மேல் தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் தேவையான வழிமுறைகளையும் உரியச் சிறப்பு மருத்துவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் தனி நபர் இல்லை. குடும்பமும் அதனுடன் சேர்ந்த சமுதாயமும் இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மனம்விட்டுப் பேசினால், நிச்சயம் பலன் கிடைக்கும். முக்கியமாக, அதனுடன் மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கும்.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com