குழந்தைகளிடம் காது கொடுங்கள்

குழந்தைகளிடம் காது கொடுங்கள்
Updated on
1 min read

குழந்தைகள் தேர்விலோ நேர்காணலிலோ அவர்களைப் பெற்றோர்கள் திட்டியும் தாழ்மைப்படுத்தியும் பேசுவது பெரும்பாலும் எல்லா வீட்டிலும் நடப்பதுண்டு. நாங்கள் உனக்காகப் பணம் செலவழித்துப் படிக்கவைப்பது எனத் தொடங்கி ஒரு பட்டியலை அவர்கள் முன் விரித்துக் காட்டுவார்கள்.

உண்மையில் குழந்தைகளின் தோல்விக்கு, நிலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்ல பெற்றோராக இருக்க முதலில் குழந்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சில யோசனைகளைப் பார்ப்போம்.

குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்குவதை ஒரு கடமையாக எல்லாப் பெற்றோரும் கருதுவதுண்டு. இதனால் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் அவர்களுக்கு அறிவுறை வழங்குவதுண்டு. குழந்தைகளுக்குப் பிடிக்காததும் அறிவுரைகள்தாம். அறிவுரை சொல்வதற்கு முன் குழந்தைகளிடம் காது கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல ஏதாவது இருக்கும். அதைக் கேட்டுவிட்டு அதற்குப் பிறகு உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனை சொல்லுங்கள்.

குழந்தைகளைப் பேச அனுமதிக்க வேண்டும். அவர்கள் பேச வேண்டிய இடங்களில் நாம் பேசக் கூடாது. உறவினர்களோ நண்பர்களோ குழந்தையை நோக்கிக் கேட்கும் கேள்விக்கு அவர்களே பதில் சொல்ல அனுமதியுங்கள். குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதைப் பற்றிய கேள்விகளுக்கு நீங்களே முன் தீர்மானமாகப் பதிலளிக்காதீர்கள்.

குழந்தைகளிடம் கேள்வி கேளுங்கள். அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளிக்க முயலுங்கள். புத்தம் புதிய கேள்விகள் அவர்களின் சிந்தனையை வளப்படுத்தும். அவர்களது உணர்வுகளைப் புரிந்து, அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். குழந்தைகள் நிராகரிக்கப்படும்போது அந்த உணர்வுகளை உள்ளுக்குள்ளே புதைத்துவிடுவார்கள். அது அழுத்தமாகி வெளிப்படும்போது வன்மாக இருக்கும்.

வாழ்க்கைக்குத் தேவையான அவசியங்களையும் அத்தியாவசியங்களையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்களை நாளைத் திட்டமிட உறுதுணையாக இருங்கள். மேலும் குழந்தைகளை எதற்கும் நிர்ப்பந்திக்கக் கூடாது. நாம் சொன்னால் அவர்கள் செய்ய வேண்டும். அது அவர்களது கடமை என நினைக்கக் கூடாது. அவர்களுக்கு அந்தச் சூழலைப் புரியவைக்க முயலுங்கள். உங்கள் கனவுகளை அவர்களைக் கொண்டு நிறைவேற்ற நினைக்காதீர்கள்.

அவர்களை மரியாதையாக நடத்துங்கள். குழந்தைகள் என அவர்களை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் இருக்காதீர். உறவினர்கள் வந்தால் அவர்களை அறிமுகப்படுத்துங்கள். வீட்டு விஷயங்களை அவர்களை முன்னிலைப்படுத்துங்கள். அவர்களிடம் முக்கியமான தீர்மானம் எடுக்கும் முன் கருத்துக் கேளுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in