காசநோய்க்குக் காரணமும் புகையே!

காசநோய்க்குக் காரணமும் புகையே!
Updated on
3 min read

திரையரங்கிற்குச் செல்லும் எவரும் மனத்திற்குப் பிடித்த நடிகர்களைப் பார்க்கும் முன்னர் திரையில் காண்பது ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், புகைபிடித்தல் உயிரைக் கொல்லும்’ எனும் விழிப்புணர்வு வாசகத்தைத்தான். புகையிலைப் பொருள்களின் அட்டைகளிலும் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய புற்றுநோய்ப் பாதிப்பின் படங்கள் அச்சிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது. புகையிலைப் பழக்கம் புற்றுநோயை மட்டும்தான் ஏற்படுத்துமா என்ன?

புற்றுநோய் மட்டுமல்ல பக்கவாத நோய், கரோனரி தமனி நோய், இதயச் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு இதய நோய்களும், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற நுரையீரல் பாதிப்புகளும், அதிக உயிரிழப்புக்குக் காரணமான உயிர்க்கொல்லி நோயான காசநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் பன்மடங்கு அதிகம். புகைபிடித்தல் பழக்கம், காசநோய் ஆகிய இரண்டிற்குமான தொடர்பை உலகெங்கிலும் வாழும் வெவ்வேறு இன மக்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

புகையிலையின் ஆபத்து

தேசியக் காசநோய் அறிக்கை 2022-ன்படி, 2021-ம் ஆண்டில் இந்தியாவில் 19.33 லட்சம் பேர் புதிதாகவோ மறுதொற்றாகவோ காசநோய் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அத்துடன் 4.93 லட்சம் நோயாளிகள் காசநோய் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

புகையிலைப் பயன்பாட்டைப் பொறுத்தவரையில், உலகின் இரண்டாவது பெரிய புகையிலை உற்பத்தியாளராகவும் பயன்பாட்டாள ராகவும் இந்தியா விளங்குகிறது. புகையிலைப் பயன்பாடு என்பதில் குட்கா, பான் மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகையிலான பயன்பாடு, புகை பிடித்தல் ஆகிய இரண்டும் அடங்கும்.

வாயில் மெல்லும் புகையிலைப் பயன்பாடு என்பது புகைப்பிடித்தல் என்பதைவிடவும் மிக அதிகமாகப் பழக்கத்தில் இருக்கிறது. ஏறத்தாழ 27.5 கோடி இந்தியர்கள் புகையிலை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்றும், ஆண்டொன்றிற்கு 10 லட்சம் இந்தியர்கள் புகையிலைப் பயன்பாட்டால் இறப்பதாகவும் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

இது காசநோய், எச்.ஐ.வி. தொற்று, மலேரியா ஆகிய மூன்று நோய்களாலும் இறக்கும் இந்தியர் களைவிடவும் அதிகமான எண்ணிக்கை.

அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு

புகைபிடித்தலின்போது நுரையீர லுக்குள் செல்லும் பல நச்சுப் பொருள்களால் மூச்சுக் குழாயின் மேற்பரப்பு பெரிதும் பாதிப்படைகிறது. இதன் காரணமாக நோயெதிர்ப்புத் திறன் குறைவதால், காசநோய் நுண்கிருமிகள் எளிதில் புகைபிடிப்பவர்களுக்குத் தொற்றை ஏற்படுத்திவிடுகின்றன.

புகைபிடிக்கும் பழக்கமானது, தீவிர காசநோய் ஏற்படுவதற் கான சாத்தியங்களை மூன்று மடங்கு அதிகரிப்பதுடன், அந்நோயால் இறப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் 3-4 மடங்கு அதிகரிக்கிறது.

காசநோயால் இறக்கும் நோயாளிகளில் 38 சதவீதத்தினர் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமின்றி இத்தகையோர் காசநோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும் பட்சத்தில், அப்பழக்கம், மருந்துகளைச் செயலிழக்கச்செய்து காசநோயிலிருந்து குணமடைவதைத் தாமதப்படுத்துவதோடு, காசநோய் மறு தொற்று ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது.

