அறுவைச் சிகிச்சைப் பிரசவங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆம் இடம்

அறுவைச் சிகிச்சைப் பிரசவங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆம் இடம்
Updated on
2 min read

ஒன்றிய அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2019 - 2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, தமிழ்நாட்டில் 44.9 சதவீதப் பிரசவங்கள்அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறுகின்றன. தேசிய அளவில் தெலுங்கானாவுக்கு(60.7 சதவீதம்) அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுகின்றன.

கடந்த 2015 - 2016 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நான்காவது குடும்பநலக் கணக்கெடுப்பில் இது 34.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அறுவைச் சிகிச்சை முறை பிரசவங்கள் 10.8 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 47.5 சதவீதமும் கிராமப்புறங்களில் 42.9 சதவீதமும் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறுகின்றன.

அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறும் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில்தான் அதிகம் நடைபெறுகின்றன. நகர்ப்புறங்களில் 61.5 சதவீத பிரசவங்களும், கிராமப்புறங்களில் 65.7 சதவீத பிரசவங்களும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் நகர்ப்புறங்களில் 37.5 சதவீத பிரசவங்களும், கிராமப்புறங்களில் 35.1 சதவீத பிரசவங்களும் நடைபெறுகின்றன.

காரணங்கள்

பிரசவத்தின் போது ஏற்படுகிற இறப்புகளைக் குறைப்பது, ஐ.வி.எஃப் முறையில் கருத்தரிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அறுவைச் சிகிச்சைப் பிரசவங்கள் அதிகம் நிகழ்கின்றன. மேலும், கர்ப்ப காலச் சர்க்கரை நோய் காரணமாகக் கருவிலேயே குழந்தைகளின் எடை அதிகரிக்கும் சூழலில் அறுவைச் சிகிச்சைப் பிரசவங்களே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இவை தவிர, ஜோதிட முறையில் நாள், நேரம் குறித்து நடத்தப்படும் அறுவைச் சிகிச்சைப் பிரசவங்களும் ஆங்காங்கே இன்றும் நிகழ்கின்றன. இருப்பினும், 44 சதவீதம் அறுவைச் சிகிச்சைப் பிரசவங்கள் என்பது ஒரு எச்சரிக்கையே. 10 – 15 சதவீதம் வரை அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் இருப்பது இயல்பான அளவு என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதிகபட்சம் 20 சதவீதம் வரை இருக்கலாம்.

தணிக்கை

அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் பிரசவத் தணிக்கை நடத்தப்படுகிறது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அறுவைச் சிகிச்சைப் பிரசவங்கள் அதிகரித்தால் அங்கே தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதைப் போன்று தனியார் மருத்துவமனைகளில் தணிக்கை செய்யப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதைப் போன்று தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவத் தணிக்கை முறையாகச் செய்வதும், அதற்குத் தேவையான வழிமுறைகளை வகுப்பதும் அறுவைச் சிகிச்சைப் பிரசவங்கள் அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறிய உதவும்.

தமிழ்நாடு அரசு, மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்ற செவிலித் தாய்(Mid Wife)என்கிற திட்டத்தைப் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ், கர்ப்ப காலம் தொடங்கிப் பிரசவம் முடிந்த பிறகும் வரை தாய்மார்களுக்கு முழுமையான உதவி வழங்கச் செவிலியர்களுக்கு இந்தத் திட்டத்தில்பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்படும்போது, அறுவைச் சிகிச்சை முறை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in