

சில ஆண்டுகளுக்கு முன்பு, ராகுல் ரஸ்தோகியின் தந்தைக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட பின்னர், அவரது இதய நலனை உறுதிப்படுத்துவற்காகத் தொடர்ந்து இசிஜிபரிசோதனையும் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவரை மருத்துவமனைக்குத் திரும்பத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ராகுலும் அவருடைய மனைவியும் நொய்டாவில் வசித்துவந்தனர். அவருடைய தந்தையோ லக்னோவில் வசித்துவந்தார். இந்தச் சூழலில் அவரை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.
அவரைத் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவரை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழல் வேறு. இந்த நிலையில், வீட்டிலிருந்தே அவரைக் கண்காணிக்க முடியாதா எனச் சிந்திக்கத் தொடங்கினர். அதற்குத் தேவைப்படும் வழிமுறைகளை ஆராயத் தொடங்கினர். தந்தையின் இதய நலனை உறுதிப்படுத்த, இசிஜி கருவியே அவர்களின் முதல் தேவையாக இருந்தது. வீட்டிலேயே ரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் கையடக்க் கருவிகளைப் போல, இசிஜி கருவி எதுவும் இருக்காதா என ராகுலின் மனைவி நேகா தேடத் தொடங்கினர். ஆனால், அப்படி எந்த ஒரு கருவியும் பயன்பாட்டில் இல்லை என்பது அவருக்குத் தெரிய வந்தது.
தந்தையின் உடல்நலன் மீதான அக்கறை, அதற்கான தீர்வைக் கண்டறிய அவர்களை உந்தி தள்ளியது. அந்த உந்துதலின் விளைவால் அவர்கள் கண்டறிந்ததே, இன்று பயன்பாட்டில் இருக்கும் கீசெயின் அளவிலான இசிஜி கருவி.
மின்னணுப் பொறியாளர்கள்
நேஹா, ராகுல் ஆகிய இருவரும் அடிப்படையில் மின்னணுப் பொறியாளர்கள். நல்ல வேளை, கைநிறைய சம்பளம் என அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது. இருப்பினும், அந்த வேலையைவிட, மென்பொருள் மேம்பாடு, நுகர்வோர் மின்னணுவியல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடும், ஆர்வமும் கொண்டிருந்தனர். அந்தத் துறையில் நுழைந்து ஏதேனும் சாதிப்பதே அவர்களின் நெடுநாள் லட்சியம்கூட. அந்த லட்சியத்தை அடையும் முயற்சியில், 2010இல் அகட்சா எனும் நிறுவனத்தைத் தொடங்கினர். தொழில்நுட்ப அறிவின் மூலம் சுகாதாரத் துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் அவர்கள் தொடங்கிய நிறுவனம் அது.
இதய நலனைக் கண்காணிக்கும் கருவி
இந்தச் சூழலில்தான், 2013இல் ராகுலின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தந்தையின் உடல்நலக் குறைவும், அதற்குத் தேவைப்பட்ட கண்காணிப்பும், அவர்கள் தங்கள் வேலையை உதறித் தள்ளுவதற்கான ஊக்கியாகச் செயல்பட்டன. நம்பகமான முறையில், வீட்டிலிருந்தே இதய நலனைக் கண்காணிக்கும் கருவியைக் கண்டறியும் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டனர். வெற்றியில் முடிந்த அந்த முயற்சியின் விளைவாக, சங்கத்லைஃப் (SanketLife)எனப்படும் சிறிய இசிஜி கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
கூடுதல் ஆராய்ச்சி, பல சுற்றுச் சோதனைகள் போன்றவற்றுக்குப் பிறகு, 2017இல் அந்த இசிஜிகருவியை அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். அவர்களின் கண்டுபிடிப்புக்கு இந்தியத் தர நிர்ணய அமைப்பு, மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் அங்கீகாரமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
உலகின் ஒரே வயர்லெஸ் இசிஜி கருவி
இன்றைய தேதியில் இதுவே, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் முழுமையான இதய நோயறிதலை வழங்கக்கூடிய உலகின் ஒரே வயர்லெஸ் இசிஜிகருவி. பயனர்களின் இதய ஆரோக்கியத்தைத்தொடுவதன் அடிப்படையில் அது கண்டறியும். கீசெயின் அளவிலான இந்தக் கருவி திறன்பேசியுடன் (Smartphone) இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும், இந்தக் கருவி ஓர் அறிக்கையை திறன்பேசியில் பதிவுசெய்யும். சங்கத்லைஃப்வயர்லெஸ் இசிஜிகருவி, தனது தனிப்பட்ட சென்சார் தொழில்நுட்பத்தின் மூலம், மருத்துவமனையில் உள்ளதைப் போலவே பயனர்களின் இதய ஆரோக்கியத்தை முழுமையாகக் கண்காணிக்க உதவுகிறது.
முழுமையான கண்டுபிடிப்பு
இதயத்தின் துடிப்பை மட்டுமே கண்காணிக்கும் மற்ற ஈசிஜி ‘சிங்கிள்-லீட்’ சாதனங்களைப் போலல்லாமல், இந்தக் கருவியால் இதய ஆரோக்கியம் தொடர்பான பல முக்கியக் கூறுகளைத் திறமையாகக் கண்டறிய முடியும். உதாரணமாகசாதாரண மார்பு வலி, மாரடைப்பு வலி ஆகியவற்றைத் திறம்பட வேறுபடுத்திக் காட்டும் திறன் இதற்கு உண்டு. முக்கியமாக, அதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் திறன்பேசி மூலம் பயனர்களுக்கு எச்சரிக்கையும் வழங்கும் திறனையும் அது கொண்டு உள்ளது.
எளிதானது, நம்பகமானது
பொதுவாக, இசிஜிபரிசோதனைகள் நோயாளியின் கைகளிலும் கால்களிலும் மார்பிலும் குறைந்தபட்சம் ஒரு நிமிடம் மின்முனைகளை இணைப்பதன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தக் கருவிவேறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, மின்முனைகள், கம்பிகள் அல்லது பயிற்சிபெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல் இசிஜிபரிசோதனையை நடத்த முடியும். இந்தக் கருவியின் இரண்டு சென்சார்களை நோயாளி தனது கட்டைவிரலால் அழுத்திப் பிடித்திருப்பது மட்டுமே இதற்குப் போதும்.
இறுதியில், மின் சமிக்ஞைகளையும் இதய ஒலிகளையும் கண்டறிந்து பதிவுசெய்யும் இந்த இசிஜி கருவி, அந்தத் தரவுகளைப் பயனர்களின் திறன்பேசிக்கு அனுப்பிவைக்கிறது. அந்தத் தரவுகளின் மூலம், அகாட்சாவின் செயலி முழுமையான இசிஜி அறிக்கையைத் தயார் செய்கிறது. அந்த அறிக்கையைப் பயனர்கள், மருத்துவரிடமோ நெருக்கமான குடும்ப உறுப்பினர்களிடமோ பகிர்ந்துகொள்ளலாம்.
தனிநபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டில் இருக்கும் இந்தக் கருவியை மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களும் பயன்படுத்தத் தொடங்கும்போது இந்தக் கருவியின் பலன் முழுமையடையும்.