

சுவாசிக்கக் காற்று, உண்ண உணவுக்கு அடுத்தபடியாக மனிதனுடைய அத்தியாவசியத் தேவை தூக்கம்தான். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலைக் கேட்டால், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்குக் கோபம் வரலாம். தூக்கமின்மை என்பது வெறும் தூங்கும் நேரம் குறைவது மட்டுமல்ல. எட்டு மணி நேரம் தூங்கினாலும்கூட உரிய தரத்துடன் தூக்கம் இல்லாமல் இருந்தால், அதுவும் தூக்கமின்மைதான். கடையில் ஒரு கிலோ அரிசி வாங்குகிறோம். அப்போது எடையை மட்டுமா பார்க்கிறோம்? தரத்தையும் சேர்த்துத்தானே பார்க்கிறோம். அதுபோலத்தான் தூக்கத்தின் தரமும் முக்கியம்.
இவர்களுக்கும் வருமா?
மனநோய்கள், உடல் நோய்கள், வாழ்க்கைப் பிரச்சினை என எதுவென்றாலும் முதலில் பாதிக்கப்படுவது தூக்கம்தான். ஏற்கெனவே மனநோய்களைப் பற்றிய கட்டுரைகளில் இதைப் பற்றி அலசியிருக்கிறோம். இந்த முறை வளர்இளம் பருவத்தினருடைய தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கும் நோய்களைப் பற்றி பார்ப்போம்.
‘வயசாகிட்டா மட்டும்தானே தூக்கமின்மை பிரச்சினை வரும்’ என்ற கேள்வி பலருக்கும் எழுவது நியாயம்தான். ஆனால், சில குறிப்பிட்ட தூக்கப் பிரச்சினைகள் குழந்தைகளையும் வளரிளம் பருவத்தினரையும் மட்டுமே பாதிக்கின்றன.
இப்படியெல்லாம் வருமா?
விழித்திருக்கும் நேரம் (wakefulness), தூங்கும் நேரம் என்று ஒரு நாளை இரண்டாகப் பிரிக்கலாம். ஆனால், ஒரு சிலருக்கு இவை இரண்டும் அவ்வப்போது கலந்துவிட்டால் என்ன ஆகும்? விழிப்போடு இருக்க வேண்டிய நேரத்தில், நாம் விரும்பாவிட்டாலும் தூங்கி விழுந்துவிடுவோம். இதைத்தான் ‘நார்கோலெப்சி’ (Narcolepsy) என்கிறார்கள். இதேபோலத் தூக்கத்தில் அமைதியாக அசைவின்றி இருக்க வேண்டிய நிலையில் பேசுவது, நடப்பது, வீறிட்டு அலறுவது, சிறுநீர் கழிப்பது, ஏன் கையில் கிடைத்த உணவை உண்பதுகூட செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தூக்க வியாதியில் தானாகவே எழுந்து சமையலறைக்குச் சென்று, கத்தியை எடுத்துக் காயப்படுத்திக்கொண்டு மறுபடியும் தூங்கிவிட்டான். காலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை மருத்துவமனைக்குக் கொண்டுவந்து காப்பாற்றி, தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டான் என மனநல ஆலோசனைக்கு அழைத்து வந்தார்கள். அப்போதுதான் அவனுக்குத் தூக்க வியாதி இருந்ததும், அதில் ஒரு குழப்ப நிலையிலேயே இந்தச் செயலைச் செய்ததும் தெரியவந்தது. ஆனால் கடைசிவரை என்ன செய்தோம், ஏன் இப்படிச் செய்தோம் என்ற ஞாபகம் அவனுக்கு வரவில்லை. தூக்கத்தில் நடந்த இது, எப்படி ஞாபகம் இருக்கும்?
என்ன அறிகுறிகள்?
