குழந்தையின்மை பிரச்சினைக்குச் சித்த மருத்துவம் அளிக்கும் தீர்வு

குழந்தையின்மை பிரச்சினைக்குச் சித்த மருத்துவம் அளிக்கும் தீர்வு
Updated on
2 min read

குழந்தைகள் இல்லை என்பது ஒரு குடும்பப் பிரச்சினையாக மட்டுமல்லாமல்; சமூகப் பிரச்சினையாகவும் கருதப்படுகிறது. குழந்தையின்மைக்கான சிகிச்சையில் மருத்துவ அறிவியலும், ஆராய்ச்சிகளும் பெரும் பங்காற்றி வருகின்றன. இருப்பினும், இன்றைக்கு பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனையால் பலரும் அவதிப்படுவதைக் காண முடிகிறது.

புதிதாகத் திருமணம் செய்த தம்பதி தொடர்ந்து ஓராண்டுக் காலம் உடலுறவு வைத்தும் கருத்தரிக்காமல் போனால் இரண்டு பேரில் ஒருவருக்கோ இருவருக்குமே கோளாறு இருக்கலாம் என்று அர்த்தம். முறையற்ற உணவுப்பழக்கம், ஆற்றல் குறைபாடு, உடல்பருமன், மனஅழுத்தம், சுற்றுச்சூழல், பணி அமைவிடம் என அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மூன்று நிலைகள்

சித்த மருத்துவத்தின் படி, ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாதது. அவை முறையே:

  • உணவு- பித்தத்தை நிலைநிறுத்தும் செயல்
  • உறக்கம்- கபத்தை நிலைநிறுத்தும் செயல்
  • அப்பிரமச்சரியம் - முறைப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கை- வாதத்தை நிலைநிறுத்தும் செயல்

ஏழு உடல் தாதுக்கள்

ஒரு மனிதன் உடலில் ஏழு உடல் தாதுக்கள் உள்ளன என்று சித்த மருத்துவம் கூறுகிறது. சாரம், செந்நீர், ஊண், கொழுப்பு, என்பு, மச்சை, சுக்கிலம் / சுரோணிதம் ஆகியவை அதில் அடங்கும். இந்த உடல் தாதுக்களில் ஏழாவது தாதுவான சுக்கிலம் என்பது ஆண் விந்தணுவையும், சுரோணிதம் என்பது பெண்ணின் கருமுட்டையையும் குறிக்கும்.

குழந்தையின்மை ஆண்களுக்கு ஏன் ஏற்படுகிறது?

  • விந்தணுக்களில் குறைபாடு
  • பிறப்புறுப்புகளில் அடிப்படுவது
  • பிறப்புறுப்புகளின் பிறவிக் குறைபாடுகள்
  • ஹார்மோன் குறைபாடுகள்
  • மனஅழுத்தம்
  • குடிப்பழக்கம்
  • புகைபிடித்தல்
  • போதைப்பழக்கம்

போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

குழந்தையின்மை பெண்களுக்கு ஏன் ஏற்படுகிறது?

பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு குழந்தையின்மைக்கான அடிப்படைக் காரணமாக அமைகிறது. இதற்கும் உணவுப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,

  • அதிக ரத்தப்போக்கு,
  • ஒழுங்கற்ற மாதவிடாய்,
  • மாதவிடாயின்போது கட்டிகள் வெளிப்படுதல்,
  • தீராத வயிற்று வலியை ஏற்படுத்துதல்

போன்ற மாதவிடாய்க் கோளாறுகள் முக்கியக் காரணங்களாக அமைகின்றன. இவை தவிர,

  • சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராமல் இருப்பது,
  • பெண்களின் உடல் பருமன்,
  • தைராய்டு,
  • நீரிழிவு நோய்,
  • மனக்கோளாறுகள்

போன்ற பல்வேறு காரணங்களாலும் பெண்களின் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

  • ஆண்பெண் யாராக இருந்தாலும் முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.
  • அரசனை நம்பி புருஷனைக் கைவிடலாம் என்பார்கள் அரசன் என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரச மரத்தின் காற்றைச் சுவாசிக்கும் பெண்களுக்குக் கருப்பைத் தொடர்பான நோய்கள் குணமாக்கும். குழந்தைபேறுக்கும் அது நல்லது.
  • ஓரிதழ் தாமரைப்பொடியை பால் சேர்த்துக் குடித்து வந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கும்

போலிகளை நம்பி ஏமாற வேண்டாம்

குழந்தையின்மை பிரச்சினைக்குச் சித்த மருத்துவத்தில் பல தீர்வுகள் உள்ளன. இருப்பினும், முறையான சித்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று குழந்தையின்மைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தக்க மருத்துவம் மேற்கொள்வதே முழுமையான தீர்வைப் பெற நமக்கு உதவும்.

குழந்தையின்மை சிகிச்சை குறித்த முறையற்ற ஆலோசனைகளும், அதைச் சார்ந்த போலி விளம்பரங்களும் இன்று பெருகிவருகின்றன. அவற்றை நம்பி ஏமாறாமல் இருப்பது தேவையற்ற உடல்நல பாதிப்புகளிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும் நம்மைக் காக்கும். அனுபவமுள்ள சித்த மருத்துவர் அல்லது தேர்ச்சி பெற்ற மருத்துவரை அணுகுவதே முறையான சிகிச்சையை நமக்கு அளிக்கும்.

கட்டுரையாளர், குழந்தை நலப் பிரிவு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: dharshini874@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in