

உடல் எடை அதிகரிப்பது முழு உடலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்டவர்கள் சில அடிகள் எடுத்துவைப்பதற்கே பெரிதும் சோர்வாக உணர்வார்கள். எடை அதிகரிப்பு நம்மைச் சோம்பேறியாக்கி, வேலை செய்வதைத் தடுக்கும்.
இதன் காரணமாக உடல் பருமன் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கும். முக்கியமாக, இது மூட்டுகளை அசைக்க முடியாமல் செய்து, எலும்பின் அடர்த்தியையும் குறைக்கும்.
உடல் பருமன் பொதுவாக நீரிழிவு, இதய நோய்களுடன் தொடர்புடையதாகவே கருதப்படுகிறது. இருப்பினும், எலும்பு ஆரோக்கியம், மூட்டு ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் உடல்பருமனுக்கும் இருக்கும் தொடர்பை நாம் மறுக்க முடியாது.
அதிக உடல் எடை எலும்பு அடர்த்தி குறையும் அபாயத்திற்கு வழிவகுப்பதுடன், எலும்பு முறிவு ஏற்படு வதற்கான சாத்தியத்தையும் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சாதாரணமானவர்களைவிட உடல் பருமன் உள்ளவர்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவாக இருப்பதாகவும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு நபரின் உடல் பருமன் உடல் நிறை குறியீட்டெண் (BMI) மூலம் அளவிடப்படுகிறது. ஒருவருக்கு அதிக பிஎம்ஐ இருப்பது நீரிழிவு, இதய நோய்கள், எலும்புப் புரை நோய், மூட்டழற்சி உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள சூழலில், அதன் பாதிப்புகளை உரிய கவனத்துடன் அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எலும்பு, மூட்டுகளில் உடல் பருமன் ஏற்படுத்தும் பாதிப்பு
எடை அதிகரிப்பால் பாதிக்கப்படும் எலும்பு, மூட்டு ஆரோக்கியம், மூட்டழற்சி அல்லது எலும்புப் புரை நோய்க்கு வழிவகுக்கக்கூடும். முக்கியமாக, அது குருத்தெலும்புகளைச் சேதப்படுத்தும். இதன் காரணமாக, மூட்டுகளில் வீக்கம், விறைப்பு, மூட்டுகள் - எலும்புகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படலாம்.
நமது உடலின் எடை அதிகரிக்கத் தொடங்கியவுடன் இடுப்பு, முழங்கால் மூட்டுகள் போன்றவையே அதிக எடை உணரப்படும் முக்கிய இடங்களாக இருக்கின்றன. உடலில் ஒரு கிலோ எடை அதிகரித்தால், முழங்கால்கள் அந்த எடையின் நான்கு மடங்கு அழுத்தத்தை உணரும்.
பழைய எலும்புகள் தொடர்ச்சியாகச் சிதையும்போது, செல்கள் உதவியுடன் எலும்புகள் மீண்டும் உருவாக்கப்படும் வகையில் மனித உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உடல் எடை அதிகரிப்பு எலும்புகளின் செல்களைப் பாதித்து, எலும்பு இழப்புக்கு வழிவகுக்கிறது. காலப்போக்கில் ஆரோக்கியமான எலும்புகள் பலவீனமடையவும் இது வழிவகுக்கிறது. இது எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். மூட்டுகளில் உள்ள திசுக்கள் வீங்குதல், பொதுவான வீக்கம், வலி போன்றவற்றுக்கு உடல் பருமன் வழிவகுக்கும். நடப்பதிலும் இது சிரமத்தை ஏற்படுத்தும்.
உடல் பருமனால் ஏற்படும் மூட்டுவலியைக் குறைக்க…
உடல் எடையை எலும்புகளால் தாங்க முடியவில்லை என்று ஒருவர் உணர ஆரம்பிப்பதே, அவருடைய உடல் பருமனாக இருப்பதற்கான முதல் அறிகுறி. அந்தச் சிக்கலைச் சமாளிக்க சில வழிகள்:
சீருணவு:
எடையைக் குறைக்க அதிகம் பின்பற்றப்படும் வழி இது. ஒருவர் ஒவ்வொரு நாளும் அவருடைய உடலுக்குத் தேவைப்படுதைவிடக் குறைவான கலோரிகளைக் கொண்ட உணவை உட்கொள்வதன் மூலமும், சீரான உணவைப் பராமரிப்பதன் மூலமும் எடையைக் குறைக்க முடியும். நிறைய பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நொறுக்குத் தீனி சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். உடல் பருமனைத் தவிர்க்கச் சர்க்கரை, குளிர்பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
உடல் செயல்பாடுகள்:
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஜாகிங், பளு தூக்குதல் உள்ளிட்டவை உடல் செயல்பாடுகளில் அடங்கும். ஆனால் உடல் பருமனாக உள்ளவர்கள் எடையைத் தூக்குவது, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்வது கடினமாக இருக்கலாம்.
இந்த வகை உடல் செயல்பாடுகள் மூட்டுகளில் அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி, நீச்சல் ஆகியவற்றுடன் உடல் செயல்பாடுகளை முதலில் தொடங்குவது நல்லது.
மருத்துவரின் ஆலோசனை
ஒரு நபரின் ஹார்மோன் சமநிலையின்மை அல்லது வளர்சிதை மாற்றம் நடைபெறும் வகை போன்றவற்றின் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கலாம். ஒருவர் தன் உடலின் நிலையையும், ஆரோக்கியத்தையும் தொடர்ந்து கண்காணித்துவர வேண்டும். தேவைப்படும்போது மருத்துவரிடம் வழிகாட்டுதலையும் தகுந்த சிகிச்சையையும் பெற்றாக வேண்டும்.
கட்டுரையாளர், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்