# தூக்கத்தில் தெளிவாக அல்லது உளறலாகப் பேசுவது
# திடீரென்று வீறிட்டு அலறி எழுந்து, சில நிமிடங்கள் பதற்றமாகவோ, குழப்பமாகவோ காணப்படுவது
# தூக்கத்தில் எழுந்து நடப்பது, சம்பந்தமில்லாத செயல்களைச் செய்வது
# படுக்கையில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது (5 வயதுக்கு மேல்)
# உதைப்பது, காயம் ஏற்படும் அளவுக்கு அதிகப்படியான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது
# அதிகப்படியான, பயம் தரும் கனவுத் தொல்லைகள்
# வலிப்பு நோய் அறிகுறிகள்
என்ன செய்வார்கள்?
குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பாதிக்கும் இந்தத் தூக்க வியாதிகளிடையே சில ஒற்றுமைகள் இருக்கலாம்.
# சுமார் ஐந்து வயதில் ஆரம்பிக்கும் இவை வளர் இளம்பருவத்தில் உச்சகட்டத்தை அடையும். ஆனால், 18 வயதுக்கு மேல் இவை அரிதாகவே காணப்படும்.
# இந்தத் தூக்க நோய்கள் பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் மூன்று மணி நேரத்துக்குள்ளாகத்தான் ஏற்படும்.
# அந்த நேரத்தில் அவர்களைக் கட்டுப்படுத்த இயலாது அல்லது குழப்பமான மனநிலையில் காணப்படுவார்கள்.
# காலையில் இதைப் பற்றி அவர்களிடம் விவரித்தால் ‘அப்படி இருக்க வாய்ப்பே இல்லை’ என்று சத்தியம் செய்யும் அளவுக்கு, தூக்கத்தில் நடந்த சம்பவங்கள் சுத்தமாக அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்காது.
# ஒரே நபரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருக்கலாம்.
# பல நேரம் பெற்றோருக்கோ, மற்ற குடும்ப நபர்களுக்கோ இதே போன்ற பிரச்சினைகள் இருந்திருக்கலாம்.
ஏன் சிகிச்சை தேவை?
இப்படிப்பட்ட தூக்க வியாதிகளால் இரவில் பாதிக்கப்படுவது என்னவோ, உடன் படுத்திருப்பவர்கள்தான். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும்பாலும் அது ஞாபகமே இருக்காது. ஆனால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதால், பல பகல் நேரப் பாதிப்புகள் ஏற்படலாம். அதிகச் சோர்வு, எரிச்சல் உணர்வு, தலைவலி, பசியின்மை, மனப் பதற்றம், கை நடுக்கம், கவனக்குறைவு, ஞாபக மறதி போன்றவற்றால் வளரிளம் பருவத்தினரின் படிப்பும் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும்.
தூக்கத்தில் நடப்பதால் தடுமாறி விழுவது முதல் பெரும் விபத்துகள்வரை நிகழலாம். தூக்கத்தில் நடப்பது மற்றும் சிறுநீர் கழிப்பதால் இவர்கள் மன உளைச்சலுக்கும் அவமான உணர்வுக்கும் ஆளாக வாய்ப்பிருப்பதால், ஆரம்ப நிலையிலேயே மனநல மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவது நல்லது. ஏதோ காரணம் இல்லாத பயம், கோழைத்தனம் என்று சொல்லிக் காலம் தாழ்த்திவிடாதீர்கள்.
எப்போது தேவை?
சிலருக்கு இந்தத் தூக்கப் பிரச்சினைகள் வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே அவ்வப்போது ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, என்றைக்காவது ஒருநாள் இதுபோல நடந்துகொள்ளும்பட்சத்தில் சிகிச்சை தேவையில்லை, நாளடைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது. வாரத்துக்கு ஓரிரு முறைகளுக்கு மேல் இந்தப் பிரச்சினைகள் தலைகாட்டினால், கண்டிப்பாகச் சிகிச்சை தேவை. அப்படி அளிக்கப்படும் சிகிச்சை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், வளரிளம் பருவத்தினரின் படிப்பின் தரத்தையும் உயர்த்தும்.
(அடுத்த வாரம்: நிம்மதியான உறக்கம் கிடைக்கும் வழி)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com