உணவுச் சுற்றுலா: ஆரோக்கியத்தைப் பரப்பும் அப்பம்பட்டு முட்டை மிட்டாய்

உணவுச் சுற்றுலா: ஆரோக்கியத்தைப் பரப்பும் அப்பம்பட்டு முட்டை மிட்டாய்
Updated on
3 min read

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்னையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்துகொண்டு இருந்தேன். ஆற்காடு பகுதியில் ‘முட்டை மிட்டாய்’ எனப் பதாகைத் தாங்கிய கடை ஒன்று கண்ணில் தென்பட்டது.

கேள்விப்படாத பெயராக இருந்ததால், ’அதென்ன முட்டை மிட்டாய்’ என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதால் வண்டியை உடனே நிறுத்தினேன்.

கவனத்தை ஈர்த்த முட்டை மிட்டாய்

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த முட்டை மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன். சாக்லேட்கள், பனிக்கூழ்கள், உலர் பழங்கள், உலர் கொட்டைகள், ஜிகர்தண்டா, தேநீர், காபி, குளிர்பானங்கள் எனப் பல ரகங்களை அந்தக் கடையில் பார்க்க முடிந்தது. இவை அனைத்தையும் தாண்டி முட்டை மிட்டாய் என் கவனத்தை ஈர்த்தது! முட்டை மிட்டாய் வைக்கப்பட்டிருந்த பகுதியில் வாடிக்கையாளர்களின் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது!

சுவைத்துப் பார்க்க முட்டை மிட்டாயைக் கேட்ட ஒரு பெண்மணி, ‘சாப்ட்டு பாத்துட்டு வாங்கலனா கோச்சிக்கக் கூடாது’ என்று கடைக்காரரிடம் சொல்ல, ’நீங்க வாங்கனும்னு அவசியமில்ல மேடம், முட்ட மிட்டாயின் சுவை உங்களுக்கு அறிமுகம் ஆனால் போதும், முட்ட மிட்டாய நீங்க கட்டாயம் வாங்குவீங்க, அதன் சுவை அப்படி’ என முட்டை மிட்டாயின் மீதிருந்த தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார் கடைக்காரர். அவர் சொன்னதைப் போலவே அந்த பெண்மணி இரண்டு முட்டை மிட்டாய்ப் பொட்டலங்களை வாங்கிச் சென்றார்.

சுவையால் மயக்கும் மேஜிக் மிட்டாய்

என் பங்கிற்கு நானும் முட்டை மிட்டாயைச் சுவைத்துப் பார்த்தேன். முட்டை மிட்டாய் என்று சொல்வதை விட, சுவையால் மதிமயக்கும் ’மேஜிக் மிட்டாய்’ என்றே சொல்லலாம். அது பால்கோவா சாயலைக் கொண்டிருந்தது. நாவில் படர்ந்த அதன் சுவை, இரைகுழல் பகுதி வரைக்கும் சென்ற அதிசயத்தை என்னால் உணர முடிந்தது. சுவைத்த பின்பு பல நிமிடங்களுக்கு, நாவில் இனிப்பை அங்கும் இங்கும் கடத்திக்கொண்டே இருந்தது அந்த இனிப்பு மிட்டாய். ரோஜா இதழ்களின் வாசனையையும் முட்டை மிட்டாயில் உணர முடிந்தது.

மைதா இல்லாத சிற்றுண்டி

முட்டை மிட்டாயில் பதப்படுத்திகளோ மைதாவோ சேர்க்கப்படவில்லை என்று அச்சிடப்பட்டிருந்தது. எவ்வளவு ஆறுதலான ஒரு விஷயம் இது. இதற்காகவே முட்டை மிட்டாயின் பெருமைகளை அதிகளவில் பரவச் செய்யலாம்.

ஆரோக்கிய உணவுக்கு முட்டை மிட்டாய் ஓர் எடுத்துக்காட்டு. மைதா சேர்க்கப்பட்ட உணவுகளும், சிற்றுண்டிகளும் தொற்றா நோய்களின் ஆதாரங்கள். ஒரு நாளில் நாம் சாப்பிடும் உணவு ரகங்களை ஆராய்ந்து பார்த்தால், மைதாவின் ஆதிக்கம் புரியும். அவ்வகையில் மைதா இல்லாத சிற்றுண்டி ரகத்தைப் பார்க்கும் போது, மனம் துள்ளிக் குதித்தது! தாராளமாகச் சிறுவர்களுக்கு இந்த முட்டை மிட்டாயைப் பரிந்துரைக்கலாம்.

எப்படித் தயாரிக்கப்படுகிறது?

