Published : 20 Jun 2022 05:59 PM
Last Updated : 20 Jun 2022 05:59 PM

துடிக்கும் தோழன் 9 | ஆபத்தில் உதவும் பேஸ்மேக்கர்

தய நோயாளிகளுக்கு பேஸ்மேக்கர் பொருத்தியதாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பேஸ்மேக்கரை எப்படிப் பொருத்துகிறார்கள் தெரியுமா? ஆஞ்சியோகிராமுக்குச் செய்வது போல கையில் உள்ள சிரையின் மூலமோ கழுத்து எலும்பின் பின் உள்ள சிரையின் மூலமோ ஒரு மெல்லிய குழாய் வழியாக மின் இணைப்புக் கம்பியை இதயத்தின் மேல் அறைகளின் தடுப்புச் சுவரைத் தொடும்படியாகவோ அல்லது வலதுபுறக் கீழறையின் மூலையிலோ பொருத்துவார்கள். இதன் வெளிநுனியைத் தீப்பெட்டி அளவில் உள்ள மின்கலத்துடன் அதாவது பேட்டரியுடன் பொருத்துவார்கள்.

நோயாளி ஆண் என்றால் இந்த மின் இணைப்பு அவரது கழுத்து எலும்புக்குக் கீழே தோலுக்கடியிலும் பெண்ணாக இருந்தால் மேல் வயிற்றுத் தோலுக்கடியிலும் பொருத்தப்படும்.இதயத்துக்குத் தேவையான மின்சக்தியைத் தேவையான நேரத்தில் செலுத்தும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு நோயாளி வீடு திரும்புவார். இதைப் பொருத்தியபின் அந்த இதய நோயாளி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பரிசோதனை இதயம் துடிக்கும் அளவு, அதற்குத் தேவையான மின் அளவு, தேவையான மின்தூண்டல் ஏற்படுகிறதா (அதாவது இதயத் துடிப்பின் அளவு குறையும்போது இந்தக் கருவி இதயத்தை மீண்டும் சரியாகத் துடிக்கும்படி மின் தூண்டலை ஏற்படுத்த வேண்டும்) என்று இவை அனைத்தையும் ஒரு சிறிய தீப்பெட்டி அளவில் உள்ள கருவியை மார்பின்மீது வைத்து அறியலாம். ஈசிஜி மெஷினில் இணைத்துப் பதிவுகளைக் காகிதத்தில் வரைபடமாகப் பெறலாம். அளந்த அளவுகளையும் பதிவாகி வரும் அளவுகளையும் மருத்துவர் பார்த்துத் தேவைக்கேற்ப எதை வேண்டுமானாலும் சரிசெய்ய முடியும்.

அதேபோல பேஸ்மேக்கர் மின்கலத்தின் ஆயுள் அதாவது ‘பேட்டரி லைஃப்’ இதையும் சரிபார்க்க முடியும். சாதாரணமாக பேட்டரியின் ஆயுள் 10ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால், ஒவ்வொருவரின் இதயத்தின் மின்தூண்டல் தேவையைப் பொறுத்து அதிகமாக வேலைசெய்தால் குறையலாம். இந்த மாதிரி பேட்டரி லைஃப் குறையும்போது சிறிய அறுவை சிகிச்சை மூலம் பழைய பேட்டரியை நீக்கிப் புதியதைப் பொருத்த முடியும். பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்கள் ஏதாவது நீண்ட கால நோய் இருந்தாலோ, மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது மாரடைப்பு வர சாத்தியம் இருப்பதாகப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்திருந்தாலோ தவிர மற்றவர்களைப் போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியும். அதற்கு ஒரு தடையும் கிடையாது. உடற்பயிற்சி செய்யலாம், டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் விளையாடலாம். நீச்சல் பயிற்சி செய்யலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் மலையேற்றம்கூடச் செய்திருக்கிறார்.

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்கள் தப்பித்தவறிக்கூடக் காந்த சக்தி உள்ள பொருட்களின் அருகில் செல்லக் கூடாது. காரின் பேனட் அருகில் இருக்கும் மாக்னெடோ என்கிற கருவியில் இருக்கும் குறைந்த அளவு காந்தசக்திகூடக் கருவியைப் பழுதாக்கும் அபாயம் உண்டு. விமானப் பயணம் செய்யும்போது மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதிப்பார்கள் அல்லவா? அதுவும் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்களுக்குச் செய்யவே கூடாது. இந்தக் கருவியைப் பொருத்திய பின் ஒரு சான்றிதழ் தருவார்கள். அதைப் பயணங்களின்போது எப்போதும் கூடவே வைத்திருக்க வேண்டும். அது சேதமாகாமல் இருக்க
லாமினேட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதைக் காண்பித்தால் மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தாமல் கையால் தடவிப் பார்த்து சோதனை செய்வார்கள். பேஸ் மேக்கரைப் பொருத்திக்கொள்ள வயது ஒரு தடையே இல்லை. தவிர, இது வயதானவர்களுக்கே அதிகமாகத் தேவைப்படுகிறது.

கல்யாணி நித்யானந்தன்

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு).
(மறைந்த டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)

முந்தைய அத்தியாயம் > மருத்துவர்கள் கடவுள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x