கண்பயிற்சி கண்ணுக்கு எப்போது தேவை?

கண்பயிற்சி கண்ணுக்கு எப்போது தேவை?
Updated on
3 min read

சில நாட்களாக கண்பயிற்சி குறித்த ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைப் பார்த்திருக்கலாம். மேலும் கீழும் பக்கவாட்டிலும் செல்லும் சிறிய பந்து அளவிலான உருண்டை வடிவ உருவங்களைப் பார்க்கச் சொல்லுகிறது அந்த காணொளி. அதில் ஒரு அடிக்குறிப்பு வேறு. இதைச் செய்தால் கண்ணில் பார்வை அதிகரிக்கும் என்று. பலரும் அதைப் பார்த்துவிட்டு அந்த காணொளி என்ன சொல்கிறது என்றும், அப்படிப் பார்த்தால் கண்ணாடி போடுவதைத் தவிர்க்க முடியுமா என்றும் கேட்கிறார்கள். ஜப்பான் கண் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் மிகச் சிறந்த தயாரிப்பு என்ற குறிப்பினையும் சிலர் சேர்த்து அனுப்பி வருவதால் பலரையும் அது கவர்ந்ததில் வியப்பில்லை.

இது போன்ற கண்பயிற்சிகள் கண்ணின் தசைகளுக்கு நல்லதுதான். ஆனால் பார்வையை மேம்படுத்துமா என்பதுதான் இங்கே கேள்வியே? கண்களுக்குப் பயிற்சி கொடுத்து கண்ணாடியைக் கழற்றலாம் என்றும் விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து தங்கி பயிற்சி பெற்று கண்ணாடிக்கு நிரந்தர ‘பை பை’ சொல்லுங்கள் என்றும் சொல்வது போன்ற காணொளிகள் இதற்கு முன்னரும் பகிரப்பட்டிருக்கின்றன. எனவே தற்போதைய காணொளியினையும் பார்த்துவிட்டு கண்ணாடியைக் கழற்ற முடியுமா என்று கேட்கிறார்கள். பார்வை குறைபாட்டுக்கு ( Defective Vision ) கண்ணாடி அணிகிறோம். வசதியானவர்கள் காண்டாக்ட் லென்சு அல்லது லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். மருந்து, மாத்திரை, சொட்டு மருந்து வேறு பயிற்சிகள் எதுவும் பயன் தராது. அது புரிய வேண்டுமென்றால் கண்ணின் அமைப்பைத் தெரிந்து கொள்வது நல்லது.

பார்வைக் குறைபாடு

பார்வைக் குறைபாடு ( Defective vision ) என்பது கண்ணின் உருவ அமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினையால் ஏற்படக்கூடியது. ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணின் கருவிழி, விழிலென்சு வழியாக ஊடுருவி விழித்திரையில் பிம்பம் விழுகிறது. இதற்கு இவை அனைத்தும் இயல்பாக இருக்க வேண்டியது அவசியம். கண்ணின் கருவிழிக்கும் விழித்திரைக்கும் உள்ள தொலைவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பார்வை குறைபாடு ஏற்படலாம். இதனால் பிம்பம் விழித்திரையில் விழாமல் விழித்திரைக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ விழுகிறது. மைனஸ் லென்சு (-) அல்லது பிளஸ் லென்சு ( + ) கொண்டு விழித்திரையில் பிம்பத்தை விழச்செய்து பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது. காய்கறி, கீரை சாப்பிடுவதன் மூலமோ, கண்பயிற்சி செய்வதன்மூலமோ, மருந்து மாத்திரையின் மூலமோ இதனைச் சரி செய்ய முடியாது.

கண்மருத்துவரே பரிந்துரைக்கும் கண்பயிற்சி

சிலருக்கு ஏற்படும் தலைவலிக்குக் குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் கண்வலி, தலைவலி, மாறுகண் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தனிப்பட்ட சில வகை கண்பயிற்சிகளைக் கண்மருத்துவர் செய்யச் சொல்வது உண்டு. பேனா, பென்சிலை வைத்தோ, சில படங்களை வைத்தோ வீட்டில் செய்யச் சொல்வார்கள். இன்னும் சிலருக்கு கண்மருத்துவமனைக்கு வரச் சொல்லி அதற்கென்று உள்ள கருவியில் பயிற்சி தருவார்கள். பிரச்சினைகளுக்கு ஏற்ப இருவாரத்திலிருந்து 4 வாரங்கள் வரை செய்ய வேண்டி வரும்.

பயிற்சி தந்து கண்ணாடியைக் கழற்றிவிட முடியுமா?

முடியும் என்றால் உலகில் யாருமே கண்ணாடி போட்டிருக்க மாட்டார்கள். அம்மாதிரி பயிற்சி பெற்ற எந்தக்குழந்தையும் கண்ணாடியை முழுவதுமாக கழற்றி இருக்க மாட்டார்கள், பெற்றோரைக் கேட்டால் கொஞ்சம்போல குறைந்து வருவதாகப் பயிற்சி மையத்தில் சொல்கிறார்கள் என்ற ரீதியில்தான் சொல்வார்கள். குறைகிறது என்றால் எப்படி? குழந்தைக்கு -4 பவர் இருக்கிறது என்றால் பயிற்சிக்குப் பின் -0.25 அல்லது -0.50 பவர் குறைந்துள்ளதாகச் சொல்வார்கள். இது ஒரு பெரிய விஷயமல்ல. இரண்டு கண்ணிலும் -0.25 பவரைக் குறைத்து -3.75 பவரைக் கொண்டு தனித்தனியாகப் பார்க்காமல் இரண்டு கண்ணையும் ஒருசேரத் திறந்து பார்க்கும்போதுகூட குழந்தையால் கண் பரிசோதனை அட்டையில் கீழ் வரிசை வரையிலும் உள்ள எழுத்துக்களைப் படிக்க முடியும். இதைப் பார்த்துக்கூடப் பயிற்சி மூலம் கண்ணாடி பவர் குறைந்ததாகச் சொல்லலாம். அவ்வளவுதான்.

குழந்தையிடம் கண்ணாடி போடும்படி பக்குவமாகச் சொன்னால் போட்டுக் கொள்ளப் போகிறது. காரணம் பார்வைக்குறைவு உள்ள குழந்தைக்குக் கண்ணாடி போட்டவுடன் பொருட்கள் எல்லாமே தெளிவாகத் தெரியும். இரண்டு மூன்று நாட்களிலேயே கண்ணாடி இல்லாமல் குழந்தையால் நகர முடியாது. அந்த அளவுக்குக் குழந்தைக்குக் கண்ணாடி தேவையான ஒன்றாகிவிடும். கண்ணாடியுடன் ஒன்றியும் போய்விடும். புது உலகத்தைப் பார்ப்பது போல் இருக்கும். தொலைக்காட்சியில் படம் தெளிவாகத் தெரிவதைப் பார்த்து மகிழ்ச்சி அடையும். பள்ளியில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப் போடுவது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாகக் கூறும். பிரச்சினையே பெற்றோரிடம்தான். கண்ணாடி போடவேண்டாம் என்ற கருத்தை அவர்களிடம் புகுத்துவதே பெற்றோர்தானே.

கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in