உலக தைராய்டு நாள்: தைராய்டு நம் உடல்நலனைக் காக்கும் கேடயம்

உலக தைராய்டு நாள்: தைராய்டு நம் உடல்நலனைக் காக்கும் கேடயம்
Updated on
3 min read

கழுத்தின் முன்பகுதியில் இருக்கும் 15 முதல் 20 கிராம் எடையுள்ள தைராய்டு சுரப்பியே உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க உதவுகிறது. தைராய்டு குறைந்தாலும், அதிகமானாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். தைராய்டு குறைபாட்டால் விளையும் பாதிப்பு, இந்திய அளவில் இன்றைக்குப் பெரிதும் அதிகரித்துவருகிறது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில், சராசரியாக 10-ல் ஒருவர் ஹைபோ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இது 18 முதல் 35 வயதுவரை உள்ள பெண்களிடம் மும்மடங்காகப் பெருகிக் காணப்படுகிறது.

தைராய்டு சுரப்பி

தைராய்டு சுரப்பி என்பது நமது கழுத்துப் பகுதியில், வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் உள்ள எண்டோகிரைன் சுரப்பி. அதிலிருந்து சுரக்கும் ஹார்மோனே நமது உடலின் வளர்சிதை மாற்றம், இதயம், நரம்பு மண்டலம், மூளை வளர்ச்சி போன்றவற்றின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலின் மிக முக்கியமான இந்த சுரப்பியில் ஏதாவது மாற்றம் தெரிந்தால், அதை அலட்சியம் செய்யக்கூடாது. உடலின் செல்கள், தசைகளைத் தற்காக்கும் முறையில் ஏற்படக்கூடிய அழுத்தத்தால் தைராய்டு சுரப்பியில் கோளாறு ஏற்படக்கூடும். தைராய்டு குறைவாகச் சுரந்தால் அதை ஹைபோ தைராய்டிசம் (hypo thyroidism) என்றும், அதிகமாகச் சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism) என்று கூறப்படுகிறது.

அறிகுறிகள்

  • உடல்பருமன்
  • சோம்பல், உடல் தளர்ச்சி, உடல் அயர்ச்சி
  • தலைவலி
  • அடிக்கடி தூங்கிக் கொண்டே இருத்தல்
  • ஞாபக மறதி, மூளை செயல்பாடு குறைதல்
  • நடையில் தள்ளாட்டம்
  • கை, கால் மதமதப்பு, எரிச்சல்
  • மனச்சோர்வு
  • குளிர் தாங்கும் தன்மை குறைதல்
  • உலர்ந்த தடிமனான தோல்
  • வியர்க்கும் தன்மை குறைதல்
  • முடி உதிர்தல், முடி வளரும் வேகம் குறைதல்

மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், மருத்துவரை அணுகி தைராய்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.டி3, டி4, டி.எஸ்.எச்., சோதனைகள் மூலம் சுலபமாக தைராய்டு குறைநிலையை அறிந்து கொள்ளலாம்.

ஆபத்துகள்

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், தங்களுக்கு ஹைபோ தைராய்டு இருப்பதே தெரியாமலும், மற்றவர்கள் அதை வேறு நோய்களுக்கான அறிகுறிகளுடன் குழப்பிக்கொண்டும், ஹைபோ தைராய்டிசத்துக்கான சிகிச்சையை முறையாக, சரியான காலத்தில் எடுக்காமல் இருக்கிறார்கள்.

தொடக்க நிலையிலேயே தைராய்டுக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டால், அந்த நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும். இல்லையென்றால் அதிக அளவில் கொழுப்பு (cholesterol), ரத்த அழுத்தம் (blood pressure), இதயக் கோளாறு (cardiovascular complications), நுரையீரலைச் சுற்றி நீர் அடைதல், குறட்டை விடுதல், மலச்சிக்கல், உணவு செரிக்கும் தன்மை குறைதல், கால்சியம் சத்துக் குறைபாடு, எலும்பு அடர்த்தி குறைபாடு, மாதவிடாய் கோளாறு, ரத்தசோகை, மலட்டுத்தன்மை (decreased fertility), மன அழுத்தம் (depression) போன்ற பிரச்சினைகள் வரக்கூடிய சாத்தியம் அதிகம்.

30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான கர்ப்பிணிப் பெண்கள், தைராய்டு தாக்குதலுக்கு ஆளாக அதிக சாத்தியம் உள்ளது. இதன் விளைவாக அவர்களிடையே ரத்தசோகை (anemia), கருச்சிதைவு (miscarriages), குறைப் பிரசவம், பிரசவத்துக்குப்பின் அதிக அளவில் ரத்தப்போக்கு (postpartum bleeding), இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (pre eclampsia), நச்சுக்கொடி அசாதாரண நிலை (placental abnormalities) போன்றவை உண்டாகும் சாத்தியம் அதிகம்.

குழந்தைகளையும் பாதிக்கும்

கருவில் இருக்கும் குழந்தையின் மூளை, நரம்பு மண்டல வளர்ச்சிக்கு, தைராய்டு சுரப்பி சரியான அளவில் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். சில குழந்தைகள் பிறப்பிலேயே, பிறவி ஹைபோ தைராய்டிசத்தால் (congenital hypothyroidism), அதாவது தைராய்டு சுரப்பி இல்லாமலும், வளர்ச்சி பெறாமலும், அல்லது தைராய்டு சுரப்பதில் குறைபாடுடனும் இருக்கலாம். பிறந்த சில நாட்களிலேயே சரியான முறையில் இதைக் கண்டறிந்துவிடலாம். அதற்கு முறையான சிகிச்சையான தைராய்டு சுரப்பி துணைமருந்துகளை (thyroid hormone supplementation) மருந்துகளைக் கொடுத்தால், அவர்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

அதிகமாக தைராய்டு சுரப்பதால் ஏற்படக்கூடிய கிரேவ்ஸ் நோய் (Graves disease), ஹஷிமோட்டோ தைராய்டிடிஸ் (Hashimoto's thyroiditis), தைராய்டு முடிச்சுகள் (Thyroid nodules), தைராய்டு புற்றுநோய் (Thyroid cancer) போன்றவையும் தைராய்டு கோளாறினால் ஏற்படக்கூடிய நோய்களே.

தைராய்டு கழலைநோய்

கழுத்தின் முன்பகுதியில் கட்டி போன்று எச்சில் விழுங்கும் போது மேலும் கீழுமாகச் சென்று வந்தால், அது தைராய்டு கழலை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அயோடின் சத்து குறைவு, தைராய்டு குறைவு, தைராய்டு மிகைநிலை, தைராய்டு புற்றுநோய், தைராய்டு சுரப்பி தொற்றுநோய் காரணமாக இருக்கலாம்.

அயோடின்

நாம் உண்ணும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஏற்படலாம். மலை சார்ந்த இடம் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள மண்ணில் அயோடின் குறைந்தளவே இருக்கும். இப்பகுதியில் தைராய்டு குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

என்ன செய்ய வேண்டும்?

  • முள்ளங்கி, முட்டைகோஸ் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • அயோடின் கலந்த உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
  • மருத்துவரின் ஆலோசனைப் படி தைராக்சின் மாத்திரைகளைக் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
  • காலையில் மறந்து விட்டால் மதியமோ, இரவோ உணவு உட்கொள்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
  • தைராக்சின் மாத்திரை சாப்பிடும்போது இரும்புச்சத்து, வயிற்றுப் புண்ணுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டாசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு நாள் ஒரு மாத்திரை எடுக்க மறந்து விட்டால், அடுத்தநாள் இரண்டு மாத்திரை போடலாம்.

கவனிக்க வேண்டியவை

தைராய்டு பரிசோதனையை வெறும் வயிற்றில் எடுக்க வேண்டியதில்லை. எந்தநேரமும் செய்யலாம். இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய்ப் பாதிப்பாலும் தைராய்டு ஹார்மோன் அளவில் சிறிதளவு மாற்றம் ஏற்படலாம். எனவே மருத்துவர் ஆலோசனைப்படி தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் தினமும் எத்தனை தைராக்சின் மாத்திரைகளை எந்த அளவில் உட்கொள்கிறீர்கள் என்பதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மற்ற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளும், தைராய்டு பரிசோதனையில் மாற்றம் ஏற்படுத்தும். எனவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் அனைத்து மாத்திரைகளையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தைராய்டு சுரப்பி நம் உடலைக் காக்கும் கேடயம். எனவே, அதில் ஏதேனும் குறைநிலை ஏற்பட்டால், அதனை முழுமையாக அறிந்து, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதுவே உடல்நலத்தையும் மனநலத்தையும் காக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in