உணவுச் சுற்றுலா: மூணாறில் பிரமாண்ட அஞ்சறைப் பெட்டி

உணவுச் சுற்றுலா: மூணாறில் பிரமாண்ட அஞ்சறைப் பெட்டி
Updated on
3 min read

பனி போர்த்திய மூணாறு நகரம். சுற்றுலாப் பயணிகள் குவியும் மையப் பகுதி அது! மின்னொளியின் உதவியால் கடைத் தெருக்கள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன! நகரெங்கும் வெண்ணிறப் பனி விரவிக்கொண்டிருந்தது. சாலையில் நடப்பவர்கள் அடிக்கடி கைகளைத் தேய்த்துச் சூடேற்றிக்கொள்வதைப் பார்க்க முடிந்தது. தேநீர்க் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

குளிர்காலமாக இருப்பினும் சுற்றுலாப் பயணிகள், ஊர்மக்களின் புழக்கம் அப்பகுதியை மும்மரமாக வைத்திருந்தது. சாலையோரத்தில் நிறைய துணிக்கடைகள். டிசம்பர் மாதம் என்பதால் கம்பளி ஆடைகள் விற்பனை ஆகும் கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. துணிக்கடைகள் தவிர்த்து பழக்கடைகள், கலர் கலர் இனிப்புக் கடைகள் என அங்காடித் தெரு நிரம்பி வழிந்தது. நறுமணமூட்டிகள் நிறைந்த வாசனைமிக்க கடைகளும் வரிசைகட்டி நின்றுகொண்டிருந்தன!

சித்த மருத்துவத்தின் அங்கமான அஞ்சறைப் பெட்டிப் பொருட்களின் அணிவரிசையை ரசிக்க ஒரு சுகந்தக் கடைக்குள் நுழைந்தேன்! உள்ளே காலடி எடுத்து வைத்ததும், அப்படியொரு வாசனை! மழை வாசனைக்கு ஈடுகொடுக்கும் விதமாக இருந்தது அஞ்சறைப் பெட்டிப் பொருட்களின் வாசனை! எந்தப் பொருளிலிருந்து என்ன வாசனை வருகிறது என்பதைப் பிரித்தறிய நாசிப் படலத்தில் உள்ள வாசனையைக் கடத்தும் ஏற்பான்கள் (Receptors) சிரமப்பட்டன. வித்தியாசமான சுகந்த அனுபவம் அது!

'ஆராய்ச்சிகள் அஞ்சறைப் பெட்டியிலிருந்து தொடங்க வேண்டும்' இது மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் ஆழமான வரிகள்! இதை மனதில் வைத்துக்கொண்டு அந்தக் கடையில் நீண்ட நேரம் செலவழிக்கத் திட்டமிட்டேன்!

பிரமாண்ட அஞ்சறைப் பெட்டி

ஏலம், கிராம்பு, சோம்பு, சீரகம், சாதிக்காய், கடுக்காய், அன்னாசிப்பூ, பட்டை, சுக்கு, மிளகு, மூலிகை மரப் பட்டைகள் போன்ற பொருட்களைத் தாங்கிய பிரமாண்ட அஞ்சறைப் பெட்டியாக அந்தக் கடை காட்சி கொடுத்தது! பெரிய பெரிய கண்ணாடிக் கலன்களில் அஞ்சறைப் பெட்டிப் பொருட்கள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விதம் என்னை ஈர்க்கத் தவறவில்லை! ஒவ்வொரு பொருளிலும் வெவ்வேறு தரங்களாகப் பிரித்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்! கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அங்கு அடுக்கப்பட்டிருந்த அஞ்சறைப் பெட்டிப் பொருட்கள் அனைத்தையும் நோட்டமிட்டேன்.

'ஏலத்தில் இது ஃபர்ஸ்ட் குவாலிடி; இது செகண்ட் குவாலிடி; இது மிளகில் இருக்கிற ரகங்கள்' என அஞ்சறைப் பெட்டிக்குள் வாழும் கடைக்காரர் அறிமுகம் கொடுக்க, ஒவ்வொன்றின் தரம் குறித்தும் கேட்டறிந்தேன். ஒவ்வொரு பொருளும் எங்கிருந்து வருகிறது, விலை நிர்ணயம் எப்படி எனப் பல்வேறு விஷயங்களை அவர் மூலம் அறிய முடிந்தது. வெவ்வேறு ரகங்களின் தரத்தைப் பிரித்தறியும் நுணுக்கங்களையும் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். தரம் கூடக் கூட அப்பொருட்களில் உள்ள மருத்துவக் குணமிக்க வேதிப்பொருட்களின் உள்ளடக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

"பட்டையில் இது அசல் குவாலிடி. போலிப் பட்டைகளும் சர்வ சாதாரணமாகச் சந்தையில் இருக்கின்றன" எனும் செய்தியை அவர் தெரிவித்தார். செயற்கை நறுமணப் பூச்சு மூலம் தரம் குறைந்த அஞ்சறைப் பெட்டிப் பொருட்களுக்கு வாசனையைக் கொடுத்து உயர் தரமாகக் காட்டும் வித்தைகளும் நறுமணச் சந்தையில் நடைபெறுவதாக அறிந்துகொண்டேன். அங்கேயும் கலப்படம்!

நமது இல்லங்களில் சக உறவுகள் போலப் புழங்கிய அஞ்சறைப் பெட்டிப் பொருட்களை, இப்போதெல்லாம் இது போன்ற மலைப் பகுதிச் சுற்றுலா தளங்களில் மட்டுமே முழுமையாகக் காண முடிகிறது. இவை தவிர்த்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள நாட்டு மருந்துக் கடைகளில் அஞ்சறைப் பெட்டிப் பொருட்கள் கிடைப்பது இப்போதைக்கு ஆறுதல்!

குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்

மலைப் பிரதேசங்களுக்குக் குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது, இது போன்ற இடங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அஞ்சறைப் பெட்டிப் பொருட்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் மருத்துவப் பலன்களைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். 'உணவின் தரத்தை உயர்த்தும் சக்தி அஞ்சறைப் பெட்டிப் பொருட்களுக்கு உண்டு, உணவை மருந்தாக மாற்றும் சக்தி அஞ்சறைப் பெட்டிப் பொருட்களுக்கு இருக்கிறது' எனும் பேருண்மையை அவர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்க முயற்சிசெய்யுங்கள். ஏலத்தின் இன்ப மயமான வாசனைக்கும், கிராம்பின் கார நெடிக்கும் அதில் உள்ள ஆல்கலாய்டுகள் காரணம் என்பதை எடுத்துச்சொல்லி, அவர்களுக்குப் பிரித்தறியக் கற்றுக்கொடுங்கள்.

மூலிகை மசாலா தேநீர்

நான் சென்ற கடைக்கு வெளியே அஞ்சறைப் பெட்டிப் பொருட்களின் மூலம் தயாரிக்கப்படும் 'மசாலா டீ' விற்பனை செய்யப்பட்டது. மற்ற இடங்களில் கிடைக்கும் மசாலா தேநீருக்கும் இதற்கும் சுவையிலும் வாசனையிலும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. இதை மசாலா தேநீர் என்று சொல்வதற்குப் பதிலாக நறுமணத் தேநீர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். கடையில் இருக்கும் பொருட்களை வைத்தே தேநீர் தயாரிக்கப்படுகிறதாம். தேநீரின் விலை இருபது ரூபாய்! தேநீரை நான் பருக பருக அதன் மருத்துவக் குணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார் தேநீர்க் கடைக்காரர்! தேநீர் தயாரிக்கப் பயன்படும் பொடியும் அங்கேயே விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிரசர்வேடிவ்கள் இல்லாத மூலிகை மசாலாப் பொடியும் அந்தக் கடையில் கிடைப்பது சிறப்பு!

அஞ்சறைப் பெட்டிப் பொருட்களைத் தவிர்த்து, சாக்லேட்கள், காபித் தூள், தேநீர் தூள் போன்ற பொருட்களும் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. மூணாறு பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இது போன்ற கடைகளை வரிசையாகப் பார்க்க முடியும். மூணாறு மட்டுமல்லாமல் பெரும்பாலான மலைப்பகுதி சுற்றுலா தளங்களில் அஞ்சறைப் பெட்டிக் கடைகள் இருக்கின்றன.

சுற்றுலா செல்லும்போது, மாலை வேளையில் இது போன்ற கடைகளில் தவறாமல் நேரம் செலவழித்துப் பாரம்பரியத்தை ஆழமாக உணருங்கள்! நாம் மறந்த அனைத்து அஞ்சறைப் பெட்டிப் பொருட்களையும் காண அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய பகுதி இது. அங்கிருக்கும் அனைத்துப் பொருட்களையும் வாங்க வேண்டும் என்பது அவசியமில்லை. உங்களுக்குத் தேவையானதை மட்டும் வாங்கிக்கொண்டு, அந்த நறுமணப் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ளும் பாடசாலையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிளகு, ஏலக்காய், தேயிலை, இயற்கை மசாலாப் பொடி போன்றவற்றை வாங்கிக்கொண்டு, என்னைச் சுற்றி வாசனை சூழ அந்தப் பிரமாண்ட அஞ்சறைப் பெட்டிக் கடையிலிருந்து வெளியேறினேன்! 'மீண்டும் ஒரு மசாலா தேநீர் பருகலாமே' என்று அழைத்தது தேநீரிலிருந்து ஆவியாக வெளியேறிக்கொண்டிருந்த பிரத்தியேக வாசனை!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in