

- ஜெம்கோவாக்-19 என்கிற பெயரில் விற்கப்படும் இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசிக்கு அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரத்தை மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது.
- இந்தத் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ள முடியும்.
- இந்த தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணையாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் என்பது பிரசித்தி பெற்ற எம்க்யூர் ஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தயாரித்து இருக்கும் கோவிட் 19க்கு எதிரான தடுப்பூசியின் பெயர் ஜெம்கோவாக்-19. இந்த தடுப்பூசிக்கு மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் அவசரக்கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
முதல் mRNA தடுப்பூசி
ஜெம்கோவாக்-19 என்பது, கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் முதல் mRNA தடுப்பூசி. உலக அளவில் என்று எடுத்துக் கொண்டால், அது கோவிட்-19க்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது mRNA தடுப்பூசி. இந்த தடுப்பூசிக்கு செல்களின் சைட்டோபிளாஸத்தினுள் இருக்கும் புரத கட்டமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளும் உள்ளார்ந்த திறன் உண்டு. இந்தத் திறன் ஜெம்கோவாக்-19 தடுப்பூசியை அதிக செயல்திறன் கொண்டதாக மாற்றுகிறது.
பாதுகாப்பானது
பொதுவாக, mRNA தடுப்பூசிகள் பாதுகாப்பானது எனக் கருதப்படுகின்றன. ஏனெனில், mRNA தடுப்பூசிகளின் மூலம் தொற்று ஏற்படும் சாத்தியம் கிடையாது. இந்தத் தடுப்பூசி தொழில்நுட்பமானது வைரஸின் தற்போதைய திரிபுகளுக்கு ஏற்பவும், புதிதாக உருவாகும் வேற்றுருக்களுக்கு ஏற்பவும் தடுப்பூசியை விரைவாக மாற்றியமைக்கும் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது. முக்கியமாக, இந்த தொழில்நுட்பம், கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போரில் இந்தியாவுக்குக் கூடுதல் ஆற்றலை அளிக்கும்.
மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள்
ஜென்னோவா நிறுவனத்தின் ஜெம்கோவாக்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்திகரமான முடிவுகளை அளித்தன. அந்த பரிசோதனையின் மருத்துவத் தரவுகளைத் தேசிய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் மதிப்பீடு செய்தது. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது, நோயெதிர்ப்பு ஆற்றலைக் கொண்டது எனக் கண்டறியப்பட்டது.
தடுப்பூசிக்கான நிலையான அணுகல்
இந்தியாவைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதையும், தடுப்பூசிக்கான நிலையான அணுகலை வழங்குவதையும் ஜென்னோவா நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதத்திற்கு சுமார் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான டோஸ்களை உற்பத்தி செய்வதே ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நோக்கம். அதன் பின்னர், இந்த உற்பத்தித் திறன் விரைவில் இரட்டிப்பு அடையும் எனவும் அது நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறது.