

பொதுவாக, லேப்ராஸ்கோபிக் அல்லது திறந்த அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகள் மருத்துவமனையில் 7 -14 நாட்கள் தங்க நேரிடும். அதன் காரணமாகச் செலவும் அதிகரிக்கும். ஆனால், இந்த ரோபோடிக் உதவியுடன் நடைபெறும் அறுவைச் சிகிச்சையில், நோயாளி குறுகிய காலமே மருத்துவமனையில் தங்கி இருந்தால் போதும். அதனால் சிகிச்சைக்கு ஆகும் செலவு வெகுவாகக் குறையும்.
தமிழ்நாடு அரசின் பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனையில், டாவின்சி ரோபோடிக் உதவி அறுவைச் சிகிச்சை அமைப்பும், மேம்பட்ட ரோபோடிக் அறுவைச் சிகிச்சை மையமும் கடந்த மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அந்த மையத்தில் ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையே, இந்திய அளவில் அரசு மருத்துவமனைகளில் ரோபோடிக் உதவியுடன் நடைபெற்ற முதல் அறுவைச் சிகிச்சை.
கடந்த மாதம், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 44 வயது தொழிலாளி, இரத்தம் படிந்த சிறுநீர் கழித்தல், இடது தொடை வரை பரவும் இடது பக்க வயிற்று வலி, பசியின்மை போன்ற பிரச்சினைகளுடன் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனையின் சிறுநீரக வெளிநோயாளி பிரிவுக்கு வந்தார். யூரிடெரோஸ்கோபி, பயாப்ஸி உள்ளிட்ட பரிசோதனைகள் அவருக்கு இடது சிறுநீரக அடைப்பு, இரத்த சோகை, சிறுநீர்ப்பைப் புற்றுநோய் ஆகிய பாதிப்புகள் இருப்பதை உறுதிசெய்தன.
அந்த நபருக்கு உடனடியாக ரோபோடிக் உதவியுடன் அறுவைச் சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டது. முன்னணி சிறுநீரக மருத்துவர்களான டாக்டர் ஆர்.ஜெயகணேஷ், டாக்டர் என்.ராகவன் (புரொக்டர் அறுவைச் சிகிச்சை நிபுணர்), டாக்டர் எல்.பார்த்தசாரதி (தலைமை மயக்க மருந்து நிபுணர்) ஆகியோர் தலைமையில் அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சை டாவின்சி ஆர்ஏஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரோபோடிக் உதவியுடன் செய்யப்பட்டது.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி குறிப்பிடத்தக்க வகையில் விரைவாகக் குணமடைந்தார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி, நல் ஆரோக்கியத்துடன் நடக்கிற சூழ்நிலையிலிருந்தார். வலி நிவாரண ஊசியோ நீண்ட படுக்கை ஓய்வோ அவருக்குத் தேவைப்படவில்லை. சாதாரண உணவு, திரவ உட்கொள்ளலில் இருப்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய இரண்டாவது நாளில் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டுக்கும் அனுப்பிவைக்கப்பட்டார்.