

பல்வேறு விதமான வேதிப் பொருட்களின் கூட்டுக் கலவையே நம் உடல். சந்தோஷம், துக்கம், உற்சாகம், பயம், அமைதி, தூக்கம், மகிழ்ச்சி என ஒவ்வொரு செயல்பாட்டுக்குப் பின்னாலும் வேதிப்பொருட்களும் அவற்றின் வேதியல் மாற்றமுமே பிரதானமாக உள்ளன.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் சோகத்தை வெளிப்படுத்தும்போதும் பயத்தை உணரும்போதும் நம் மூளையிலிருந்து செல்கள் வழியாக நரம்புகள் மூலம் பல்வேறு வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. சுரக்கின்ற வேதிப் பொருட்கள் சமநிலையில் இருக்கும்போது நாம் நம்முடைய உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. அவற்றின் சமநிலை தவறுகிறபோது அது நம் உடலையும் மனத்தையும் பாதிப்படையச் செய்கிறது.
உணர்ச்சிகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, யோகா போன்ற செயல்முறைகள் பெரிதும் உதவும். அப்படி நம் உடலில் என்னென்ன விதமான வேதிப் பொருட்கள் சுரக்கின்றன? அந்த வேதிப் பொருட்களால் நம் உடலில் என்ன மாதிரியான வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நாம் அறிந்து வைத்திருப்பதும் நல்லது.
டோஃபமைன்
நம்மை உற்சாகம் கொள்ளச் செய்கிற ஹார்மோன்களில் ஒன்று டோஃபமைன். செயற்கரிய செயலை செய்து முடித்தபிறகு ஏற்படும் பெருமித உணர்வு, நல்ல சுவையான உணவை உண்டபின் ஏற்படும் திருப்தி, சின்ன சந்தோஷங்களின்போது, வெற்றிகளின்போது ஏற்படும் மகிழ்ச்சி போன்ற தருணங்களில் இந்த ஹார்மோனின் சுரப்பு தூண்டப்படும்.
உடற்பயிற்சி, தியானம், இசை கேட்பது போன்ற செயல்கள் டோஃபமைன் சுரப்பை ஊக்குவிக்கும். சீரான, ஆழமான உறக்கத்திலும் இந்த ஹார்மோன் உற்பத்தி நிகழும். தினமும் 1 மணி நேரம் வீதம் வாரத்தில் ஆறு நாள்கள் யோகா பயிற்சி செய்பவர்களுக்கு டோஃபமைனின் அளவு குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் இந்த வேதிப் பொருள் விழிப்புணர்வையும் எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தக்கூடியது.
ஆக்ஸிடாஸின்
காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆக்ஸிடாஸின், இதமான அணைப்பின்போது சுரக்கிறது. துணையோடு தோழமையுடன் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளும்போதும், குடும்பத்தினருடனான அன்பான இணக்கத்தின்போதும் இந்த ஹார்மோன் வெளியிடப்படுகிறது. பச்சிளம் குழந்தையை அரவணைத்து தாய்ப்பால் கொடுக்கும்போது இந்த ஹார்மோனும் சேர்ந்தே சுரக்கிறது. அத்துடன் செல்லப் பிராணிகளை அரவணைக்கும்போதும், வருடிக் கொடுக்கும்போதும் இந்த வேதிப் பொருள் மூளையில் உற்பத்தியாகிறது. எதிர்பாராத நேரத்தில் பரிசுகளை அளிக்கும்போதும் மெல்லிய இசையைக் கேட்கும்போதும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்யும்போதும் ஆக்ஸிடாஸின் அதிக அளவில் சுரக்கும்.
எண்டார்ஃபின்
மூளையில் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் எண்டார்ஃபின். இது ஒரு வலிநிவாரணியாகச் செயல்பட்டு மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சுவையான, காரசாரமான மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது இந்த ஹார்மோன் வெளியிடப்படுகிறது. பிரசவ நேரத்தில் வலியைக் குறைக்க இந்த ஹார்மோன் துணைபுரிகிறது. தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. நகைச்சுவையான காட்சிகளைப் பார்க்கும்போதும் சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கும்போதும் எண்டார்ஃபின் வெளியிடப்படுகிறது.
தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இந்த ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். அரோமாதெரபி எனப்படும் நறுமண சிகிச்சைகளில் உபயோகிக்கப்படும் எண்ணெய்களாலும் மசாஜ் செய்யும்போதும் என்டார்பின் சுரப்பிகள் வேலை செய்யும். பிறர் மேல் அன்பு செலுத்தி அவர்களுக்கும் உதவும் நேரத்திலும் எண்டார்ஃபின் சுரப்பு நிகழ்கிறது.
செரட்டோனின்
மனதின் சமநிலையைச் சீர்படுத்தி நல்ல மனநிலையைத் தக்கவைக்க உதவும் ஹார்மோன் இது. இந்த ஹார்மோன் சுரப்பின்போது மன அழுத்தமும் கோபமும் கட்டுப்படுத்துகிறது. காயங்களை ஆற்றவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவி செய்கிறது. மகிழ்ச்சியான மனநிலையைத் தரும் இந்த வேதிப்பொருள் மனத்துக்கு அமைதியை அளித்து, கவனக் குவிப்பையும் அதிகரிக்கிறது. முக்கியமாக, சீக்கிரமே உணர்வு வயப்படுவதிலிருந்து நம்மைக் காக்கிறது.
செரட்டோனின் உற்பத்தி குறைவால் தூக்கமின்மை, உற்சாகக் குறைவு, மனநிலையில் தடுமாற்றம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பதன் மூலமாகவும் உடற்பயிற்சி, தியானம், பழங்கள் மிகுந்த ஆரோக்கியமான உணவு போன்றவற்றின் மூலம் செரட்டோனின் சுரப்பைத் தூண்டமுடியும்.