இரண்டாம் நிலை புகைத்தல்

தனக்குப் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதபோதும், பிறர் புகைத்து வெளியே விடும் புகையை அருகிலிருந்து சுவாசிக்க நேருவது இரண்டாம் நிலை புகைத்தல்.

நேரடியாகப் புகைக்கும் பழக்கம் கொண்டவர்களைப் போலவே இரண்டாம் நிலை புகைத்தலும் காசநோய்த் தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கவே செய்கிறது. இத்தகைய இரண்டாம் நிலை புகைத்தலால் உலகெங்கிலும் குழந்தைகளே பெரிதும் பாதிப்படைகின்றனர்.

அரசின் முன்னெடுப்புகள்

நமது நாட்டில் காசநோய் ஒழிப்பு, புகையிலைக் கட்டுப்பாடு குறித்த பணிகள் முறையே ‘தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்’, ‘தேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம்’ ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. காசநோய், புகைத்தல் ஆகிய இரண்டிற்குமான நெருங்கிய தொடர்பை உணர்ந்திருந்த ஒன்றிய அரசின் சுகாதாரம், குடும்பநலத் துறை மேற்கூறிய இரண்டு திட்டங்களையும் ஒருங்கிணைத்து 2010-ம் ஆண்டு குஜராத் மாநிலம் வதோதராவில் ஒரு முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தியது.

காசநோய் கண்டறியப்பட்டு, குறுகிய கால நேரடி சிகிச்சைக்குப் பதிவுசெய்திருந்த நோயாளிகளுள் புகையிலைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களிடம், உலகச் சுகாதார நிறுவனம் வகுத்தளித்த மாதிரித் திட்டத்தைப் பின்பற்றி புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

சிகிச்சையின் முடிவில் புகையிலையைப் பயன்படுத்தி வந்த நோயாளிகளில் 67.3% பேர் புகையிலை பழக்கத்தைக் கைவிட்டனர் என்பதோடு காசநோயில் இருந்தும் கணிசமானோர் குணமடைந்தனர். இந்த ஆய்வைப் பின்பற்றி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஒன்றிய காசநோய்ப் பிரிவு நடத்திய மற்றொரு ஆய்வில் காசநோய்ச் சிகிச்சை காலத்தில் புகையிலைப் பயன்பாட்டின் தீங்குகள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட நோயாளிகளில் 75 சதவீதத்தினர் புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்டதோடு பெரும்பாலோர் காசநோய் தொற்றிலிருந்தும் விடுபட்டனர்.

இவ்விரு ஆய்வுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளிலும் புகையிலைப் பயன்பாட்டின் தீங்குகள் குறித்து காசநோய்ச் சிகிச்சையிலுள்ள நோயாளிகளுக்கு எடுத்துரைப்பது என்பது செலவு குறைந்த விழிப்புணர்வு முறை என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ‘காசநோய் - புகையிலைக் கூட்டுச் செயல்பாட்டுக் கட்டமைப்பு’ ஏற்படுத்தப் பட்டு காசநோய், புகையிலை ஆகிய இரண்டினாலும் ஏற்படும் பாதிப்புகளைக் களையத் திட்டங்கள் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு முக்கியம்

‘கண்டறிதல்-சிகிச்சையளித்தல்-தடுத்தல்-கட்டமைத்தல்’ எனும் நான்கு நிலை திட்ட முறையை அடிப்படையாகக் கொண்டே நமது நாட்டில் காசநோய் ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நான்கு திட்டமுறைகளுள் முதல் மூன்றும் புகையிலைப் பயன்பாடு காரணமாகப் பாதிப்படைகின்றன என்பதிலிருந்தே காசநோய் ஒழிப்பில் புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள இயலும்.

‘காசநோயை அழித்தொழித்தல்’ எனும் இலக்கோடு செயல்படும் அனைவரும், காசநோய்க்கும் புகையிலைப் பயன்பாட்டுக்குமான தொடர்பு மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர், தேசியக் காசநோய் ஆராய்ச்சி நிறுவன மருத்துவ அலுவலர்

தொடர்புக்கு: dr.thirutamizh@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in