

உடல் பருமன், இன்றைக்கு அதிகரித்துவரும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பின் கூற்றின்படி 13 சதவீதம்பேர் உலக அளவில் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நவீன வாழ்க்கை முறை இதற்கு முக்கியமான காரணம். உட்கார்ந்தே பார்க்கும் வேலை, உடல் உழைப்பு இல்லாமை, நொறுக்குத் தீனிக் கலாச்சாரம் போன்ற இவை எல்லாம் உடல் பருமனுக்கு முக்கியமான காரணிகள்.
இந்த உடல் பருமனை நம்மில் பலரும் ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் பிரச்சினை முற்றி ஏதாவது நோயில் கொண்டு நம்மை இந்த உடல் பருமன் தள்ளிவிட்டுவிடும். ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, மூட்டு வலி, முதுகு வலி, மார்பகப் புற்றுநோய், பித்தப்பைக் கற்கள், மலட்டுத்தன்மை, குடலிறக்கம் போன்ற பல நோய்கள் இதனால் வரக்கூடும். உடல் பருமனைப் போக்க பல வகையான அறுவைச் சிகிச்சைகளும் இப்போது செய்யப்படுகின்றன. ஆனால், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், உடல் பருமன் பிரச்சினையைப் போக்க எளிய சித்த மருத்துவ முறைகளைப் பரிந்துரைக்கிறது.
சித்த மருத்துவ முறைகள்
2 கிராம் கடுக்காய்ப் பொடியை 60 மில்லி வெந்நீரில் சுமார் 30 நிமிடம் ஊறவைத்துக் காலையில் உட்கொள்ளலாம்.
2-5 கிராம் கொள்ளு விதைக்கு 200 மில்லி நீர் சேர்த்து அதைக் குறுக்கி 50 மில்லி அளவு எடுத்துப் பருகலாம்.
5 மில்லி தேனை 30 மில்லி நீரில் சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் பருகி வரலாம்.
2 மில்லி பூண்டுச் சாறை எடுத்து அதில் 4 மில்லி தேன் சேர்த்து உட்கொண்டு வரலாம்.
100 மில்லி கரும்புச் சாறுடன் சிறிது இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகி வரலாம்.
15 கிராம் நீர் முள்ளிப் பொடியுடன் 200 மில்லி நீர் சேர்த்து அதை 50 மில்லியாகக் குறுக்கித் தினமும் 2 வேளை பருகலாம்.
ஊறவைத்த அவலைக் காலையில் இரவிலும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவு சமைத்துச் சாப்பிட உடல் எடை குறையும்.
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துக் கடைந்து சாப்பிட்டால் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.
காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கித் தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.