

நலமான வாழ்க்கைக்குப் பாதுகாப்பான தரமான உணவு அவசியம். பாதுகாப்பற்ற உணவு வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள், மனநிலைப் பாதிப்பு போன்றவற்றுக்குக் காரணமாக அமைகிறது. சில சமயங்களில் அதனால் இறப்புகூட ஏற்படுகிறது.
பாதுகாப்பற்ற உணவால் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. நுகர்வோரின் உணவுத்தட்டைச் சென்றடையும் வரை அது பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
கேள்விக்கு உள்ளாகும் உணவின் பாதுகாப்பு
உற்பத்தி நிலையிலிருந்து சந்தைப்படுத்தும் வரையிலும் பல நிலைகளைக் கடந்து வரும் இந்த உணவு ஏதாவது ஒரு நிலையில், சீர்கேடு அடைந்தாலும் அது நுகர்வோரை வெகுவாகப் பாதிக்கும். உழவுத் தொழிலில் ஏற்பட்ட மாற்றங்களாலும், வேதி உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றாலும், உற்பத்தியாகும் பொருளின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது போதாது என்று கலப்படம் என்கிற பெயரில் உணவில் நுழையும் உடலுக்குக் கேடு தரக்கூடிய பொருட்கள் நம்மை நிரந்தர நோயாளியாக ஆக்கிக்கொண்டு இருக்கின்றன.
சமையலறையின் சுகாதாரம்
வீட்டின் சமையலறையில் சமையலுக்கான பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. சமையலுக்காக, அவசரத்தில் உடைத்த பாக்கெட்டைப் பயன்படுத்திய பிறகு, பாக்கெட்டில் உள்ள மீதிப்பொருளை – அது சேமியாவாகட்டும், கோதுமையாகட்டும், டப்பாவில் போட்டு மூடி வைக்கத் தவறிவிடுகிறோம். அடுத்த முறை சமையலின்போது அதில் உள்ள வண்டு, புழுக்களுடன் சேர்த்தே சமைக்கப்படுகிறது.
சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள ரொட்டிப் பாக்கெட்டை வீடுகளில் அப்படியே மேஜை மீது போட்டிருப்பார்கள். மறுநாளோ அதற்கு அடுத்த நாளோ, பசியோடு பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகள், அதன் சுத்தம் பற்றித் தெரியாமலேயே எடுத்துச் சாப்பிடுவார்கள். இதேபோல் சிலவீடுகளில் ரொட்டியைக் குளிர்சாதனப்பெட்டியில் நாட்கணக்கில் வைத்திருப்பார்கள். அதுவும் தவறு. ஓரிரு நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
கெட்டுப் போகும் உணவுகள்
சிலர் சமைத்து மீதமாகிப் போன சாதம், குழம்பு வகைகளைக் கிண்ணம், கிண்ணமாக வைத்து - ‘குளிர்சாதனப்பெட்டியில்தான் வைத்திருக்கிறோமே- கெடாது’, என்கிற நினைப்பில் நான்கைந்து நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவார்கள். சிலர் குடும்பச் சூழல், பணிச்சுமை காரணமாக நான்கு நாட்களுக்கு மேல் தேவையான சமையலைச் செய்து, உள்ளே வைத்துத் தேவையானபோது எடுத்துச் சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். சமைத்த உணவுகளை ஒருநாளுக்கு மேல் வைத்துச் சாப்பிடும்போது அதில் உள்ள தேவையான சத்துக்கள் இழந்து போவதோடு அல்லாமல் கெட்டுப்போனதைத்தான் சாப்பிடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அது சில பொழுது விஷமாகக்கூட மாறி இருக்கலாம்.
காய்கறிகளின் பாதுகாப்பு
பூச்சிக்கொல்லி மருந்து, வேதி உரங்களினால் காய்கறிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதால், காய்கறிகளை நீரில் நன்றாகக் கழுவிய பிறகுதான் சமையலுக்குப் பயன்படுத்தவேண்டும். கழுவியபிறகே குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்க வேண்டும்.
கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போகும் வீடுகளில், ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளைக் குளிர்சாதனப்பெட்டிக்குள் போட்டு அடைத்து வைக்கிறார்கள்.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பயன்படுத்தினால் மட்டுமே அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும். அதன்பின் அவை வெறும் சக்கைதான்.
பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
சமைத்த உணவுப் பாத்திரங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும். பாத்திரங்களைப் பிடித்துத் தூக்கப் பயன்படுத்தும் இடுக்கியின் நுனியைத் தேங்காய் நார் கொண்டு தினமும் நன்றாகக் கழுவவேண்டும். இடுக்கி நுனியில் எண்ணெய்ப் பிசுக்குடன் இருக்கும் பலநாள் அழுக்குடன் கிருமிகளும் சேர்ந்திருக்கும். காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தி, பலகையைத் தினமும் வேலை முடித்த பிறகு கழுவிக் காய வைக்கத் தவறக் கூடாது. பாத்திரங்களை நன்றாகக் கழுவி தினமும் முடிந்தவரை வெயிலில் காயவைப்பது நல்லது.
ருசியை விடத் தரமே முக்கியம்
கடையில் பொருட்களை வாங்குவதற்கு முன்னர் காலாவதியாகும் நாளினைப் பார்த்து வாங்குவது அவசியம். பரோட்டா தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு இதய நோய்கள் அதிக அளவில் வருவதாக இதய நோய் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே, பரோட்டா போன்று எளிதில் கிடைக்கும் மைதா உணவைத் தவிர்ப்பது நல்லது. 2 நிமிட துரித உணவுகளுக்கு ( Fast food ) பதிலாக நல்ல சத்தான உணவுக்குக் குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
உணவு கிடைப்பது பெரிய விசயம் என்பது மறுப்பதற்கில்லை. அதே சமயம் அதன் பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியம். ருசியாக இருந்தால்போதும் என்பதை மறந்து, தரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், உணவுப் பாதுகாப்பு என்பது உயிர்ப் பாதுகாப்புடன் தொடர்புடையது.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com