

இரண்டாவது அலையில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் சீனிவாசனும் ஒருவர். 70 வயதான சீனிவாசனின் குடும்பத்தில் அவரைத் தவிர மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். ‘அது வெறும் தண்ணீர்’ என்று சீனிவாசன் மட்டும் போட்டுக்கொள்ளவில்லை. யார் யாரோ சொல்லிப் பார்த்தும் பலனில்லை. இத்துணைக்கும் அவர், அரசுத் துறையில் உயர் பொறுப்பில் பணி செய்து ஓய்வு பெற்றவர். சர்க்கரையும் 500க்கு மேல். உணவுக் கட்டுப்பாடும் இல்லை. சரியான மருத்துவமும் கிடையாது. வெளியில் சென்றால் முகக்கவசமும் போடுவதில்லை. ஏற்கனவே சர்க்கரை நோயாளி. இதில் பாதுகாப்பு வழிமுறைகளையும் சரிவரப் பின்பற்றுவதில்லை என்பதால் தொற்று எளிதில் தொற்றிக் கொண்டது.
ஒரு வாரத்தில் நிலைமை மோசமடைந்தது. மருத்துவமனைக்குச் சென்றால் கரோனா நோயாளியாக ஆகிவிடுவோமோ என்று பயந்து செல்லவில்லை. ஆனால் டெஸ்ட் பார்த்ததில் ‘பாஸிட்டிவ்’ என்று வந்ததும் கொஞ்சம் பயந்தார். மறுநாள் இரவு ஆக்சிஜன் படுக்கை தேவைப்படும் நோயாளியாக அவர் மாறியபோது மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் இடமில்லை. அரசு மருத்துவமனையிலும் ஏமாற்றமே. எப்படியோ 24 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இடம் கிடைத்துச் சேர்ந்தாலும் மிகத்தாமதமான நிலையில், பக்க விளைவுகள் கடுமையாகி விட்டதால் இறுதிக்கட்ட போராட்டம் பலன் தராமல் போய்விட்டது. ‘தடுப்பூசி போட்டிருந்தாலாவது காப்பாற்றி இருக்கலாமே. அதற்கும் வாய்ப்பு கொடுக்காமல் போய்விட்டாரே’ என்று வீட்டார் இனி வருந்தி என்ன பயன்?
கரோனாவை தனபாக்கியக்கியம் எதிர்கொண்டவிதம்
சிற்றூரில் வசித்து வரும் தனபாக்கியத்துக்கு ஒருவாரமாகக் காய்ச்சல். டெஸ்ட்டில் கரோனா ‘பாஸிட்டிவ்’ என்று உறுதி செய்யப்பட்டது. ஆக்சிஜன் படுக்கை உள்ள மருத்துவமனையில் உடனே சேருங்கள் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அதிகமான நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் தேவை இருந்ததால் அந்த சமயத்தில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு. மருத்துவமனையில் படுக்கை கிடைக்கும்வரையில் மருத்துவமனைகளுக்கு வெளியிலேயே ஆம்புலன்ஸ் ஊர்தியிலேயே நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுக் காத்திருந்த காலம் அது.
தனபாக்கியத்துக்கும் அந்த நிலைதான். வீட்டார் ஆக்சிஜன் படுக்கைக்காக அலைந்தார்கள். அங்கும் இங்கும் ஓடினார்கள். ஒருநொடி கூட வீணாக்கவில்லை. எங்கெங்கோ அலைந்து, யார் யாரிடமோ பேசி எப்படியோ மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்கள். உரிய நேரத்தில் சிகிச்சை செய்ததன் விளைவு தனபாக்கியம் இன்று நலமாக இருக்கிறார்.
சாதாரணப் பிரச்சினைகூட சில நேரங்களில் கடுமையாகிவிடுகிறது. சீனிவாசன் போன்றவர்களின் அலட்சியப்போக்கினால் உயிரிழப்பிலும் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. கரோனா காலத்தில் சீனிவாசன் போன்று உயிரிழந்தவர்களையும் பார்த்தோம். தனபாக்கியம் போன்று உயிர்பிழைத்தவர்களையும் பார்த்திருக்கிறோம். இரண்டிலுமே, அது அது அவரவர்களின் தலை எழுத்து, என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது.
சிற்றூரில் வசிக்கும் தனபாக்கியத்துக்கு இருந்த விழிப்புணர்வு நாகரீக நகரத்தில் வசித்த , படித்த சீனிவாசன் போன்றோர்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது? இன்னும் கரோனா ஒரு முடிவுக்கு வரவில்லை. அண்மையில் சென்னையில் இரண்டு கல்லூரியில், மாணவர்களில் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அரசு உடனே நடவடிக்கை எடுத்துக் கட்டுப்படுத்திய செய்தியை ஊடகங்களில் பார்த்திருப்போம். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர், மாணவர்கள் பெருமளவில் தடுப்பூசி போட்டிருந்ததால்தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்படாமல் விரைவில் கட்டுப்படுத்த முடிந்தது என்று சொன்னதைக் கவனிக்க வேண்டும்.
அரசும் மெகா தடுப்பூசி முகாம்களைத் தொடர்ந்து நடத்தி பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தி வருகிறது. இருந்தாலும் இன்னும் சிலர் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலேயே தொற்று நன்றாகக் கட்டுக்குள் இருக்கிறது .
தமிழகத்தில் 93.55 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 81.55 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தவணை போடாமல் இருக்கும் சுமார் 2 கோடி பேர் செலுத்திக் கொள்ள வசதியாக ஜூன் 12 – ல் மாநிலம் முழுவதும் 1 இலட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் கரோனா தொற்றிற்கு எதிராகப் பாதுகாக்கப்படுகிறார்களாம். அண்மையில் விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுதான் இது. கரோனா ஏற்பட்டு, தொடர்ந்து மூன்றாவது ஆண்டிலும் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நம்முடைய அன்றாட பணிகளில் மறந்துவிட்டோம். வரலாற்றிலேயே ஒரு நோய்க்கு எதிரான நீண்ட போராட்டம் இதுவாகத்தான் இருக்கும். பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டுக் கொண்டு பாதுகாப்பு பெறுவதும்தான் இப்போதைக்கு மட்டுமல்லாமல் எப்போதைக்கும் சிறந்த வழி.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com