கண்கட்டிக்குச் சுயமருத்துவம் ஆபத்தானதா? - மருத்துவர் விளக்கம்

கண்கட்டிக்குச் சுயமருத்துவம் ஆபத்தானதா? - மருத்துவர் விளக்கம்
Updated on
2 min read

சில ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் இயற்கை மருத்துவர் ஒருவர் கட்டுரை எழுதினார், ‘அருகம்புல் சாறு குடித்தால் கண்நீர் அழுத்த நோய் எனும் கிளாக்கோமா கட்டுப்படும்’ என்று. கண்நீர் அழுத்த உயர்வு நோய் உடனே கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை. அழுத்தத்தைக் குறித்த காலத்தில் உரியச் சிகிச்சை செய்து கட்டுப்படுத்தாவிடில் பார்வை நரம்புகள் ( Optic Nerve ) நசிந்துபோய் விடும். இதன் காரணமாகப் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படும்.

கண்நீர் அழுத்த உயர்வுக்குச் சொட்டு மருந்துகள், லேசர் மருத்துவம், அறுவைச் சிகிச்சை போன்ர வசதிகள் இருக்கின்றன. முன்னரே சொன்னதுபோல் உரிய நேரத்தில் கண்டறிவதுதான் முக்கியம். அதைவிட முக்கியம் தொடர் சிகிச்சை. அழுத்த உயர்வால் ஏற்பட்ட பார்வை இழப்பைத் திரும்பப் பெற இயலாது. இருக்கின்ற பார்வையைத் தக்கவைத்து, மேற்கொண்டு பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க மட்டுமே முடியும்.

சரி அருகம்புல்லுக்கு வருவோம். ஒருவேளை அதைப் படித்துவிட்டு, யாரேனும் கண் மருத்துவரைச் சந்திக்காமல் பார்வை பாதிப்புக்கு உள்ளாயிருந்தால் என்ன செய்ய முடியும்? ஒருவேளை நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்பட்டிருந்தால், வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்கொள்ள வேண்டிய இன்னலுக்கு யார் பொறுப்பேற்க முடியும்?

கண்சிவப்பு ஏன் ஏற்படுகிறது?

சில நாட்களுக்கு முன்னர் ஓர் இணையப் பத்திரிகையில் நலம் தொடர்பான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் கண் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு மருத்துவக் குறிப்புகளைக் கட்டுரையாளர் சொல்கிறார். கண் சிவப்பாக மாறினால், அதைக் குணப்படுத்துவதற்குச் சில இயற்கை வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார். அடிப்படைப் புரிதல் இல்லாமல், கண்சிவப்பைக் குணப்படுத்த கற்றாழையை வைத்துக் கண்ணில் கட்டச் சொல்கிறார்.

கண்சிவப்புக்குப் பல காரணங்கள் உள்ளன. சாதாரண கண்வலியிலிருந்து கிளாக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்த உயர்வு நோய் வரையிலான பலவித கண்நோய்களின் வெளிப்பாடாகவும் அது இருக்கக்கூடும்.

மெட்ராஸ் 'ஐ' எனப்படும் விழிவெளி இழைமைத் தொற்றிலும் கண்சிவப்பு இருக்கும். இந்தத் தொற்றுக்குத் தகுந்த கண்சொட்டு மருந்தினைப் போட்டுக் குணப்படுத்தலாம். மெட்ராஸ் 'ஐ' ஏற்பட்டால், கண்ணை மூடி வைக்கக் கூடாது. மூடி வைத்தால் பிரச்சினை அதிகரித்துவிடும்.

கண்நீர் அழுத்த உயர்விலும் ( கிளாக்கோமா ) கண்சிவப்பு ஏற்படலாம். இதற்கு உடனடியாகத் தகுந்த மருத்துவம் செய்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.

விழியடிக் கரும்படலத் தொற்றிலும் ( Iritis) கண்ணில் சிவப்பு ஏற்படலாம். தகுந்த சிகிச்சை அவசியம். உலர் கண் பிரச்சினையிலும் கண்சிவப்பு ஏற்படலாம். கணினி பார்வை பிரச்சினையிலும் கண்சிவப்பு ஏற்படுவதுண்டு. நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் கண்ணில் ஏற்படும் சிறு காயங்களினாலும் கூட கண்ணில் சிகப்பு ஏற்படலாம்.

ஆக, எல்லாமே கண்சிவப்புதான். ஆனால் இந்த சிவப்பு எதனால் ஏற்பட்டது என்பதை கண்மருத்துவரால் மட்டுமே பரிசோதித்து அதற்கேற்ப மருத்துவம் செய்ய முடியும்.

கண்கட்டி

மேலும் அந்தக் கட்டுரையில் கண்கட்டிக்கும் கட்டுரையாளர் வழி சொல்கிறார். கண்கட்டி சிறுவர்களுக்கு ஏற்படுவதற்குப் பார்வை குறைபாடுகூடக் காரணமாக இருக்கலாம். எனவே பார்வை குறைபாடு இருக்கிறதா என்று பரிசோதித்து, ஒருவேளை இருந்தால் தகுந்த கண்ணாடி அணிய வேண்டும். இதே கண்கட்டி 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டால், அதற்கு நீரிழிவு நோயும் காரணமாக இருக்கலாம். எனவே, நீரிழிவு நோய்க்குப் பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். வெறும் கண்கட்டிதானே என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

கண்ணில் ஏற்படும் சிவப்போ, வேறு எந்தவிதப் பிரச்சினையோ, அவற்றுக்கான காரணத்தைப் பொறுத்துத்தான் தீவிரமான பிரச்சினையா இல்லையா என்பதைச் சொல்லமுடியும். நீங்களாக சுய மருத்துவம் செய்யும்போது சாதாரண கண்சிவப்புகூட பார்வையைக் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது.

கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in