

கண்களைத் தேய்க்கும்போது சுகமாகத்தான் இருக்கும். கண்களைத் தேய்க்கும்போது கண்ணீர் சுரப்பி தூண்டப்பட்டு கண்ணீர் ( Tears ) அதிகமாகச் சுரந்து கண்களை இலகுவாக்கும். அதன் மூலம் உறுத்தல் குறைவதுபோல் இருக்கும். கண்களைத் தேய்க்கும்போது மன அழுத்தம் குறைவதுபோல் இருக்கும். ஆனால், கண்ணைக் கசக்கக்கூடாது என்று என்பதே கண் மருத்துவர்கள் நிலைப்பாடு.
அடிக்கடி கண்ணைக் கசக்கினால் நாளடைவில் பல கண்பிரச்சினைகளுக்கு அது வழி வகுக்கும். மேலும், தொடர்ந்து அழுத்தித் தேய்க்கக் கருவிழி ( Cornea ) மெலிதாகி வெளியே தள்ளப்பட்டு நாளடைவில் கண்ணின் கருவிழி கூம்பு வடிவமாகி ‘கெரட்டோகோனஸ்’ என்கிற நிலைக்குச் செல்ல நேரிடும்.
கையிலிருக்கும் கிருமிகள்
பார்வை குறைபாட்டுக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள், குறிப்பாகக் கிட்டப்பார்வைக்கு ( Myopia ) கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு ஒவ்வொருமுறை கண்ணாடியைக் கழற்றும்போதும் கண்களைத் தேய்க்கும் பழக்கம் இருக்கும். தொடர்ந்து செய்யும்போது நாளடைவில் பார்வை பிரச்சினை அதிகரிக்கலாம். என்னதான் கைகளைச் சுத்தமாகக் கழுவினாலும் கையில் கிருமிகள் இருக்கலாம். கையைக் கொண்டு நேரடியாகக் கண்ணைத் தொடும்போது கண்ணில் தொற்று ஏற்படலாம். இதன் மூலம் கண்ணில் சிகப்பு, நீர் வடிதல் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கண்களைத் தொடர்ச்சியாகத் தேய்க்கும்போது கண்களைச்சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு தோற்றத்துக்கு இடையூறாக இருக்கலாம்.
கண்நீர் அழுத்த உயர்வு நோய்
சிலருக்குக் கண்ணில் கண்நீர் அழுத்த உயர்வு நோய் ( Glaucoma ) இருக்கலாம். அதற்குச் சொட்டு மருந்து போட்டுக் கொண்டிருக்கலாம். கண்ணில் உறுத்தல் இருந்து கண்ணைக் கசக்கலாம். அப்படி அடிக்கடி கசக்கும்போது கண்நீர் அழுத்தப் பிரச்சினை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருக்கிறது.
பூச்சிகளினால் நேரும் ஆபத்து
இரு சக்கர வாகனத்தில் குளிர் கண்ணாடியோ அல்லது தலைக்கவசமோ அணிந்து செல்லாதபோது கண்ணில் தூசியோ பூச்சியோ விழலாம். இது பொதுவாக எல்லோருக்குமே ஏற்படுவதுதான். வாகனத்தில் வேகமாகச் செல்லும்போது வேகமாகப் பறந்து வரும் கொசு போன்ற பூச்சிகள் கண்ணில் மோதலாம். அவ்வாறு வேகமாக வந்து மோதும்போது பூச்சியின் கால்கள் கண்ணின் கருவிழியின் மீது வேகமாக மோதலாம். மோதிய வேகத்தில் பூச்சியின் கால்கள் கருவிழியைத் துளைத்துக் கொண்டு பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் நீட்டிக் கொண்டு இருக்கலாம்.
அந்தச் சூழலில் கண்ணைக் கசக்காமல் மருத்துவமனைக்குச் சென்றால் கருவிழிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பூச்சியின் காலை சிறிய இடுக்கி ( Forceps ) கொண்டு வெளியே எடுக்க ஓரளவு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லாமல் கண்ணில் ஏற்படும் உறுத்தல் காரணமாகக் கண்ணை அழுத்தித் தேய்த்துக் கசக்கும்போது பூச்சியின் கால் உடைந்து கருவிழி வழியாகக் கண்ணுக்குள் சென்று விடும் ஆபத்து இருக்கிறது. அப்படி கண்ணுக்குள் செல்லும்பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்துதான் அதை எடுக்க முடியும்.
கருவிழி புண்
இதே போல் வண்டியில் செல்லும்போது கண்ணில் தூசியும் சர்வ சாதாரணமாக விழுவதுண்டு. தூசி கருவிழியிலோ மேல் இமை உட்புறத்திலோ ஒட்டிக் கொள்ளலாம். அப்படி தூசி கண்ணில் இருக்கும்போது, ஏற்படும் உறுத்தலினால் கண்ணைக் கசக்கும்போது கருவிழியில் சிராய்ப்பு ஏற்பட்டு கருவிழி புண்ணாகலாம் (Corneal Ulcer ).
கண்ணில் தூசி விழுந்தாலோ, வேறு ஏதாவது காரணத்தினால் உறுத்தல் ஏற்பட்டாலோ, பழக்கம் காரணமாகவோ கண்ணை எக்காரணம் கொண்டும் கசக்காமல் இருப்பதே கண்ணுக்கு நல்லது.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com