பால், முட்டை, சர்க்கரை, நெய், ரோஜா இதழ்களின் சாரம் உள்ளிட்டவை முட்டை மிட்டாயின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்கள். முதலில் பாலைச் சுண்டக் காய்ச்சி பால்கோவா போலத் தயாரித்துக்கொள்கிறார்கள். இதற்கு ஆறு மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் பிடிக்குமாம். பிறகு முட்டை, சர்க்கரை ஆகியவை சேர்ந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் நடக்கிறது. இனிப்பு பரப்பப்படும் தட்டில் நெய்த் தடவப்படுகிறது. முட்டை வாடை வராமல் இருக்க ரோஜா இதழ்களின் சாரம் சிறிதளவு சேர்க்கப்படுகிறது. இறுதியாக சுவைமிக்க முட்டை மிட்டாயாக நம்மை மகிழ்விக்கிறது. பதப்படுத்திகள் சேர்க்கப்படாததால் நான்கைந்து தினங்களுக்கு மட்டுமே முட்டை மிட்டாயை வைத்துச் சாப்பிடலாம்.

முட்டை மிட்டாய் கொடுக்கும் ஆற்றல்

பாலில் உள்ள சுண்ணச் சத்தும், முட்டையில் உள்ள புரதமும் மற்ற ஊட்டங்களும் உடலுக்கு நலமூட்டுபவை. நெய் கொடுக்கும் போஷாக்கையும் நாம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். ரோஜா இதழ்களின் சாரம், வாசனையின் மூலம் நம்மை மகிழ்ச்சி அடையச் செய்யும்.

சர்க்கரை மட்டும்தான் கொஞ்சம் நெருடல். நாட்டுச் சர்க்கரை சேர்த்து முட்டை மிட்டாய் தயாரிக்கும் மாற்றம் எதிர்காலத்தில் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் நான்! முட்டய் மிட்டாயின் அட்டையில், 100கிராம் முட்டை மிட்டாய் கொடுக்கும் ஆற்றல், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து ஆகியவற்றின் அளவீட்டையும் அறிந்துகொள்ளலாம். எப்போதும் போல இந்த இனிப்பும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததல்ல!

மீண்டும் தேடிவரும் மக்கள்

பெங்களூரு செல்பவர்கள், ஏலகிரி மலைக்குச் சுற்றுலா செல்பவர்கள், ஒகேனக்கல் பயணம் மேற்கொள்பவர்கள் எனப் பலரும் முட்டை மிட்டாய்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். நெடுஞ்சாலையை அடிக்கடி பயன்படுத்துபவர்களின் விருப்ப இடமாக முட்டை மிட்டாய்க் கடை இருக்கிறது. ஒருமுறை சுவைத்துவிட்டால் மீண்டும் அடுத்த முறை பயணம் வரும் போது, முட்டை மிட்டாய்க் கடையைத் தேடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் கடை உரிமையாளர்.

முட்டை மிட்டாயின் வரலாறு

வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் திரு.சையத் ஈசாக் என்பவரிடம் முட்டை மிட்டாய் குறித்து கேட்ட போது, பல சுவாரஸ்யமான தகவல்களைக் கொடுத்தார். விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியே முட்டை மிட்டாயின் பிறப்பிடம். 1970ம் ஆண்டு சிறிய அளவில், சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட முட்டை மிட்டாய்க் கடை, காலப்போக்கில் வியாபித்திருக்கிறது. இப்போது 15 கிளைகள் முட்டை மிட்டாய்க்கு!

திரு.சையத் ஈசாக்கின் தந்தை திரு.சையத் கப்பார் அவர்கள் தான் இந்த முட்டை மிட்டாயை முதன் முதலாக உருவாக்கியிருக்கிறார். அவரின் ஐந்து மகன்களும் ஐந்து மகள்களும் முட்டை மிட்டாய் சார்ந்தே தங்கள் தொழிலை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கிலோ ஆறு ரூபாயில் தொடங்கிய முட்டை மிட்டாயின் இப்போதைய விலை கிலோ 480 ரூபாய்! முட்டை மிட்டாய் பிரபலமடைந்ததற்கு முட்டை மிட்டாய்க் குடும்பத்தினரின் கடுமையான உழைப்பும் காரணமாக இருந்திருக்கிறது.

ஆரோக்கியத்தைப் பரப்பும் மிட்டாய்

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சிற்றுண்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பதப்படுத்திகள் சேர்க்கப்படுவதில்லையாம்! அப்பம்பட்டு பகுதியில் ’சையது முட்டை மிட்டாய்’ கடை இன்றும் இனிமையைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. அப்பகுதி மக்களின் விருப்ப சிற்றுண்டியாக முட்டை மிட்டாய் இருக்கிறது. பல மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் முட்டை மிட்டாய் பயணித்துக் கொண்டே இருக்கிறதாம். அப்பகுதியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் முட்டை மிட்டாய் கட்டாயம் இடம்பிடித்துவிடுமாம்.

முட்டை மிட்டாய், விரைவில் அனைத்து இடங்களிலும் இனிமையையும் ஆரோக்கியத்தையும் பரப்பும் என்பதில் சந்தேகமில்லை!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in